நான் போட்டிக் கூட்டம் நடத்த திருச்சிக்கு வரவில்லை: கருணாநிதி

திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசுகையில்,
திருச்சி நகரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல் கட்டிடம் தொடங்கப்படுகிறது, திறக்கப்படுகிறது என்று சொன்னால்தான் அது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் நான் அறிந்து பல ஆண்டு காலமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆட்சித் தலைவர் கட்டிடம் என்ற ஒன்று இல்லை.
அலுவலகம் இல்லாவிட்டாலும் கூட, இங்குள்ள நம்முடைய நண்பர்கள், பொது வாழ்வில் அக்கறை கொண்டுள்ள தோழர்கள் மக்களிடத்திலே தொடர்பு கொண்டு அவர்களுடைய தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து உழைத்து இந்த வட்டாரத்தினுடைய தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியதன் மூலம், ஒரு கட்டிடம் இல்லாத குறை தெரியாமலே செய்து வந்தார்கள்.
அதில் குறிப்பாக இன்றைக்கு நான் திறந்து வைக்கப் போகின்ற அருமை நண்பர் அன்பில் தர்மலிங்கம் அவர்களுடைய சிலை இருக்கிறதே, அந்த சிலைக்குரிய நண்பர் அன்பில் தர்மலிங்கம் திருச்சி மாவட்டத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லாத குறையை போக்கிக் கொண்டிருந்தவர்.
திருச்சி நகரத்து பிரச்சனையானாலும், நகரத்தைச் சுற்றி இருக்கின்ற கிராமப்புறங்களின் பிரச்சனையானாலும், அன்பில் கிராமத்திலே இருக்கின்ற பிரச்சினையானாலும், ஸ்ரீரங்கத்திலே உருவாகிற பிரச்சனையானாலும் அடிமட்டத்திலே இருக்கின்ற தோழர்கள், அவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும்- அவர்கள் யாரை சந்தித்தால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நண்பர்களில் ஒருவராக மக்கள் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் அன்பில் தர்மலிங்கம்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மாவட்ட ஆட்சித் தலைவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாவட்டத்திலே உருவாகிற பிரச்சனைகளை, மக்களுடைய தேவைகளை உணர்ந்து அதற்காகப் பாடுபடுகிறவர்கள் இருந்தால் தனியாக ஒரு கட்டிடம் தேவையில்லை.
தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமே இல்லாத மாவட்டங்களின் குறையை நீக்கி, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் ஆட்சித் தலைவர் அலுவலகம் இருந்தே ஆக வேண்டும், அதற்கு எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என்று திட்டமிட்டு அதை நிறைவேற்றி வருகின்ற அரசாகத்தான் இன்றைக்கு இருக்கின்ற திமுக அரசு இருக்கிறது.
அரசு அல்லது அரசுக்கு துணையாக இருக்கக் கூடிய அதிகாரிகள், அவர்கள் தங்கி பணியாற்றுகின்ற அலுவலகங்கள் இவைகளெல்லாம் சீராக, செம்மையாக இருந்தால்தான் ஆட்சிப் பரிபாலனம் முறையாக நடைபெற முடியும்.
இங்கே இத்தனை கோடி ரூபாயில் இவ்வளவு கட்டிடங்களை கட்டியிருக்கிறோம் என்றெல்லாம் அடுக்கடுக்காக புள்ளி விவரங்களை இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள்.
நானும் எங்கெங்கே என்னென்ன கட்டிடங்கள் கட்டப்பட்டன என்ற பட்டியலை உங்களுக்கு படித்துக் காட்ட முடியும். ஆனால் கட்டிடங்கள் அல்ல முக்கியம், இங்கே ஒரு கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டோம், அதில் அமர்ந்து பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு தான் முக்கியம்.
