For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போராட்டம் என்ற பெயரில் திமுக ஆட்சிக்கு எதிராக கலவரத்தை ஏற்படுத்துவதே பாமகவின் நோக்கம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுக ஆட்சிக்கு எதிராக கலவரத்தையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாமகவின் நோக்கம். இதைத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற பெயரில் போராட்டமாக நடத்துகிறார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:

கேள்வி: சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பா.ம.க. ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்தப் போவதாக அறிவிப்பு கொடுத்திருக்கிறார்களே?

பதில்: சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது திராவிடர் இயக்கமான தி.மு.க.வுக்கோ அல்லது தி.மு.க. ஆட்சிக்கோ உடன்பாடில்லாத ஒன்று என்பதுபோல கற்பனை செய்து கொண்டு, கிளர்ச்சிகளில் ஈடுபட்டு, தாங்கள்தான் அதற்கு மூலவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போக்கினை யார் கடைப்பிடிக்கிறார்கள் அல்லது எந்தக் கட்சி கடைப்பிடிக்கிறது என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

2011 ஜுன் திங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. சோனியா காந்தியும் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதுபற்றி உறுதிபடத் தெரிவித் திருக்கிறார். இந்தச் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருக்கின்றன.

இதற்கிடையே, தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஏதாவது கிளர்ச்சி செய்ய வேண்டும்; ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று எண்ணுகிறார்கள். மக்களைத் தூண்டிவிடுகின்ற தோரணையில் வெளியிடுகிற கிளர்ச்சி அறிவிப்பு எதனையும் - எந்த மக்களைக் கவர்வதற்காக செய்யப்படுகின்றதோ - அந்த மக்களே, அதன் உள்நோக்கத்தை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.

கேள்வி: இடஒதுக்கீடு கோரி வன்னியர் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பத்தினர்க்கு நீங்கள் செய்த உதவியை எல்லோரும் மறந்து விட்டார்களே?

பதில்: இடஒதுக்கீடு கோரி, 1987ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் உயிர்நீத்த 24 பேரின் குடும்பங்களுக்கு; 11 ஆண்டுகள் கழித்து கழக ஆட்சியில்தான், 1998ல் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அத்துடன், 24 தியாகிகளின் வாரிசுகளுக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.1,500 அனுமதிக்கப்பட்டது. அந்தக் குடும்ப ஓய்வூதியமும் மீண்டும் கழக ஆட்சியில்தான், 2006 நவம்பர் முதல், மாதம் ரூ.1,500ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கழக அரசு உதவிகள் செய்வதையும், சலுகைகள் வழங்குவதையும் கடமையாகக் கொண்டு ஆற்றி வருகிறது. இதனை சிலர் மறந்திருக்கலாம்; மனசாட்சி உள்ள எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. மறந்து விட்டார்கள் என்பது உண்மையானால்; மறந்தோர் செயலை நாமும் மறப்போம்!

கேள்வி: தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றனவே?

பதில்: 2006ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, இதுவரை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பேருந்து கட்டணம் எந்த நிலையிலும் உயர்த்தப்படவில்லை. இதுகுறித்து அவ்வப்போது அரசு சார்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒருசில நாளேடுகள் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சொல்ல வரும்போது; ஏதோ அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது என்பதைப் போன்ற தோற்றத்தை உள்நோக்கத்தோடு ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன.

தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவதைத் தடுப்பதற்கு அவ்வப்போது போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் திடீர்த் தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி தணிக்கைகள் நடக்கும்போது, அதிகமான கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்படும் நிகழ்வுகளில், சட்டப்படி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அபராதம் விதித்தல், உரிமத்தை இடைநீக்கம் செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கேள்வி: சென்னைத் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் கைவிடப்பட்டதாகவும், அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதே?

