For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த ஆண்டு இறுதியில் 108 தொழிற்பேட்டைகள்!-மு.க ஸ்டாலின்

Google Oneindia Tamil News

கோவை: அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள தொழிற்பேட்டைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும் என்று துணை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களின் 19வது மாநாடு 'ஸ்டிக்கான்-2010' என்ற பெயரில் கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டுக்கு தமிழக ஊரகத் தொழில் துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:

"தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் என்கிற பொறுப்பை நான் ஏற்ற பிறகு கடந்த 13.6.2006 அன்று தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினேன். அந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து தொழில் கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பெரிய தொழிற்கூட்டமைப்புகள் மட்டுமல்ல. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்தை தெரிவித்தனர்.

அதன்பிறகு கடந்த 13.10.2009 அன்று நெல்லையிலும், 10.12.2009 அன்று கோவையிலும் நடைபெற்ற மண்டல அளவிலான தொழில் வளர்ச்சி கலந்தாலோசனை கூட்டத்திலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

ஆக தமிழக அரசு பெருந்தொழில் முனைவோர் சிறு தொழில் முனைவோர் என பாகுபாடு பாராமல் எத்தகைய தொழில் முனைவோராக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை, சலுகைகளை, ஒத்துழைப்பை அளித்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தொழில் வளர்ச்சிக்கான சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் அமைதி நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 37 பெரிய தொழில் நிறுவனங்கள் சுமார் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டில் தங்களது உற்பத்தியை தொடங்கி தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. பெருந்தொழில்களுக்கு என அதிக சலுகைகள் அளிக்கப்படுவதில்லை.

தமிழக அரசு சிறு தொழில் வரலாற்றில் ஒரு சிறப்பான முயற்சியாக கடந்த 2008-ம் ஆண்டு சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அளவில் இத்தகைய கொள்கையை வெளியிட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடாகும்.

சிறு தொழில் வளர்ச்சிக்காக சிட்கோவை நிறுவியவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதி ஆவார். 1970-ம் ஆண்டு நிறுவப்பட்ட சிட்கோ நிறுவனத்தின் கீழ் 2006-ம் ஆண்டு அளவில் 78 தொழிற்பேட்டைகள் இயங்கி வந்தன.

2011-ம் ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கை 108 ஆக உயர்த்தப்படும்.

தொழில்பேட்டைகளில் தொழில் நகரிய சட்டத்தில் அமுல்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளதால், தற்போது இந்த இடங்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கும் சிட்கோவிற்கும் பிரித்து அளித்து தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்கலாம் என்று கருதப்பட்டுள்ளது.

அடுக்குமாடி தொழில் வளாகங்களை பொறுத்தவரை நில கிரயம் தொடர்பான பரிசீலனையில் சில திட்டங்கள் உள்ளன. கட்டிடப் பரப்பு அதற்கான கட்டுமான செலவு, தொழில் மனைக்கான விலை இவற்றிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை பொறுத்து இடத்திற்கேற்ப நிதி வசதிக்கேற்ப இந்த கோரிக்கை செயல்படுத்தப்படும்.

தமிழக அரசை பொறுத்தவரை சிறு தொழில் பெருந்தொழில் என்று வேறுபாடு என்பதை பார்ப்பதில்லை. இரண்டுமே தொழில் வளர்ச்சியை பொறுத்து இரண்டு கண்களை போன்றவை. சிறு துளி தான் பெரு வெள்ளமாகிறது.

இன்றைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அதிபராக உள்ள நீங்கள் எல்லாம் பெருந் தொழில் அதிபர்களாக வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ளது. தமிழக தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் உலகம் எங்கும் விற்பனை செய்யப்படுகின்றன என்ற நிலை ஏற்பட வேண்டும். அதுவே நம் அனைவரின் விருப்பமாகும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தொடர்ந்து முயற்சி செய்ய இந்த மாநாடு வழி வகுக்கும்..." என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X