அந்தத் தொடர்பு தூய்மையானதாக, பொதுநல நோக்கம் கொண்டதாக இருந்திட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஏறத்தாழ 12 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. 12 கோடியா, 13 கோடியா அல்லது 22 கோடியா என்பதல்ல முக்கியம். அதில் பணியாற்றுகின்ற அலுவலர்கள், அதிகாரிகள் சிப்பந்திகளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கின்றவர்கள் வரையில் மக்களிடத்திலே எந்த அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களுக்கு மரியாதை தந்து, அவர்களிடம் அன்பு காட்டி, இந்த அரசுக்கு நல்ல பெயரை வாங்கித் தருவது மாத்திரமல்ல, அவர்களும் நல்ல பெயர் வாங்கி, தாங்கள் ஆற்றுகின்ற கடமைகளால் நாடு வாழவும், நலிவு தீரவும், நன்மைகள் பெருகவும் பயன்பட வேண்டும்.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருடைய அலுவலகம் அழகாக இருக்கிறது என்று சொன்னால் மாத்திரம் போதாது. அருமையாக அங்கே பணி நடைபெறுகிறது என்ற புகழைப் பெற வேண்டும்.
அப்படிப்பட்ட புகழையும், பெயரையும் பெற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாத்திரமல்ல, மாநிலத்தினுடைய ஆட்சித் தலைமையகத்திலே இருக்கின்ற அமைச்சர்களானாலும் சரி, செயலாளர்களானாலும் சரி, அவர்களுக்கு கீழே பணியாற்றுகின்ற அலுவலர்களானாலும் சரி, அவ்வளவு பேரும் தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட்டால் தான் இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அர்த்தம் உண்டு.
ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலே பணத்தை செலவிட்டு, கட்டடங்கள் கட்டி, அவைகளுக்கு திறப்பு விழா நடத்தி, எங்கள் நகரத்தில் பார், பார்! எவ்வளவு பளபளப்பான வீதிகள்! எவ்வளவு பளபளப்பான மின்னுகின்ற கட்டிடங்கள்! என்று சொல்வதிலே இருக்கின்ற பெருமையைவிட, பட்டினி இல்லாத மக்கள், பசி இல்லாத மக்கள், பாடுபடுகின்ற மக்களுக்கு உணவு கிடைக்கின்ற அளவிலே திருப்தியாக வாழுகின்ற மக்கள் என்ற அந்த நிலைதான் ஒரு நாட்டில் எல்லோராலும் போற்றப்படக்கூடிய, பாராட்டப்படக்கூடிய நிலையாகும்.
அந்த நிலையை எய்திட திமுக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மேலும் இந்தத் திட்டங்கள் தொடரும். தொடர்ந்தால் மாத்திரம் போதாது. அதை நடத்துகின்றவர்கள் நல்லவர்களாக, எந்தவிதமான ஊழலுக்கும், எந்தவிதமான தவறுக்கும், குற்றச்சாட்டுக்கும் உரியவர் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
திருச்சி நகரம் எனக்குப் புதிதல்ல. காலையிலே பத்திரிகைகளிலேகூட, கருணாநிதி ஏதோ போட்டிக் கூட்டம் நடத்துவதற்காக வந்திருக்கிறார் என்று போடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். கருணாநிதிக்கும் திருச்சிக்கும் எவ்வளவு காலமாக தொடர்பு என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
அன்பில் தர்மலிங்கம் காலத்திற்கு முன்பிருந்தே திருச்சிக்கும் எனக்கும் தொடர்புண்டு. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், அன்பிலுக்கு மூத்தவர் தோழர் பராங்குசம். பொன்மலையிலே தொழிற்சங்கத்தை நடத்திய பராங்குசத்திலே இருந்து அண்மையிலே மறைந்து போன தோழர் காமாட்சி வரையில் எனக்கு நன்றாகத் தெரியும்.
நானும், அன்பிலும், பராங்குசமும், தோழர் காமாட்சியும் ஒரு போராட்டத்திலே திருச்சி நகரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம். மறுநாள் காலையில் பத்திரிகையில், “கருணாநிதியுடன் ஒரு ஸ்ரீ" உட்பட 10 பேர் கைது" என்று செய்தி வந்தது.
எனக்கு ஆச்சரியம். ஆச்சரியத்தை விட பயம். ஒரு ஸ்ரீ" உட்பட 10 பேர் கைது என்று போட்டிருக்கிறார்களே, நமக்குப் பரவாயில்லை, வீட்டிலே என்ன நினைப்பார்கள் என்று பயம். பிறகு யார் அந்த ஸ்ரீ" என்று விசாரித்தபோது, நிருபர் விளக்கினார்.
