For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள்-இட ஒதுக்கீட்டால் ஏற்பட்ட புரட்சி!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் கல்வியில் சேர விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் மாணவர்களில், 78,086 பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற உள்ளவர்கள் ஆவர்.

இதில் மாணவர்கள் 49,143 பேர், மாணவிகள் 28,943 பேர். பி.இ. கல்வியில் சேர விண்ணப்பித்தவர்களில், இவர்களது எண்ணிக்கை விகிதம் 47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அதே போல எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி உள்ளதாக ஏற்கப்பட்டுள்ள சுமார் 17,000 விண்ணப்பங்களில், 6,440 மாணவ- மாணவிகள் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற உள்ளவர்கள்.

கல்விக் கட்டணம் இல்லை:

இத்தகைய முதல் தலைமுறை பட்டதாரியாகும் மாணவர்களுக்கு, தமிழக அரசு கல்விக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பி.இ. அல்லது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தால் அவர்கள் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

முன்பெல்லாம் பணக்காரர்கள், படித்த குடும்பத்தினர் தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை மாறி, இப்போது விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகப் போகிறவர்கள் என்ற மிகச் சிறந்த நிலை உருவாகியுள்ளது.

பட்டம் பயிலாத படிக்காத, பிற்படுத்தப்பட், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர் குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு புதிய வாழ்க்கை கதவை திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 5ல் பி.இ. பொதுப் பிரிவு கவுன்சலிங்:

இந் நிலையில் பி.இ. படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இது ஒரு மாதம் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் நேற்று வெளியிடப்பட்டன.

பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18ம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாகவே முதலாண்டு பி.இ. வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் தரமான பொறியியல் கல்லூரிகளை மாணவர்களே தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் www.tndte.com என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.

அதில் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் போன்ற தகவல்கள் இடம் பெறவுள்ளன.

அவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்:

இதற்கிடையே எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவ-மாணவியரைச் சேர்க்க சென்னையில் வரும் 28ம் தேதி முதல் கட்ட கவுன்சலிங் தொடங்குகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜூலை 2ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறும். இரண்டாம் கட்ட கவுன்சலிங்கை ஜூலை 3வது வாரம் நடத்தப்படவுள்ளது.

ரேங்க் பட்டியல் அடிப்படையில் கவுன்சலிங் அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.orgல் வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சலிங்கில் கலந்து கொள்ள கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்காவிட்டாலும்கூட, கவுன்சலிங் அட்டவணைப்படி கட்-ஆஃப் மதிப்பெண் உள்ள மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

மருத்துவக் கல்லூரி ஆண்டுக் கட்டணம் ரூ.10,495 மற்றும் கவுன்சலிங் கட்டணம் ரூ.500க்கு ''The Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10"" என்ற பெயருக்கு இரு டி.டி.க்களை கவுன்சலிங் வரும்போது எடுத்து வர வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X