For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போராட்டத்திற்கு குவிந்த ஒன்றரை லட்சம் பேர்-ஜெ., அதிமுக உற்சாகம்

Google Oneindia Tamil News

Jayalalitha
கோவை: தனது தலைமையில் நேற்று கோவையில் நடந்த கண்டனக் கூட்டத்திற்கு ஒன்றரை லட்சம் பேர் வரை திரண்டதால் ஜெயலலிதா பெரும் உற்சாகமடைந்துள்ளார். அதேபோல அதிமுகவினரும் உற்சாகமடைந்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதாவின் கூட்டம் ஒன்றுக்கு பெரும் கூட்டம் கூடியது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட குட்டி மாநாடு போல இந்த கண்டன பொதுக் கூட்டத்தை அதிமுகவினர் நேற்று நடத்தினர். இதற்குக் காரணமும் உண்டு.

இதே கோவையில்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பிரமாண்டமாக அமைந்தது. கோவை ஆரம்பத்திலிருந்தே அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றாக இருந்து வந்ததாகும். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட கோவை மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபித்தது அதிமுக.

இந்த நிலையில் அங்கு நடந்த செம்மொழி மாநாட்டுக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது அதிமுகவினருக்கு கெளரவப் பிரச்சினையாகி விட்டது. இதனால்தான் கோவையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் ஜெயலலிதா.

எனவே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டியாக வேண்டும் என அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பறந்தது. இதையடுத்து ஜெயா டிவியில் தினசரி பலமுறை கோவைக்கு வாருஙக்ள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதுதவிர தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்டிக் கொண்டு கோவை வர வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவுகள் பறந்தன.

இதன் விளைவாக கூட்டம் நடந்த வ.உ.சி. திடலில் எள் விழுந்தால் எண்ணெய் என்ற அளவுக்கு கூட்டம் கூடி விட்டது. பெரும் கூட்டத்தைப் பார்த்த ஜெயலலிதா முகத்தில் பெரும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. பேசியபோதும், பேசி விட்டு அமர்ந்த பிறகும் அவரது முகம் பெரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டது.

வழக்கமாக தன்னைத் தவிர யார் பேசினாலும் அதை பெரிய அளவில் ரியாக்ஷன் காட்டாமல் கவனிப்பார் ஜெயலலிதா. ஆனால் நேற்று செ.ம.வேலுச்சாமி பேசியபோது அவர் பக்கம் திரும்பி உட்கார்ந்து, அவரது பேச்சை ஆமோதிக்கும் வகையில் புன்னகைத்தபடி தலையை ஆட்டியபடி உற்சாகமாக கேட்டார்.

அதேபோல தன்னை வணங்கிய தலைவர்களுக்கு அவரும் பெருத்த புன்னகையுடன் பதில் வணக்கம் போட்டார்.

கிட்டத்தட்ட திமுகவுக்கு சற்றே மிரட்டலைத் தரும் வகையில் அதிமுக கூட்டம் இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியும் உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 11 இடைத்தேர்தல்களை இழந்தவர் ஜெயலலிதா. இதனால் அதிமுகவிலிருந்து பல முக்கியத் தலைவர்கள் கட்சியை விட்டு ஓடி விட்டனர். குறிப்பாக முத்துச்சாமி. அவர் போனதால் கோவையில் அதிமுக பலம் இழந்ததாக கருதப்பட்டது. ஆனால் நேற்று அங்கு கூடிய கூட்டம் முத்துச்சாமி போன்றோருக்கு அளித்த பதிலடியாக அதிமுகவினரால் வர்ணிக்கப்படுகிறது.

நேற்றைய கூட்டத்திற்குக் கூடி கூட்டத்தைப் பார்த்து கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், ஜெயலலிதா இப்போதுதான் வெளிப்படையாக களம் இறங்கியுள்ளார். இவர் இப்படியே ஒவ்வொரு ஊராக போனால், மக்களுக்காகப் போராட்டம் நடத்தினால் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றார்.

கோவை கண்டனக் கூட்டம் அதிமுகவினருக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்குமே கூட நிச்சயம் ஒரு எனர்ஜி பூஸ்டராக அமைந்திருக்கும்.

பிறந்தநாள் பரிசுப் பொருள் வழக்கு தள்ளி வைப்பு:

இந் நிலையி்ல் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு பிறந்த நாளுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் அனுப்பிய வழக்கில் அவரும் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி 3 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3 பேர் தரப்பு வக்கீல் விவாதம் நேற்று முடிந்தது. எனவே, சி.பி.ஐ. தரப்பு விவாதத்தை 20ம் தேதிக்கு நீதிபதி ரவீந்திரன் தள்ளி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X