பல்க் எஸ்எம்எஸ்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு இல்லை-மத்திய அரசு
டெல்லி: அயோத்தி தீர்ப்பையொட்டி அறிவிக்கப்பட்ட பல்க் எஸ்எம்எஸ்கள், எம்எம்எஸ்கள் மீதான தடையை நீடிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு பல்க் எஸ்எம்எஸ்கள், எம்எம்எஸ்கள் அனுப்ப மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்தத் தடையை அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்தது.
இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி, நாடும் பெரும் அமைதியுடனும், இயல்பான நிலையிலும் இருப்பதால் இந்தத் தடையை நீட்டிப்பதில்லை என்ற முடிவை அரசு எடுத்துள்ளது.
செப்டம்பர் 22ம் தேதி முதலில் இந்த தடை விதிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 23ம் தேதி முதல் நேற்று இரவு வரை இது நீட்டிக்கப்பட்டது.
மேலும், அயோத்தி தீர்ப்பையொட்டி நாட்டின் பதட்டமான பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த புற ராணுவப்படையினரையும் விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உ.பிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5200 புற ராணுவப் படையினரையும் முகாம்களுக்குத் திரும்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினரை சட்டசபைத் தேர்தல் நடைபெறும் பீகாருக்கு அனுப்புகிறது.
அதேசமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உ.பியில் 16 இடங்களில் அதி விரைவுப்படையினர் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.