For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதிவாரி கணக்கெடுப்பு: ப.சிதம்பரம் துணிந்து முடிவெடுக்க வேண்டும்-ராமதாஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Ramdoss
சென்னை: சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க இப்போது நடக்கும் சென்ஸஸில் சாதிவாரியான கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகிறது. ஆனால், இதை சில மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். பாஜகவும் மறைமுகமாக எதிர்க்கிறது.

இந் நிலையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்தும், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அப்போது நீதிபதிகள் கேட்ட பிரதான கேள்வி என்பது, 1931ம் ஆண்டு கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்டப்பட்ட மக்கள் தொகை குறித்த சரியான புள்ளி விவரம் எதுவும் உள்ளதா? என்பதே.

ஆக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முழுமையான இடஒதுக்கீடு கிடைக்க, அவர்களின் எண்ணிக்கையை அறிவது மிக அவசியம். இதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் நடத்தப்பட வேண்டும்.

நான் யார் என்றால் தமிழன் என்று சொல்லுங்கள்' என்று சொல்லிச் சென்ற மறைந்த சி.பா.ஆதித்தனார், அந்த குழுமம் நடத்துகின்ற பத்திரிகையை தவிர மற்ற பத்திரிகை ஊடகங்கள் எல்லாம் சாதிவாரியான இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானவை.

100 லட்டுகளை இந்தியா முழுவதும் உள்ள 1,008 சாதிகளுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 100 வருடங்களாக அம்பேத்கார், பெரியார் ஆகியோர் போராடியபோது, 100 லட்டுக்களில் 97 லட்டுக்களை நானே சாப்பிடுவேன்' என்று 'அந்த 3 பேர்' அடம் பிடித்தனர்.

இப்போது 'அந்த 3 பேரை' எதிர்த்து சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் போராட வேண்டியது உள்ளது.

உயர் கல்வியில் உங்களுக்கு ஏன் படிப்பு?. ஓ.பி.சி. என்று சொல்லாதே... இது சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று 100 வருடங்களாக சொல்லுகிறார்கள்.

1919ம் ஆண்டு வெள்ளைக்காரர்கள் லண்டனுக்கு வாருங்கள், அங்கு பேசலாம் என்று அழைத்தார்கள். அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள ராமசாமி முதலியார், டாக்டர் பி.என்.நாயர் ஆகியோர் சென்றனர். இவர்கள் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக முறையிட்டனர். இவர்களின் பேச்சை கேட்ட வெள்ளைக்காரன் 100 லட்டை எல்லோருக்கும் பிரித்து கொடுக்கச் சொல்லும் இவர்களின் பேச்சு நியாயம்தான் என்று ஒத்துக் கொண்டான்.

இதன் பின்புதான் வகுப்புவாத பிரதிநிதித்துவம் வந்தது. 80 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் இந்தியாவில் சாதிகள் இருக்கும் வரை அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இன்று சாதிகள் எங்காவது மறைந்துள்ளதா?.

டாக்டர் ராமதாஸ், ரயில் பெட்டியில் கூட இடஒதுக்கீடு கேட்பார். கிரிக்கெட் விளையாட்டிலும் இடஒதுக்கீடு கேட்பார்' என்று இன்றும் எழுதுகிறார்கள்.

வகுப்புவாரி உரிமை என்பது மக்கள் தொகைக்கு ஏற்ப அமைந்த விகிதாச்சார முறையே என்பதை தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

2008ம் ஆண்டு சுப்ரீம் கோட்டில் பாமக சார்பில் நான் வழக்குப் போட்டேன். மத்திய அரசிடம் முறையிடுங்கள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, 174 எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து போய், உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீலிடம் கொடுத்தார்.

ஆனால், இதை சிவராஜ் பட்டீல் குப்பை தொட்டியில் தூக்கிப் போட்டுவிட்டார். 2008-2010ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி எல்.பி.தர்மாராவ், இரண்டு வழக்குகளில் தீர்ப்பு கூறியுள்ளார்.

அந்த தீர்ப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை கால நிர்ணயத்தோடு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லையே!.

இந்தியாவின் மக்கள் தொகை இன்று 115 கோடியைத் தாண்டிவிட்டது. இதில் 70 முதல் 80 சதவீதம் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் தான். அடுத்தது தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள்.

மிச்சம் தான் 5 சதவீதம், 10 சதவீதம் உள்ள முன்னேறிய ஆதிக்க சாதிகள். இந்த 10 சதவீத மக்கள் 97 லட்டுக்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?.

வகுப்புரிமை கேட்பது தவறல்ல, வகுப்பின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், இல்லையெனில் அந்த வகுப்பை அவமதிப்பது போல் ஆகும் என்றார் பெரியார். ன்று பெரியார் இருந்திருந்தால் நமக்கு வேலையே இல்லை. பெரியார் சொன்ன அந்த கொள்கைக்காகத்தான் நாம் இன்று போராடி வருகிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பால் மக்களிடையே பிளவு ஏற்படும் என்று எதிர் பிரசாரம் செய்யப்படுகிறது. நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிவது, எவ்வாறு பிளவை ஏற்படுத்தும்? என்று தெரியவில்லை.

இந்த விஷயத்தி்ல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருணை காட்ட வேண்டும். நீங்கள் பிறந்த தமிழ் மண், சமூக நீதியின் பிறப்பிடம். சாதிவாரி கணக்கெடுக்கும் பொறுப்பில் உள்ள ப.சிதம்பரம் இதை செயல்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பில் காங்கிரஸ் துணிந்து ஒரு முடிவெடுக்க வேண்டும்.

70 முதல் 80 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு துணிந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கிறோம் என்று சொன்னார். ஆனால் இதில் முடிவெடுப்பதற்கு பதிலாக ஒரு அமைச்சர் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். இது தேவையில்லாத ஒன்று.

அந்தக் குழு சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை உடனடியாக அறிவிக் கவேண்டும். ப.சிதம்பரம் துணிந்து முடிவெடுத்து வரலாற்றில் இடம் பெறவேண்டும் என்றார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X