For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிராக போராடியதற்காக வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

வைகோ மீது ஜாமீனில் வர முடியாத வழக்கு

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் முதலில் மயிலாப்பூரில் உள்ள ராஜா கல்யாண மண்டபத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கு
சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட் மலர்விழி, இரவு 7 மணிக்கு வந்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைவரையும் புழல் சிறைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு இடம் இல்லாத காரணத்தால், வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

கைது குறித்து போலீஸ் விளக்கம்

போராட்டம் நடத்தியவர்களை திடீரென கைது செய்தது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை எதிர்த்து கலவரம் செய்த சிங்கள அரசை கண்டிப்பதாக கூறி, "இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' சார்பாக காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மைலாப்பூர்-நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பேரில், மேற்படி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட சுமார் 300 பேர் (50 பெண்கள் உள்பட) முற்பகல் 11.45 மணி முதல் 12.45 மணி வரை நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் குழுமி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், ம.நடராசன் ஆகியோர் உரையாற்றினர். தா.பாண்டியன் உரையாற்றிய பின்னர், அங்கிருந்து சென்று விட்டார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், அனுமதியின்றி தடையை மீறி, டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை துணை தூதரக அலுவலகத்தை அகற்றப்போவதாகக் கூறி, கூட்டத்தினர் புறப்பட முற்பட்டபோது ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அதனை மீறி இலங்கை துணைத்தூதரகம் நோக்கி செல்வது சட்டவிரோதமானது என்ற காவல்துறையின் எச்சரிக்கையை மீறி இலங்கை துணை தூதரகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற பழ.நெடுமாறன், வைகோ, ம.நடராசன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர் என்று கூறப்பட்டிருந்தது.

தா.பாண்டியன் கைதாகாவில்லை

நேற்றைய போராட்டத்தின்போது தா.பாண்டியனும் இருந்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசி விட்டுக் கிளம்பிச் சென்றதால் அவர் மட்டும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 முறை எரிக்கப்பட்ட ராஜபக்சே கொடும்பாவி

முன்னதாக ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சேவின் கொடும்பாவியை நான்கு முறை தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் திடீரென ஆங்காங்கு இவ்வாறு எரித்ததால் போலீஸார் திடுக்கிட்டுப் போயினர். ஒரு கொடும்பாவியை அவர்கள் பறித்தபோது, அதை தொண்டர்கள் போராடி மீண்டும் பிடுங்கி தீவைத்துக் கொளுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X