• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதானி கைது செய்யப்பட்டார்-விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்படுகிறார்

|

Madhani
கொல்லம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியைக் கைது செய்வது தொடர்பாக கடந்த பத்து நாட்களாக நீடித்து வந்த இழுபறி இன்று பிற்பகலில் முடிவுக்கு வந்தது. அவரை கைது செய்த கேரள போலீஸார், கர்நாடக தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி குற்றம் சாடட்ப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார் மதானி. ஆனால் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் மனு செய்துள்ளார்.

இந்த நிலையில் மதானியைக் கைது செய்ய டிஎஸ்பி சித்தராமையா தலைமையிலான போலீஸ் படையினர் கொல்லம் வந்து கடந்த ஒரு வாரத்திற்கும மேலாக கைது செய்ய முடியாமல் தவித்து வந்தனர். சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று கூறி மதானியைக் கைது செய்ய விடாமல் தடுத்து வந்தது.

இந்த நிலையில் இன்றுடன் மதானியை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கெடு முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென மதானிக்கு உடல் நலம் சரியில்லை என்று தகவல் பரவியது. ஆம்புலன்ஸும், டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப் போவதாக செய்திகள் பரவியது.

ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ரத்த மாதிரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். தற்போதைக்கு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. ரத்த சோதனைக்குப் பின்னரே முடிவு செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பெங்களூர் இணை ஆணையர் அலோக் குமார், துணை ஆணையர் ஓம்காரய்யா ஆகியோர் கொல்லம் வந்தனர். மாவட்ட எஸ்.பி. ஹர்ஷிதாவை சந்தித்த அவர்கள், மதானியைக் கைது செய்ய வேண்டியது அவசியம். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று அவர் சரணடையட்டும் அல்லது நாங்கள் கைது செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும். இனியும் தாமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை செய்தியாளர்களை அழைத்துப் பேசினார் மதானி. அப்போது அவர் கூறுகையில், நான் சட்டத்தை மதிக்கிறேன். இதனால் கோர்ட்டில் சரணடைவேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அன்வராசேரியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் பலத்த இழுபறிக்குப் பின்னர் அவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கர்நாடக தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மதானி கைது செய்யப்பட்டபோது போலீஸாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல், போலீஸார், மதானியைக் கைது செய்தனர்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்கின்றனர் கர்நாடக போலீஸார்.

கர்நாடக அமைச்சர் பாய்ச்சல்:

முன்னாக, மதானி விவகாரம் தொடர்பாக கேரளா மீது கர்நாடக அமைச்சர் ஆச்சார்யா குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கேரள அரசிடம் நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக இல்லை. இதுவரை நாங்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு வரவில்லை. இப்படியே நிலைமை நீடித்தால், அவர்கள் ஒத்துழைப்பு தர மறுத்தால், நாங்கள் வேறு வழியை நாட நேரிடும் என்றார் கோபத்துடன்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி 8 வருடங்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் மதானி. பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையானார் என்பது நினைவிருக்கலாம்.

3 மாவட்டங்களில் மதானி கட்சியினர் பந்த்:

மதானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மக்கள் ஜனநாயகக் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் எர்ணாகுளம், காசர்கோடு, திருவனந்தபுரத்தில் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X