For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சப்'பென்று போன டாஸ்மாக் ஸ்டிரைக்-குடிகாரர்கள் வழக்கம் போல் குஷி!

Google Oneindia Tamil News

Tasmac Shop
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், அரசையும், குடிகாரர்களையும் பெரிய அளவில் பாதிக்கவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளைத் திறந்து அரசு இன்று வழக்கம் போல மது விற்பனையை மேற்கொண்டது.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், தினசரி 8 மணி நேர வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் அடையாள வேலைநிறுத்தம் தொடங்கியது.

போலீஸ் பாதுகாப்புடன் சரக்கு விற்பனை

இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என அரசு கூறி வந்தது. இருப்பினும் முறையாக நோட்டீஸ் கொடுத்த ஊழியர்கள் இன்று திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

ஆனால் பெரும்பாலான இடங்களில் கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. பல கடைகளில் மாற்று ஊழியர்களை வைத்து சரக்குகளை விற்றனர். சில கடைகளில், டாஸ்மாக் ஊழியர்களையே வலுக்கட்டாயமாக வரவழைத்து விற்பனையைக் கவனிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு கடைக்கும் 2 முதல் 4 போலீஸார் வரை நிறுத்தப்பட்டு குடிகாரர்களுக்கு சரக்குகள் போதுமான அளவில் கிடைக்க அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

ஊழியர் தீக்குளிக்க முயற்சி

கோவையில் இன்று சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே மனோகரன்(32) என்ற டாஸ்மாக் ஊழியர் தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

அப்போது மனோகாரன் கூறுகையில், பீளமேடு தண்ணீர்ப் பந்தல் பகுதியில் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறேன். நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகிறோம். ஆனால் கடைக்கு 4 போலீசார் பாதுகாப்புடன் கடைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்துதான் நான் தீக்குளிக்க முடிவு செய்தேன் என்றார்.

நெல்லை, தூத்துக்குடியில் 'இயல்பு' நிலை

நெல்லை மாவட்ட நிர்வாகமும் இந்த ஸ்டிரைக்கை முறியடிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தற்போதுள்ள ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் வேறு ஊழியரை கொண்டு கடையை திறக்க 10 கடைகளுக்கு ஒரு அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டு இரவே அனைத்து கடைகளிலும் விற்பனை தொகை வசூலிக்கப்பட்டது.

இன்று டாஸ்மாக் கடைகள் திறக்க உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கலெக்டர் ஜெயராமன் கூறியிருந்தார். அரசின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக இன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தது.

அனைத்து கடைகளும் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 223 டாஸ்மக் கடைகள் உள்ளன. இதில் மொத்தம் 1078 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் சுமார் 11 ஊழியர்கள் மட்டுமே வரவில்லை என தெரிகிறது. அவர்கள் யார், யார் என்பது பற்றி மாவட்டம் நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 198 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மொத்தம் 58 பேர் வேலை செய்கின்றனர். இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிளுமே திறந்திருந்தன. 580 ஊழியர்களில் சுமார் 15 பேர் மட்டும் பணிக்கு வரவில்லை. அவர்கள் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.


இயற்கை மரணம்-பிரச்சினையாக்கப் பார்த்த அதிமுக

இந்த நிலையில், இயற்கையான முறையில் நேற்று மரணமடைந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவரின் மரணத்தை போராட்டத்தை வலியுறுத்தி இறந்ததாக கூறப் பார்த்தது அதிமுக.

விருத்தாசலம் மாவட்டம் எம்.பரூரைச்சேர்ந்த இளங்கோவன் (35), தொட்டிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று காலை திடீரென்று இறந்தார்.

இதையடுத்து அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னசாமி, புவனகிரி எம்.எல்.ஏ. ராமானுஜம் ஆகியோர் செய்தியாளர்களிடம், அதிமுக உறுப்பினர் இளங்கோவன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று திமுகவினரால் மிரட்டப்பட்டார். இதனால் மனமுடைந்த இளங்கோவன் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இளங்கோவனின் தந்தை, இதுகுறித்து விளக்குகையில், என் மகன் அதிமுக உறுப்பினர் அல்ல. திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்தான். உடல் நிலை மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று திடீரென்று இறந்துவிட்டான் என்று கூறினார். இதையடுத்து அதிமுகவினரின் முயற்சி பிசுபிசுத்துப் போனது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஸ்டிரைக்கால் குடிமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை.

டிஸ்மிஸ் செய்யத் தடை

இந்த நிலையில் வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில்,

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்து கொள்ளும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது. தொழில் தகராறு சட்டத்தின் கீழ் தான் முறையாக நோட்டீஸ் அனுப்பி போராட்டத்தில் ஈடுபடுகிறோம். முன்னறிவிப்பு செய்துதான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியம், முறையான அறிவிப்புடன் தான் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் செய்கின்றனர். எனவே, டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஊழியர்கள் மீது எவ்வித விசாரணையின்றி நடவடிக்கை எடுக்கக் கூடாது. இதுதொடர்பாக தொழிலாளர் துறை செயலாளர், ஆணையாளர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

கடைகள் திறந்திருக்கும்-அரசு

இந்த நிலையில், கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காவல் துறையினரின் உதவியுடன் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, தலைமைச் செயலக அதிகாரிகள் கூறுகையில்,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 700 மதுபானக் கடைகள் உள்ளன. பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து கடைகளுக்கு வராமல் இருந்தால், அந்தக் கடைகளை இயக்குவதில் அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் மாற்றுத் துறைகளில் உள்ள பணியாளர்களையும் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தனர். எனவே, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை திறந்திருக்கும்.

கடைகளில் திரண்ட குடிகாரர்கள்

இன்று ஸ்டிரைக் என்பதால் மதுகிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும், முன்னெச்சரிக்கையுடனும் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று விரும்பிய மது பானங்களை வாங்கிக் கொண்டு திருப்திகரமாக சென்றனர் குடிகாரர்கள்.

வழக்கத்திற்கு மாறாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் சில இடங்களில் போலீஸார் வரவழைக்கப்பட்டு வரிசையில் நிற்க வைத்து குடிகாரர்களுக்கு அவர்கள் விரும்பிய மதுபானங்கள் கிடைக்க வழி செய்யப்பட்டது.

15 நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்ட சாவிகள்

ஸ்டிரைக்கை முறியடிக்கும் வகையில், டாஸ்மாக் ஊழியர்களிடம் உள்ள இரண்டு கடை சாவிகளில் ஒன்றை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் 15 நாட்களுக்கு முன்பே வாங்கி விட்டனர்.

கடைகளை அடைத்து விட்டு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் இறங்கினால் வேறு ஊழியர்களை வைத்து கடைகளை திறப்பதற்காக இந்த நடவடிக்கை.

இதற்கிடையே, நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கருணாகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 300 கடை பார் சூபர்வைசர்களிடம் உறுதி மொழி கடிதம் பெறப்பட்டது. ஸ்டிரைக் தினமான 11ம் தேதி அனைத்து ஊழியர்களும் வழக்கத்தை விட ஒரு மணி நேரத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு டாஸ்மக் கடைகளில் ஆஜாராக வேண்டும். திறக்காத கடைகள், வேலைக்கு வராத ஊழியர்களை மாவட்டம் முழுவதும் உள்ள ஏரியா சூபர்வசைர்கள் கண்காணித்து உடனுக்குடன் டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் அப்போது கருணாகரன் கூறினாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X