For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜய்காந்த் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும்: தா.பாண்டியன்

By Chakra
Google Oneindia Tamil News

Tha Pandian
திருச்சி: தேமுதிக தலைவர் விஜய்காந்த் விரைவில் நிரந்தரமாக அதிமுக அணிக்கு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய பாண்டியன் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகள் மீது எப்போது மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்களோ, அப்போது வன்முறை வெடிக்கும். வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி வளர்ந்ததற்கு இதுதான் மூலகாணம். எனவே அவர்களின் லட்சியம் என்ன என்பதை மத்திய-மாநில அரசுகள் ஆலோசித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்முறையில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கலாம் என்று யோசனைகள் கூறப்படுகின்றன. இதைவிட வெட்கக்கேடான விஷயம் எதுவும் இருக்க முடியாது. உலகிலேயே 6வது பெரிய ராணுவத்தை கொண்ட நமது நாட்டில் இதுபோன்ற கருத்துக்கள் அபத்தமானவை.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு, உலக சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட்டது என்ற காரணத்தை அடிக்கடி கூறிவருவது ஏற்க முடியாது.

நமது நாட்டிலேயே 45 சதவீத பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. தனியார் முதலாளிகளுக்கு சொந்தமாக 7 எண்ணை கிணறுகள் உள்ளன. மத்திய அரசின் தவறான கொள்கையால் தான் பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும். இந்த விலையேற்றத்தை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

நடிகர் விஜயகாந்த் மட்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தனியாகப் போராடும் என்று அறிவித்துள்ளார்.

தனி கட்சிக்காக இருந்து போராடுவது இருக்கட்டும். இனிமேலாவது தனியாக போராடுவதை கைவிட்டு விட்டு விரைவில் நிரந்தரமாக எங்கள் அணிக்கு வாருங்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கிறோம்.

மக்கள் விரோத ஆட்சியாளர்களை எதிர்த்து அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என்றார்.

பந்த் வெற்றி பெற ஒத்துழையுங்கள்-பாஜக:

இந் நிலையி்ல் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையி்ல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 5 ஆண்டுகளில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. 2வது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு வருடத்தில் 2 முறை விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் 2008ல் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 149 டாலராக இருந்தது. இப்போது வெறும் 75 டாலர் தான். அப்படி இருந்தும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஏன்?. தனியாருக்கு ஆதரவாக தவறான பொருளாதார கொள்கையை கடைபிடிக்கிறார்கள்.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் மேலும் விலை உயரும். மக்களைப் பற்றிய கவலை மத்திய-மாநில அரசுகளுக்கு இல்லை.

பெட்ரோலிய விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயராது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வு மறைமுகமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை வாபஸ் பெற கோரியும் நாடு தழுவிய பந்த் நாளை நடக்கிறது.

இந்தப் போராட்டத்துக்கு வணிகர்கள், வாகன ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் மாதம் 2 முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தும்.

மக்கள் கொந்தளிப்பால் நாளைய போராட்டம் முழு வெற்றி அடையும். பாஜக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்கள், நகரங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெறும்.

மக்கள் எதிர்ப்புகளை மீறி பஸ், ரயில்களை இயக்கினால் அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.

போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம்-நெடுமாறன்:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நியாயமற்ற வகையில் உயர்த்தி இருப்பதைக் கண்டித்து 45க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஜூலை 5ம் தேதி நடத்தவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இந்திய சந்தையில் பெட்ரோல் ரூ. 58.90-க்கு விற்கப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை மற்றும் சுத்திகரிப்புச் செலவு உள்பட அதன்விலை ரூ. 28.90 மட்டுமே ஆகிறது. மத்திய, மாநில அரசுகளின் வரிகள் மட்டுமே ரூ. 30 ஆகிறது. அரசே முன்னின்று நடத்தும் மிகப்பெரிய கொள்ளை இது.

இதன் விளைவாக அத்தியவாசியமான பொருள்கள் அனைத்தும் விலை உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. வரியை குறைத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பிடிவாதமாக மறுக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்தை முழுமையாக வெற்றியடைய செய்வோம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X