For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனக்குத் தானே மொட்டை போட்டுக் கொண்டு கடத்தல் நாடகமாடிய பொறியியல் மாணவர்

Google Oneindia Tamil News

சென்னை: தனக்குத் தானே மொட்டை போட்டுக் கொண்டு தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய மாணவரின் குட்டு சில மணி நேரங்களிலேயே அம்பலமாகி விட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் அடுத்துள்ள மழுவங்கரணை கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் எம்.பிரசன்னா. 21 வயதான இவர் பழையனூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ 2ம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பில் பிரசன்னா சுமார்தானாம்.

தற்போது செமஸ்டர் தேர்வு வரவுள்ளால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்தார் பிரசன்னா. நேற்று அவர் ஜெராக்ஸ் எடுக்கப் போவதாக வீட்டில் கூறி விட்டு சோத்துப்பாக்கம் வந்துள்ளார். அங்கு ஜெராக்ஸும் எடுத்தார்.

அப்போது மொட்டைத் தலையுடன் இருந்த 4 பேர் காரில் வந்து பிரசன்னாவிடம், ஒரு கல்லூரியின் பெயரை கூறி வழி கேட்டனர். அவர்களிடம் கல்லூரிக்கு செல்லும் வழியை பிரசன்னா கூறி இருக்கிறார்.

அப்போது அந்த நபர்கள், நேரில் வந்து காட்டுங்களேன் என்று கூறவே காரில் ஏறினாராம் பிரசன்னா. அதன் பிறகு பிரசன்னா மதியம்வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் பயந்து போன அவரது தந்தை மோகன் செல்போனில் மகனைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில் பகல் 2.11 மணி அளவில் பிரசன்னாவிடமிருந்து அவரது தந்தை மோகனுக்கு போன் அழைப்பு வந்தது. அப்போது பிரசன்னா தன்னை சிலர் காரில் கடத்தி சென்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

என்னை, நான்கு பேர் மொட்டைத் தலையுடன் வந்து அருகில் உள்ள கல்லூரிக்கு வழி கேட்டு என்னை காரில் அழைத்துச் சென்றனர். அவர்களால் கடத்தப்பட்ட நான் கைகால்கள் கட்டப்பட்டு கிடக்கிறேன். காரில் வந்தவர்கள் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். நான் எங்கிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

கோவை கடத்தல், சென்னை கடத்தல் சம்பவங்கள் மனதில் வந்துபோக பீதியடைந்த மோகன் உடனே மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்ஹா மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் குதித்தார். அனைத்துச் சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டன. செல்போன் அழைப்பு வந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அது, விழுப்புரம் பெரியார்நகர் செல்போன் டவரிலிருந்து சிக்னல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு போலீஸார் செல்ல முடிவு செய்த நிலையில், இன்னொரு போன் அழைப்பு வந்தது. பிரசன்னா செல்போனிலிருந்து வந்த அதில் வேறு ஒருநபர் பேசினார். அவர், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஒரு வாலிபர் மயங்கிய நிலையில் கிடக்கிறார். அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து தகவல் சொல்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இடத்தைப் போலீஸார் கண்டுபிடித்துச் சென்றனர். மேலும்,
ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற இணைப்பு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பிடாகம் மேம்பாலம் அருகில் பிரசன்னாவை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றுள்ளதாக பிரன்னாவின் பெற்றோருக்குத் தகவல் வந்தது. அவர்கள் போலீஸாருக்கு இதைத் தெரிவிக்கவே, காஞ்சீபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன், பயிற்சி டிஎஸ்பி பூங்காவனம், விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் ஆகியோர் பிடாகம் அருகில் நின்றிருந்த பிரசன்னாவை மீட்டனர்.

அவரிடம் விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து என்ன நடந்தது என்று கேட்டபோது பதில் ஏதும் சொல்லாமல் மெளனமாகவே இருந்துள்ளார் பிரசன்னா.

இதையடுத்து காஞ்சீபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. பாலசுப்பிரமணியத்திடம் மாணவர் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு வழியில் முதலுதவி சிகிச்சையும் அளித்தனர்.

பிறகு காஞ்சிபுரம் எஸ்.பி.அலுவலகத்திற்கு மாணவரை அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் அவர் ஒன்றும் பேசாமலேயே இருந்தார். இதனால் இந்த கடத்தல் நாடகமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் மாணவர் பிரசன்னா மொட்டை போட்டுள்ளார். இதையும் அவரே போட்டிருக்கலாம் என்றும், விழுப்புரத்தில் மொட்டை போட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

பிரசன்னாவின் தந்தை மோகன் ஒரு சாதாரண விவசாயி. 2 ஏக்கர் மட்டுமே நிலம் வைத்துள்ளார். பிரசன்னா அவருக்கு ஒரே மகன். 2 மகள்களும் உள்ளனர். மோகனின் மனைவி இருதய நோயாளி. வசதியில்லாத குடும்பம் மோகன் குடும்பம். எனவே பணம் கேட்டு மிரட்ட பிரசன்னாவை யாரும் கடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் கருதுகிறார்கள்.

படிப்பு சரியாக வராததால், கடத்தல் நாடகமாடியிருக்கலாம் அல்லது காதல் விவகாரத்தில் அவராகவே வீட்டை விட்டு வெளியேறி நாடகமாடியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரசன்னாவை யாரும் கடத்தியிருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்போது போலீஸார் வந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X