For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை மீட்க ஜெ. என்ன செய்தார்-கருணாநிதி கேள்வி

Google Oneindia Tamil News

சென்னை: தான் முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தபோது கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா என்ன செய்தார் என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: அ.தி.மு.க. அரசு வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசின் உதவியை பெறுவதாக இருந்ததாகவும், அதை தி.மு.கழகம் முட்டுக்கட்டை போட்டுத்தடுத்து விட்டதாகவும் ஜெயலலிதா உங்களை குறை கூறியிருக்கிறாரே?

பதில்: மனச்சாட்சி உள்ளவர்கள் ஜெயலலிதாவின் கூற்றை ஏற்க மாட்டார்கள். 2005-ல் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கொட்டித்தீர்த்த பெருமழை ஏற்படுத்திய வெள்ளத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் அல்லல்பட்டனர். அக்காட்சிகளையெல்லாம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. சார்பில் உதவிகள் அளித்ததுடன், மாநில அ.தி.மு.க. அரசு அப்பொழுது கேட்ட 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை முழுவதும் குறைக்காமல் வழங்கிட வேண்டுமென அன்றைய மத்திய அரசுக்கு தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதையும்; அவ்வாறே 1000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதையும், அத்தொகையை வாக்காளர்களுக்கு அளித்து, அதனை 2006 தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆதாயமாக்கிக் கொண்டதையும் அவர் மறந்ததுபோல் பாசாங்கு காட்டலாம், மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

கேள்வி: ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. ஆட்சியை வழக்கம்போலவே குறைசொல்லியிருப்பதோடு, அண்மையில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில அரசின் உரிமைகளை பாதிக்காத வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்க வேண்டும் என்று இயற்றிய தீர்மானத்தையும் கிண்டல் செய்திருக்கிறாரே?

பதில்: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்னும் முழக்கத்தைத்தந்து மாநில அரசின் உரிமைகளுக்காக 1970-ம் ஆண்டுகளிலேயே மத்திய அரசுடன் வாதாடி உரிமைகளை பெறத்தொடங்கியது திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை வரலாறு புரிந்தவர்கள் அறிவார்கள்.

மத்தியில் தனியொரு கட்சியின் ஆட்சி நிலவும் சூழ்நிலை மாறி பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாகும் கூட்டாட்சி அமைய தொடங்கிய பின்னர்தான் தமிழகம் அதிக அளவில் திட்டங்களை பெற்று பயனடைந்து வருகிறது என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள்.

1991-ல் சந்தர்ப்பவசத்தால் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையில் மத்தியில் அமைந்த அரசை மிரட்டி இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியை கலைக்கச்செய்தவர் ஜெயலலிதா.

1998-ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் அவரது கூட்டணியில் வென்று அவர் பிரதமராக நீடிக்க தனது கட்சியின் ஆதரவை அளிப்பதில்-அப்போதைய தி.மு.க. அரசை கலைக்க ஒப்புதல் தந்தால்தான் அ.தி.மு.க. ஆதரவு தரும் எனக்கூறி அந்த நிபந்தனையை பெறுவதற்காகவே ஒப்புதல் தருவதில் காலம் கடத்தி, அந்த முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளில் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர் ஜெயலலிதா.

அவருக்கு மாநில சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படிப் புரியும்?

மாநில அரசின் நன்மையை குறிக்கோளாக கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உருவாக்கிய மத்திய அரசிலும், அதன்பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஏற்பட்டு அமைந்துள்ள மத்திய அரசிலும் தமிழகத்தின் நன்மைக்காக 1996-2001, 2006-2010 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்பதை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தி.மு.க. சுட்டிக்காட்டி வந்துள்ளது. அண்மையில் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அடுத்த ஆண்டு முதல் நாடு முழுமைக்கும் பொதுவாக ஒரு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் அறிவித்ததாக செய்தி வெளியான உடனேயே 15.8.2010 அன்று தேசியக்கொடியை கோட்டையில் ஏற்றிவைத்த கையோடு மத்திய அரசின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என கடிதம் எழுதி வலியுறுத்தியதன் பயனாக, அம்முடிவை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால்தான் மத்திய அரசு அந்த முடிவை நிறுத்தி வைத்தது என இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பது ஊரை மட்டுமே அல்ல இந்த உலகத்தையே ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியாகும்.

கச்சத்தீவு பிரச்சினையைப் பற்றி ஜெயலலிதா அடிக்கடி குறை கூறிக் கொண்டுள்ளார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த நடவடிக்கையை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டு மல்லாமல்; கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாத நிலை இருந்தால் தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது.

1991-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து முழங்கியபோது "கச்சத்தீவை மீட்பேன்'' என சபதமிட்டாரே அந்த சபதத்தை நிறைவேற்றிட அதன்பின் ஆட்சி செய்த ஐந்தாண்டு காலமும் அதற்காக ஒரு சிறு துரும்பையேனும் கிள்ளிப் போட்டிருப்பாரா? அல்லது 2001 முதல் 2006 வரை தமிழகத்தில் வாழும் பல்வேறு பிரிவு மக்களையும் வயிற்றில் அடித்து கோட்டையில் கொலு பொம்மையாக ஆட்சியில் இருந்தாரே அந்த காலத்தில்தான் கச்சத்தீவை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்தாரா?

வாய்ச்சொல்லில் வீரம் பேசும் ஜெயலலிதா கச்சத்தீவு பிரச்சினையில் கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு தமிழக மக்களை ஏமாற்றுவது அவரது "கோயபல்ஸ்'' தந்திரத்தையே நினைவூட்டுகிறது.

2004-ல் சுனாமி ஆழிப்பேரலையால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, மாநில அரசை கழகம் முற்றிலும் புறக்கணித்தாக ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்யைக் கூறுகிறார்.

ஆழிப்பேரலை தமிழக கடலோர மீனவ மக்கள் மீதும், மற்றவர்கள் மீதும் கோரத்தாக்குதல் நடத்திக்கொன்றழித்த கொடுமை கண்டு வேதனை அடைந்த நிலையில் தி.மு.கழகத்தின் சார்பில், மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்ததுடன், என் சொந்தப்பணம் 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரண நிதிக்காக அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோட்டையில் மு.க.ஸ்டாலின் வாயிலாக நேரடியாக வழங்கப்பட்டது மாநில அரசை புறக்கணித்த நிகழ்ச்சியா?

ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டம், பைகாரா இறுதி நிலை புனல்மின் திட்டம், புதிய தலைமை செயலகம் கட்ட அவர் மேற்கொண்ட முயற்சி எல்லாவற்றையும் தடுத்ததாக தி.மு.கழகத்தின் மேல் குற்றங்களை சுமத்துகிறார்.

இந்த திட்டங்களையெல்லாம் செயல்படுத்திட அவர் திட்டமிட்டபோது, தமிழகத்தில் முழு பலத்தோடு, வானளாவிய அதிகாரத்தோடு ஒரே கையெழுத்தில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்து, குடியிருப்புகளில் எல்லாம் காவல் படையை அனுப்பி கதறக் கதறக் கைது செய்து சிறையில் அடைத்து கொட்டமடித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா; இந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவது எப்படி? அதற்குரிய சாதுர்யம் என்ன என்பது குறித்தெல்லாம் சிந்தித்தாரா? செயல்பட்டாரா? இதையெண்ணிப் பார்க்காமல் தி.மு.கழகத்தை குறைகூறுவது அவருடைய அறியாமையை படம் பிடித்துக் காட்டுகின்ற செயலே தவிர வேறல்ல என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X