For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாசிச ஆட்சி நடத்தும் திமுக சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளது-வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: சர்வாதிகாரப் போக்கில் பாசிச ஆட்சி நடத்தும் தி.மு.க. அரசு சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதற்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தமிழ்நாட்டில் அடக்குமுறை தி.மு.க அரசால் ஏற்பட்டு உள்ளது. லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவின் சிங்கள இனவெறி அரசுக்குக் கண்டனமும் எச்சரிக்கையும் செய்ய வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி அதற்கு மாறாக, தமிழர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வை இலங்கை அரசு தந்துவிட்டது என்று சிங்கள அரசுக்கு வக்காளத்து வாங்கினார்.

நெஞ்சை நடுங்க வைக்கும் வகையில் ஈழத்தமிழர்கள் படுகொலைகள் செய்யப்பட்டதால் நியாயமாக தமிழர்கள் மனதில் எழுகின்ற ஆவேச உணர்ச்சி, முத்துக்குமார் உள்ளிட்ட 17 வீரத்தமிழர்கள் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்யக் காரணமாயிற்று. அதே உணர்ச்சி வேகத்தில் தான் சிங்கள அரசுக்கு எச்சரிக்கை செய்யும் நோக்கத்தில், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர், இயக்குநர் சீமான் உரை நிகழ்த்தினார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் எழுவதைத் தடுக்கவும் தமிழ் ஈழ ஆதரவாளர்களை மிரட்டி ஒடுக்கவும் திட்டமிட்டு இயக்குநர் சீமான் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி உள்ளார்.

ஈழத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆயுதங்களைத்தந்த இந்திய அரசு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆகும். அங்கே தமிழர்களைக் கொன்றால் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களின் கோபம் திரும்பும் என்று சீமான் பேசியது குற்றமாகாது.

சென்னையிலே ஒரு தலித் இளைஞனைச் சுட்டுக்கொன்ற கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா பிரதமரோடு கரம் குலுக்கி மத்திய அரசின் விருந்தாளியாக உலா வரமுடிகிறது. ஆனால், ஈழத்தமிழர்களுக்காக பேசினால் கருணாநிதி பாதுகாப்புச் சட்டத்தை வீசுகிறார். கடந்த ஆண்டு ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் வீரத் தியாகிகள் தீக்குளித்தபோது, அதனைக் கொச்சைப்படுத்தி குடும்பச் சண்டையால் தீக்குளித்தனர் என்று காவல்துறையை அறிக்கைவிடச் செய்தவர்தான் தமிழக முதல்வர்.

ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்க முனையாமல் அதற்குக் காரணமான இந்திய அரசுக்கு உடந்தையாக செயல்பட்ட துரோகி என்ற குற்றச்சாட்டில் இருந்து தமிழக முதல்வர் விடுபடவே முடியாது. அவர் தற்போது எடுத்து வருகிற இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் அந்தக் குற்றச்சாட்டை மேலும் கூர்மைப்படுத்தவே செய்கின்றன.

சர்வாதிகாரப் போக்கில் பாசிச ஆட்சி நடத்தும் தி.மு.க. அரசு சீமான் மீது பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதற்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இத்தகைய அடக்குமுறையின் மூலம் எங்கள் ஈழ ஆதரவுக் குரலை ஒருபோதும் அடக்க முடியாது அது மேலும் மேலும் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

'இலங்கை தூதரகம் இருக்கவே கூடாது'

முன்னதாக இந்தியாவில் இலங்கை தூதரகம் இருக்கக் கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று கடலூர் சிறையிலிருந்து இன்று காலை விடுவிக்கப்பட்ட வைகோ கூறினார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த படு பாதகச் செயலைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் இலங்கை துணைத் தூதரகத்தை மூ்டக் கோரி ஊர்வலமாக கிளம்பினர்.

இதையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 160 பேரை போலீஸார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு செய்தனர். இதை விசாரித்த கோர்ட் அனைவரையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நேற்று இரவுக்குள் சிறைக்குப் போகவில்லை. இதையடுத்து இன்று காலையில் உத்தரவு வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 160 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையாகி வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும், அடித்தே கொன்றும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்த செயலுக்கு இந்திய அரசும் உடந்தையாக இருக்கிறது.

இப்படிப்பட்ட கொலை பாதக செயல்களில் ஈடுபடும் இலங்கை அரசின் தூதரகம் இந்தியாவில் இருக்கக்க கூடாது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கவே கூடாது. அதை அகற்றியே ஆக வேண்டும். இலங்கை தூதரகத்தை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X