For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்-வேண்டாத விமர்சனங்களை மறப்போம்: கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்பதற்கிணங்க-எத்தனை ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், கண்டனங்கள் என்று நடத்தியபோதிலும்-தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அந்தப் பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம்; வேண்டாத விமர்சனங்களை மறப்போம்- மன்னிப்போம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கோவையில் நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்ச நீதிமன்ற நீதியரசராக அரும்பணியாற்றி ஓய்வு பெற்ற ரத்தினவேல் பாண்டியன், அவரது துணைவியாரை கடந்த சில திங்கள்களுக்கு முன்பு இழந்த பிறகு அமெரிக்காவில் பணியாற்றி வரும் தன் புதல்வர்கள் இல்லத்திற்குச் சென்று வருவதாக என்னிடம் கூறிவிட்டுச் சென்றிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் என்னைத் தொலைபேசியிலே தொடர்புகொண்டு-அங்கே வெளிவரும் "தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்'' என்ற ஆங்கில இதழ் ஒன்றைக் காண நேர்ந்ததாகவும்-அதிலே தமிழக அரசினைப் பாராட்டி பெரிதும் எழுதியிருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

நான் உடனடியாக அந்த இதழில் வெளிவந்த அந்தக் கட்டுரையை எனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு -அவரும் பொறுப்பாக தன் மைந்தர்களிடம் கூறி எனக்கு அந்தக் கட்டுரை கிடைத்தது.

அந்தக் கட்டுரையில்;

- "சென்னை, டெட்ராய்ட்டைப் போல உள்ளது. பல சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும், விநியோக நிறுவனங்களும் அவர்களது தொழிற்சாலைகளை நிறுவியுள்ளதால் ஐம்பது இலட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தப் பெருநகரம் செழித்து வருகிறது. போர்டு, யுண்டாய், நிஸான், ரெனோ, டெய்ம்லர், பி.எம். டபிள்யூ ஆகிய அனைத்து நிறுவனங்களும் இங்கு சங்கமித்துள்ளன.

- ஏற்றுமதிக்காகவும், வசதி பெருகி வரும் இந்தியர்களுக்காகவும் உலகின் சிறிய கார்களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய மையமாக சென்னையை உருவாக்க அவர்கள் பல நூறு கோடி டாலர் களைச் செலவழித்து வருகின்றனர்.

- விரைவில் சென்னை ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும். இது கடந்த ஆண்டு எந்த அமெரிக்க மாநிலமும் செய்த உற்பத்தி அளவைவிட அதிகமாகும்.

- கார் உதிரி பாகங்களின் விநியோக நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்து வருகின்றன. பிரான்ஸ் நாட்டின் டயர் நிறுவனமான மை கெலின், கார் கண்ணாடி உற்பத்தி நிறுவனம் செயிண்ட் கோபைன், சென்னையில் உலகிலேயே மிகப் பெரிய தொழிற்சாலைகளை நிறுவுகின்றன. ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனம் பல நூறு கோடி டாலர் செலவில் சோதனை ஓட்ட தளத்தை நிர்மாணித்து வருகிறது.

- இந்த முதலீடுகள் அனைத்துமாகச் சேர்ந்து இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

- கார் தொழிலுக்குத் தேவையான நிலம், சாலைகள், மின்சாரம் ஆகியவற்றை அளிப்பதில் இந்தியாவின் பல மாநிலங்களைவிட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது.

- ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கவும், அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யவும் டஜன் கணக்கான அரசு அனுமதிகளைப் பெற ஒரே அலுவலகத்தையும் (ஒற்றை சாளர முறை) தமிழ்நாடு அமைத்துள்ளது.

- மாநில அரசுகள், கட்சிகளிடம் மாறும் போது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள்; பலமுறை பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன. ஆனால் 2006-ம் ஆண்டு தி.மு.கழகம், மாநில ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்டபோது தாங்கள் நடத்தப்பட்ட விதத்தில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்று கார் நிறுவனங்களின் நிர்வாகிகள் கூறினர்.

- அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பியா, கொரியா ஆகிய நாடுகளிலிருந்து புதிய மாணவர்கள் வரத் தொடங்கியுள்ளதால் சென்னை அமெரிக்கன் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.''

இவ்வாறு அந்தக் கட்டுரையில் தமிழகத்தைப்பற்றியும், இங்கே தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் பற்றியும், தொழில் வளர்ச்சியில் கழக அரசுக்குள்ள அக்கறை பற்றியும் எழுதியுள்ளது.

இந்தக் கட்டுரையினை நான் அந்த அமெரிக்க இதழான "தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்'' என்ற பத்திரிகையில் படித்தபோது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே இதழைப் பற்றிய செய்தி தமிழகத்திலே பெரிதும் பேசப்பட்டது என் நினைவிற்கு வந்தது. ஆம், அப்போது தமிழகத்திலே அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையிலே நடைபெற்று வந்தது. அப்போது அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி நாள்தோறும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

உதாரணத்திற்கு ஒன்றினைச் சொல்ல வேண்டும், இந்தியாவிலே தமிழகத்திலே நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி-இங்கேயுள்ள பத்திரிகைகளில் விளம்பரம் செய்ததோடு நிறுத்தவில்லை. அமெரிக்காவில் வெளிவரும் இந்த "வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்'' ஆங்கில இதழில் நான்கு பக்க அளவிற்கு மிகப் பெரியதோர் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்தினை மிகப் பெரிய அளவிலே அரைப்பக்க அளவிற்கு வெளியிட்டு அந்த விளம்பரம் தரப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். நகரிலே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலே நான் அந்த இதழையே மக்களுக்கு எடுத்துக் காட்டி, "இதோ என் கையில் இருப்பது தமிழ் நாட்டில் வெளிவந்தது அல்ல, வெளி மாநில ஏடுகளில் வெளிவந்தது அல்ல. ஏன் இந்தியாவிலே வெளி வந்ததே அல்ல.

