For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளில் பீர் கிடைப்பதில்லை-குடிகாரர்கள் வேதனை!

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் கடைகளில் பீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாம். பீர் கேட்டால் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் கூடுதல் விலைக்கு விற்பதாக புலம்புகிறார்கள் குடிகாரர்கள்.

எந்த மது இல்லை இந்த திருநாட்டில் என்று பாட்டுப் பாடலாம். அந்த அளவுக்கு தமிழக டாஸ்மாக் கடைகளில் எந்த மது வகைக்கும் தட்டுப்பாடே இல்லாமல் அரசு கருத்துடன் இருந்து அனைத்து சரக்குகளும் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்கிறது.

ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகளில் பீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். பீர் கேட்டால் இல்லை என்கிறார்கள் என்று குடிகாரர்கள்
வேதனை தெரிவிக்கிறார்கள்.

டாஸ்மாக் வசம் தமிழகத்தில் 7434 மதுக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ. 13,000 கோடி வருவாய் அள்ளிக் கொட்டுகிறது. பண்டிகை நாட்களின்போது வழக்கத்தை விட கூடுதலாக சரக்கை வைத்து விற்பனை செய்கிறார்கள்.

தீபாவளிப் பண்டிகையின்போது சரக்குத் தட்டுப்பாடு வந்து விடாமல் இருப்பதற்காக தயார் நிலையில் அனைத்து மது வகைகளையும் ஸ்டாக் வைத்திருந்தனர். மேலும் மாவட்டத்திற்கு 10 லாரிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். எந்தக் கடையிலிருந்தாவது சரக்கு இல்லை என்று தகவல் வந்தால் மின்னல் வேகத்தில் கொண்டு போய்க் கொடுப்பதற்காக இந்த துரித ஏற்பாடு.

தீபாவளி பண்டிகை நாட்களில் எதிர்பார்த்த அளவை விட அதிகளவில் விற்பனை நடந்துள்ளது. ரூ.345 கோடிக்கு பிராந்தி, விஸ்கி, பீர், ஒயின் உள்ளிட்ட அனைத்து மதுவகைகளும் விற்று தீர்ந்தன. டாஸ்மாக் நிர்ணயித்த தொகை ரூ.300 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிப் பண்டிகையின்போதே பீர் இருப்பு குறைவாகவே இருந்ததால் அப்போதே பற்றாக்குறையாகி விட்டது. தற்போது சுத்தமாக இல்லை என்கிறார்களாம். வழக்கமாக வெயில் காலங்களில்தான் பீருக்கு டிமான்ட் அதிகம் இருக்கும். மழைக்காலத்தில் பீரை நாடுவோர் எண்ணிக்கை குறையும்.

ஆனால் வழக்கத்திற்கு விரோதமாக இப்போதும் பீரை நாடி வரும் குடிகாரர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாம். ஆனால் அவர்களுக்கேற்ற சரக்கு இருப்பு இல்லாமல் டாஸ்மாக் கடைகள் திண்டாடுகின்றனவாம்.

தீபாவளி சமயத்தில் பீர் விலைகூடுதலாக்கி விற்கப்பட்டதாம். ரூ.79க்கு விற்க கூடிய ஃபுல் பாட்டில் ரூ.100க்கு விற்றனர். ரூ.35 ஆஃப் பாட்டில் ரூ.50க்கு விற்கப்பட்டது.

உற்பத்திகுறைவு காரணமாகவே பீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் மட்டுமே பீர் உற்பத்தி செய்வதால்தான் இந்த நிலையாம்.

குடிகாரர்கள் மனம் கவர்ந்த 5000 என்ற பீர் தற்போது சப்ளை இல்லை. அதற்குப் பதிலாக கிங்பிஷர், கல்யாணி, புளூ நைட், சிங்காரோ, புல்லட், சான்ட் பைப்பர், ஒரியன் ஆகிய பீர்கள் மட்டுமே சப்ளை செய்யப்படுகின்றன.

தேவைக்குக் குறைவாக பீர் இருப்பதால் கடைகளில் விலையைக் கூட்டி வைத்து வசூலிப்பதாக குடிகாரர்கள் புலம்புகிறார்கள்.

அரசு இதில் தலையிட்டு போதிய அளவுக்கு பீர் கிடைக்கவும், சரியான விலையில் விற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X