பதில்: சென்னைத் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் கைவிடப்படவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கென அறிவிக்கப்பட்டுள்ள காரணம் அடிப்படையற்றது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்களை இணைக்கின்ற நான்கு சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும் திட்டம் ரூ.600 கோடி மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினைச் செயல்படுத்திட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு, சென்னை துறைமுகக் கழகம், எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட "சென்னை எண்ணூர் துறைமுகச் சாலை நிறுமம்'' ஏற்படுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில் சாலைகளை விரிவுபடுத்தத் தேவைப்படும் நில எடுப்புப் பணிகளும், ஆக்கிரமிப்புகளை அகற்றுதலும், குடிநீர்க் குழாய்கள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கின்ற பணியும் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளன. கடலோரங்களில் ஏற்படுகின்ற நில அரிப்பைத் தடுப்பதற்காகவும், மறுகுடியமர்த்தல், சாலைப் பராமரிப்பு ஆகிய இதர பணிகளுக்காகவும், இதுவரை சென்னை எண்ணூர் துறைமுகச் சாலை நிறுமத்தால் இத்திட்டத்திற்காக ரூ.101 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திருத்திய மதிப்பீட்டிற்கான ஒப்புதலை அதனுடைய பங்குதாரர்கள் வழங்கியுள்ளனர். அதன்படி சாலை விரிவுபடுத்தும் பணிகளுக்கான திட்டமதிப்பீடு ரூ.270 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தை வேகமாக நிறைவேற்றுவதற்காக, தமிழக அரசு மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்பதை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசனும் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்பதைத் தெரிந்து கொண்டே, சென்னைத் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவதும், அதற்காகப் போராட்டம் என்று அறிவிப்பதும்; "நான் உட்கார்ந்ததினால்தான் பனம் பழம் விழுந்தது'' என்று காக்கை சொன்ன கதையாகத்தான் இருக்க முடியும்!

கேள்வி: விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குவதில் ஏதோ பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாக ஒரு நாளேட்டில் செய்தி வெளியாகி இருக்கிறதே?

பதில்: தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், 2006ம் ஆண்டு கழக அரசு பொறுப்பேற்றவுடன், முதல் நடவடிக்கையாக விவசாயிகளின் கடன் சுமையை நீக்கிடும் வகையில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கூட்டுறவுக் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்தது.

கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவி அளித்து, விவசாயிகள் தொடர்ந்து பயிர்க்கடன் பெறுவதையும் அரசு உறுதி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில், 2006-2007ம் ஆண்டில் 6,31,283 விவசாயிகளுக்கு 1,250 கோடியே 62 லட்சம் ரூபாயும்; 2007-2008ம் ஆண்டில் 6,48,397 விவசாயிகளுக்கு, 1,393 கோடியே 97 லட்சம் ரூபாயும்; 2008-2009ம் ஆண்டில் 6,91,192 விவசாயிகளுக்கு, 1,570 கோடியே 99 லட்சம் ரூபாயும்; 2009-2010ம் ஆண்டில் 8,98,540 விவசாயிகளுக்கு, 2,169 கோடியே 48 லட்சம் ரூபாயும் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டன. 2010-2011ம் ஆண்டில் ரூ.2,500 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முறையாகவும் எளிமையாகவும் கடன் வழங்கப்படுவதை இந்த அரசு கண்காணித்து வருகிறது.

22.9.2009 வரையிலான காலத்திற்கு சென்றாண்டு வழங்கப்பட்ட பயிர்க்கடன் ரூ.850 கோடியே 89 லட்சம். இந்த ஆண்டு 22.9.2010 வரை வழங்கப்பட்டுள்ள பயிர்க்கடன் 1,186 கோடியே 50 லட்ச ரூபாய்.

கூட்டுறவுப் பயிர்க்கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் மீதான வட்டியை முற்றிலும் ரத்து செய்யும் புரட்சிகரமான திட்டத்தை 2009-2010ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலேயே முதன்முதலாகச் செயல்படுத்தி வருவது கழக அரசுதான் என்பதை தமிழக விவசாயப் பெருமக்கள் நன்றாகவே அறிவார்கள். எனவே, பயிர்க்கடன் வழங்குவதில் பின்னடைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X