இது அமெரிக்காவில் வெளிவரும் பத்திரிகை. இதன் பெயர் "தி ஏசியன் வால் ஸ்டிரீட் ஜர்னல்'' இதில் வந்திருப்பது என்ன? அட்வர்டைஸ்மெண்ட். அட்வாண்டேஜ் தமிழ்நாடு-இது தலைப்பு. இதிலே ஜெயலலிதாவின் புகைப் படத்தைப் பாருங்கள், எந்த அளவிற்கு உள்ளதென்று! இந்த இதழில் கால் பக்கம், அரைப்பக்கம் அல்ல. ஒரு பக்கம் அல்ல, இரண்டு பக்கம் அல்ல, நான்கு பக்கங்களில் விளம்பரம் வந்துள்ளது. பக்கத்திற்கு பக்கம் ஜெயலலிதா படம்-மதுரை கோவில் படமே அரைப் பக்கம்-அதிலே ஜெயலலிதாவின் பேட்டி இடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவிலே வெளிவந்த இந்தப் பத்திரிகை பற்றி தமிழ்நாட்டிலே எத்தனை பேருக்குத் தெரியும்? ஜெயலலிதா அரசைப் பற்றி அமெரிக்காவிலே உள்ள பத்திரிகைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எந்த மாநில அரசாவது இப்படிப்பட்ட அக்கிரமத்தை செய்தது உண்டா? இலவசமாகச் செய்யப்பட்ட விளம்பரமா? இதற்காக நம்முடைய வரிப்பணம், விளம்பரக்கட்டணமாகத் தரப்பட்டுள்ளது தெரியுமா?

அதுபற்றி ஈ.மெயிலில் கட்டணம் எவ்வளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் டெலிபோனில் பேசியதைத்தொடர்ந்து, வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகையின் உலகளாவிய பதிப்பில் 4 பக்க கலர் விளம்பரத்தின் கட்டணம் 3 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 225 ரூபாய்'' இது யாருடைய பணம்? அதனால் எத்தனை பேருக்குப் பயன்? அமெரிக்காவில் வெளியிட்ட விளம்பரத்திற்கு நாம் கொடுத்த வரிப்பணம் விரயம்!''

இவ்வாறு நான் அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய போது-தற்போது அந்த அம்மையாருக்கு நெருங்கிய தோழமைக் கட்சியாக இருக்கின்ற கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் எல்லாம் அந்த மேடையிலே இருந்து வியந்து என்னிடம் பேசினார்கள்.

2004-ம் ஆண்டிலேயே சுமார் நான்கு கோடி ரூபாய் அளவிற்கு-அமெரிக்காவிலே உள்ள ஒரு இதழுக்கு மட்டும் அ.தி.மு.க. அரசைப் பற்றியும்-இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா அளித்த பேட்டியையே விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள் என்றால், எந்த அளவிற்கு அப்போது ஆடம்பர நிர்வாகம் நடைபெற்றது என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

இன்னும் சொல்லப்போனால் இந்த விளம்பரம் இவ்வளவு ரூபாய்க்குக் கொடுக்கும் போது, அந்த விளம்பரத்தை அந்த ஏட்டிற்குப் பெற்றுத் தருபவர்களுக்கு சுமார் 15 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை கமிஷன் உண்டு. அவ்வாறு இந்த விளம்பரம் வெளியிடுவதில் கமிஷன் பெற்றவர்கள் யார்? பங்கிட்டுக் கொண்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் கேள்விகளை அந்தக் கூட்டத்திலே நான் கேட்டு, அதற்கு அப்போது ஆட்சியினர் எந்தப் பதிலும் தரவில்லை. அந்தக் குற்றச்சாட்டினைப் பற்றி காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

எந்த அளவிற்கு அப்போது மக்கள் வரிப் பணம் விரயம் செய்யப்பட்டது என்பதைப் பற்றியும் - தற்போது அவ்வாறு விளம்பரம் செய்யப்படாத நிலையில்-அமெரிக்காவில் வெளிவரும் அதே இதழ் நம்முடைய சாதனைகளைப் பற்றி பெரிய அளவில் கட்டுரை தீட்டியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஆட்சியிலே இருந்தபோது இந்த அளவிற்கு ஊழல் செய்தவர்கள்தான் தற்போது நமது ஆட்சிக்குக் கண்டனம் தெரிவித்துப் பொதுக் கூட்டம் நடத்துகிறார்களாம். அவர்களுக்கு வேறு சில கட்சிகள் தோள் கொடுக்கிறார்களாம்....

அது மாத்திரமல்ல; இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்பும் முதல் மூன்று மாநிலங் களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பதாக இந்திய தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெம்) நடத்திய தொழில் சர்வேயில் காணப்பட்டுள்ளது என்றும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளது.

போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்பதற்கிணங்க-எத்தனை ஆர்ப்பாட்டங்கள், அறிக் கைகள், கண்டனங்கள் என்று நடத்தியபோதிலும்-தமிழக அரசின் செயல் பாடுகளுக்கு இத்தகைய பாராட்டுகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. அந்தப்பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம்; வேண்டாத விமர்சனங்களை மறப்போம்- மன்னிப்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X