• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நள்ளிரவில் நடுரோட்டில் விடப்பட்ட பார்வையற்றோர்-வைகோ கண்டனம்

By Chakra
|

சென்னை: உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட கண் பார்வையற்றோரை உடனே விடுதலை செய்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு சி மற்றும் டி பிரிவுகளில் பார்வையற்றவர்களுக்கு, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; பார்வைற்றோருக்கு நிரந்தரக் குடியிருப்பு வீடுகள் வழங்கிட வேண்டும்; தமிழக அரசால் வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ.400 என்பதை, ரூ.1,000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, சுயதொழில் செய்யும் பார்வையற்றோர் சங்கத்தினர், கடந்த 5ம் தேதி முதல் சேப்பாக்கத்தில் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினர்.

ஒருநாள் மட்டுமே போராட்டம் நடத்திட அவர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறையினர் அன்று மாலையில், அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர். ஆனால், பார்வையற்றோர்கள், தங்கள் உண்ணாநிலை அறப்போரைக் கைவிட மறுத்து, ஆயிரம் விளக்கில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் உண்ணாநிலை அறப்போரைத் தொடர்ந்தனர்.

இரவு 11 மணிக்கு அங்கே வந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்வதாக அறிவித்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றி உள்ளனர். புழல் சிறையில் அவர்களை அடைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, நள்ளிரவில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக எல்லோரையும் நடுரோட்டில் இறக்கி விட்டு, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டும் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த நான், தென்சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அவர்களை அங்கு அனுப்பி வைத்தேன். உண்ணாநிலை மேற்கொண்டு இருந்த தோழர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்களை, அவர்களது சங்க அலுவலகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தோம்.

நேற்று (8ம் தேதி) காலை அவர்கள் முதல்வரின் இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தை நோக்கிச் செல்ல முனைந்தனர். அங்கே அவர்களைக் கைது செய்து, கோபாலபுரம், பிருந்தா ஆரம்பப்பள்ளியில் வைத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவர்களை எங்கோ கொண்டு சென்றுள்ளனர்.

கண் பார்வையற்றோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதுடன், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அரசு அலுவலகங்களில் உதவியாளர், வரவேற்பாளர், தொலைபேசி இயக்குபவர், தகவல் பரிமாறுபவர், பை கட்டுபவர், பிட்டர், நாற்காலி பின்னுபவர், லிப்ட் ஆபரேட்டர்கள் போன்ற பணி வாய்ப்புகளைப் பார்வை அற்றோருக்கு வழங்க வேண்டும் என்றும் மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

உமா சங்கருக்கு வைகோ ஆதரவு:

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளியப்பனை ஆளுங்கட்சியின் திருநெல்வேலி எம்எல்ஏ மாலைராஜா, கடந்த 7ம் தேதியன்று அடித்துத் தாக்கிய சம்பவம், அராஜகத்தின் பிரதிபலிப்பு ஆகும்.

பல்கலைக்கழகத்தில் துணை முதல்வர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில், தனக்குத் தனி மரியாதை செய்யவில்லை என்று, திமுக சட்டப்பேரவை உறுப்பினர், துணைவேந்தர் அறைக்குள் சென்று, கெட்ட வார்த்தைகளைச் சொல்லி, துணைவேந்தரைத் தாறுமாறாக ஏசியதோடு, அவரது தலையிலும், கன்னத்திலும் அடித்து இருக்கிறார்.

ஆனால், இந்தச் சம்பவத்தை அறிந்த துணை முதல்வரும், உயர்கல்வித்துறை அமைச்சரும், பிரச்சினையை மூடி மறைத்து விட முயன்று, துணைவேந்தருக்கு நிர்பந்தத்தையும், அழுத்தத்தையும் தந்து உள்ளனர். இதன் காரணமாகவே, துணைவேந்தர் புகார் கொடுக்கவில்லை.

எனவே தரக்குறைவான இந்தச் செயலுக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, எம்எல்ஏ மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, காவல்துறை அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அரசாங்கத்தின் ஊழல்களுக்கும், தவறுகளுக்கும் உடன்படாமல், அவற்றை எதிர்த்து, நேர்மையாகச் செயல்பட்ட ஒரே காரணத்துக்காக, ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், திமுக அரசால் பழிவாங்கப்பட்டு உள்ளார். பொய்யான குற்றச்சாட்டில், பணி

இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். நேர்மையான அந்த அதிகாரி மீது, சொத்துக்குவிப்பு வழக்கு என்ற வழக்கையும் அரசு போட்டு உள்ளது. ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் இருந்து, மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாகத் தேர்வு பெற்று, நேர்மையாகப்

பணிபுரிந்த உமாசங்கர் மீது, அரசு மேற்கொண்டு உள்ள, பழிவாங்குகின்ற, மிரட்டுகின்ற நடவடிக்கைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

அவரது பணி இடைநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்து, பொய்யாக அவர் மீது புனையப்பட்டு உள்ள வழக்கையும் அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

எதிர்பார்க்கும் வகையில் அதிமுக கூட்டணி அமையும்:

இந் நிலையில் குன்னூரில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழக அரசு சார்பில் கொங்கு சீமையான கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. அதில் தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. கருணாநிதி குடும்பத்தினர்தான் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கேரள அரசு இழுத்தடிக்கிறது. இந்த வழக்கில் தமிழகம் சார்பில் வாதாடிய வக்கீல் 33 முறை வாய்தா வாங்கியுள்ளார். இது கேரள அரசுக்கு துணை போவது போல் உள்ளது.

தமிழகத்தில் சரியான முறையில் ஆட்சி நடைபெறவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அதிமுக கூட்டணி அமையும். எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X