For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீமான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை: வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
கோவை: 60 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், கோவை தான் தமிழக அரசியலின் திருப்புமுனைத் தலமாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியினரின் வீழ்ச்சி கோவை மாவட்டத்தில் ஆரம்பித்து விட்டது.

அதிமுக மீது மக்கள் கொண்டுள்ள பாசமும், விசுவாசமும், நம்பிக்கையும் அதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி ஜெயலலிதா பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தெரிந்தது. அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுடன் போர் பரணி கோவையில் தொடங்கி உள்ளது.

69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பு கூறியது. எக்காரணத்தை கொண்டும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்பது தான் அந்த தீர்ப்பு. எனவே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்றால் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டினார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் உருவாக்கிய சமூக நீதியை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. எனவே 60 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க உரிய தீர்மானம் நிறைவேற்றி சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அந்த கூட்டத்தின் முதல் நாளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது 69 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டிற்காக சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மசோதாவை நிறைவேற்றிய ஒரே அரசு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான்.

பின்னர் அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் இடஒதுக்கீடு மசோதா ஓட்டெடுப்புக்கு வந்த போது அந்த மசோதாவை ஆதரித்து நான் ஓட்டுப் போட்டேன். ஆனால் அந்த ஓட்டெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் 3 பேர் ஓட்டு போடவில்லை. இதற்கான ஆதாரம் உள்ளது.

69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 31-சி யின் அடிப்படையில் திருத்தம் செய்து 9வது அட்டவணையில் சேர்த்தால் தான் பாதுகாப்பாக இருக்கும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர் ஜெயலலிதா ஆவார்.

மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. தமிழர்களின் பாதுகாப்பு பற்றி ஏதாவது பேசினால் பாதுகாப்பு சட்டம் என மிரட்டுகிறது. தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார்கள். என் மீது இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்குகள் உள்ளன. சீமான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும். கடந்த காலத்தில் கூட சிலர் எரிமலை வெடிக்கும், பூகம்பம் நிகழும் என மேடையில் பேசியுள்ளனர்.

ஐ.நா. அனுப்பியுள்ள குழுவுக்கு இலங்கையை சேர்ந்த எம்.பிக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். உச்சகட்டமாக ஐ.நா. பொது செயலாளரை விபசார புரோக்கர் என்று இலங்கை எம்.பி. விமர்சித்துள்ளார். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.

இந்திய அரசின் நடவடிக்கை அனைத்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டுவது தான் எங்கள் வேலை என்றார் வைகோ.

நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்- காவல் நீட்டிப்பு:

இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது காவலை மாஜிஸ்திரேட் சாந்தினி வரும் 6ம் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய சீமான், தமிழக மீனவர்கள் இன்று வரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகிறார்கள். இதை தட்டிக்கேட்டால் எனக்கு சிறையா என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X