For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி குழந்தைகள் சாவுகள்: தமிழகத்தில் காவு வாங்கிய அதே நிறுவன தடுப்பூசி!!

Google Oneindia Tamil News

லக்னோ: தமிழத்தில் கடந்த 2008ம் ஆண்டு நான்கு குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிறுவனம் தயாரித்த அதே அம்மைத் தடுப்பூசிகள்தான் தற்போது உ.பியில் 4 குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்களில் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த தடுப்பூசிகளை தயாரித்துக் கொடுத்தது இந்தியன் இம்யூனாலாஜிகல்ஸ் நிறுவனமாகும். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நிறுவனம் அனுப்பி வைத்திருந்த 40 லட்சம் தடுப்பூசி மருந்துகளையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இதே நிறுவனத்தின் அம்மைத் தடுப்பூசிகள் உ.பியில் 4 குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது. இதனால் இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிறுவனத்தின் தரம் குறித்து பெரும் கேள்விக்குறியும், அச்சமும் எழுந்துள்ளது.

அம்மை நோய் வராமல் தடுக்கத்தான் இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பூசியே உயிரைப் பறிக்கும் எமனாக மாறியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே நான்கு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மொகல்கஞ்ச்சில் நடந்த முகாமில் தடுப்பூசி போடப்பட்ட உடன் 4 குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு எதிர்விளைவுகள் உண்டாகின.

சில நிமிடங்களிலேயே நான்கு குழந்தைளும் பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த குழந்தைகள் அனைத்தும் 9 மாதங்களுக்கு உள்பட்டவை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்த குழந்தைகளில் ஒன்றான ரேகாவை இழந்த அவரது தாயார் ராணி பெரும் குமுறலுடன் உள்ளார். அவர் கூறுகையில், தடுப்பூசி போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே எனது குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. நாடித் துடிப்பும் படிப்படியாக குறைந்து கொண்டே வந்து பரிதாபமாக இறந்து போனாள்.

எனது குழந்தைக்கு அம்மை வராமல் தடுப்பூசி தடுக்கும் என நினைத்தேன். ஆனால் இப்படி உயிரைப் பறிக்கும் என்பது தெரியாமல் போய் விட்டதே என்று கதறி அழுதார்.

இறந்த குழந்தைகளில் ஒன்றுக்கு பிறந்து ஆறு மாதமாகிறது. அந்தக் குழந்தைக்கு அம்மைத் தடுப்பூசியுடன், டிபி மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பூசியும் சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் 3 பேர் கொண்ட குழுவை மொகல்கஞ்சுக்கு அனுப்பியுள்ளது.

இந்தக் குழுவில் மத்திய தடுப்பு மருந்துகள் துறை ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றார்.

தமிழகத்தைத் தொடர்ந்து உ.பியிலும் நான்கு குழந்தைகளைப் பலி வாங்கியுள்ளது இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி. இதனால் அந்த நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகள் குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தடுப்பூசி மரணம் தொடர்பாக ஒரு டாக்டர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கம் போல ஏற்கனவே அளிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகளை திரும்ப அனுப்பி வைக்குமாறு மத்திய அரசும் கூறியுள்ளது.

ஆனால் தமிழகம், உ.பியில் நடந்ததைப் போல மீண்டும் நடக்காது என்று மத்திய அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடக்க வேண்டும். இது தொடர் கதையாகி விடக் கூடாது என்று அப்பாவி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X