அவர்தான் காமாட்சி. அவருடைய பெயர் காமாட்சி சுந்தரம். எல்லோரும் அவரை காமாட்சி, காமாட்சி என்று அழைத்து அப்படியே பழகிவிட்டது. பத்திரிகை நிருபர்கள், காமாட்சி என்றதும், அவர் ஒரு பெண்தான் போலும் என்று, ஒரு ஸ்ரீ உட்பட கருணாநிதியுடன் 10 பேர் கைது"" என்றெல்லாம் எழுதினார்கள்.
அப்படி எனக்கு பழக்கப்பட்ட ஊர் திருச்சி. இந்தத் திருச்சியிலேதான் என்னுடைய அரசியல் பொது வாழ்வு ஆரம்பமாயிற்று. இந்த திருச்சி மாவட்டத்திலேதான், குளித்தலை தொகுதியில் 1957ல் திமுக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேன். 57லே வெற்றி பெற்று இதுவரையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றுக் கொண்டே இருக்கிறேன்.
இப்படி, திருச்சியின் வரலாற்றில் என்னுடைய வரலாறும் இணைந்திருக்கிறது. இந்த திருச்சி மாவட்டத்திலேதான் கல்லக்குடி போராட்டத்திலே ஈடுபட்டு, 6 மாத காலம் கடுங்காவல் சிறை என்று திருச்சியிலே சிறைப்பட்டிருந்தேன்.
ஆனால், திருச்சிக்கு நான் இப்பொழுதுதான் முதல் முதலாக வருகிறேன் என்று ஒரு பத்திரிக்கைக்காரர் எழுதுகிறார் என்றால், அவர் திருச்சி நகரத்தினுடைய வரலாற்றையோ, அல்லது என்னுடைய வரலாற்றையோ ஒழுங்காகப் படிக்காதவர் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?. திருச்சிக்கு இன்று நான் வருவது 100வது தடவையோ, 101வது தடவையோ!
வெற்றிகரமாக நூறாவது நாள் என்று சினிமாப் படங்களுக்கு விளம்பரம் செய்கிறார்களே, அதைப்போல, வெற்றிகரமாக 100வது கூட்டம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நான் திருச்சிக்கு வந்துகொண்டே இருக்கிறேன்.
ஆனால், திருச்சிக்கும் எனக்கும் உள்ள சொந்தத்தை, உறவை, நட்பை, கடமையை உணராதவர்கள் அப்படி எழுதியிருக்கிறார்கள். திருச்சியிலே என்னுடைய நண்பர்கள் எவ்வளவு பேர் என்பதை அறியாதவர்கள், திருச்சியிலே என்னை வாழ்த்தி வழியனுப்பி கல்லக்குடி போராட்டத்துக்கு அனுப்பி வைத்தவர்கள் யார் யார் என்பதை எல்லாம் அறியாதவர்கள் வேண்டுமானால்- மன்னிக்க வேண்டும், கல்லக்குடி என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இதைச் சொல்லலாம், இதை எழுதலாம்.
ஆனால் திருச்சிக்குப் பழக்கப்பட்டவன் என்கின்ற முறையிலே நான் திருச்சியின் தேவைகளை உணருகிறேன். என்னென்ன குறைகள் என்பதை அறிகிறேன். அந்தக் குறைகளையெல்லாம் ஈடுசெய்வதில், நிவர்த்தி செய்வதில் அக்கறை காட்டுகின்றேன். இன்னும் அக்கறை காட்டுவேன், காட்டிக்கொண்டே இருப்பேன்!
தம்பி சிவா இங்கே பேசும்போது மேஜர் சரவணன் இந்த ஊர்க்காரர். கார்கில் போராட்டத்திலே உயிரிழந்தார். அவருடைய பெயரை ஒரு சாலைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்றார்.
எந்த சாலை பிரச்சனை எதுவும் வராத அளவிற்கு உள்ள சாலையாக இருக்கிறதோ, அந்தச் சாலையை அவர்கள் எனக்கு தெரிவிப்பார்களேயானால் எடுத்துச் சொல்லி, மேஜர் சரவணன் சாலை என்ற அந்தச் சாலை உருவாக என்னுடைய ஒத்துழைப்பைத் தருவேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications