For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் தென்தமிழகம்-நாகையில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து 4-வது நாளாக மழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக வேதாரண்யத்தில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி விட்டன.

இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையாலும், வடமேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும், வயல்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் நேற்று தொடர்ந்து 4-வது நாளாக மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பிற்பகல் 2 மணி வரை விடாமல் கொட்டித் தீர்த்தது.

இதனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள்ளும், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புக்குள்ளும் மழைநீர் புகுந்தது. மேலும் திருவாரூர் காட்டுக்காரத்தெரு, மன்னார்குடி அசேஷம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

நாகையில் பெய்து வரும் மழையால் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின. மீனவர்களும் நேற்று 2-வது நாளாக மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47) என்ற விவசாயி நேற்று முன்தினம் இரவு கடுங் குளிருக்கு பலியானார். கடமடை பாசன ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தலைஞாயிறு, கீழையுர் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தஞ்சையில் கனமழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பயிர் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

தஞ்சையை அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்தடி பகுதியில் வசித்து வந்த ரமேஷ் என்பவரின் வீட்டுச்சுவர் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்தது. இதில் ரமேஷும், அவரது மனைவி சசிகலாவும் காயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வசிஷ்ட நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று காலை இந்த நதியில் உள்ள தடுப்பணையில் ஏறி மும்முடியை சேர்ந்த சண்முகம் (16), பார்த்தசாரதி (15), ராமச்சந்திரன் (17), ரமேஷ் (17) ஆகிய 4 மாணவர்கள் டியூசன் படிக்கச் சென்றவர்கள் தீடீரென்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த இளம் பெண் சிவபாக்கியம் (25) அந்த மாணவர்களை காப்பாற்றினார்.

தலைவாசல் பெரியேரி பகுதி வசிஷ்ட நதியில் பெரியேரி-ஆறகளூர் கிராமங்களை இணைக்கும் தரைப்பாலம் உள்ளது. நேற்று இந்த தரைப்பாலம் வழியாக சென்ற சுரேஷ் (16) என்ற மாணவரை வெள்ளம் அடித்துச்சென்றது. இதைப் பார்த்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் ஆற்றில் குதித்து அம்மாணவனைக் காப்பாற்றினார்.

ராமநாதபுரத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டமே வெள்ளக்காடாக உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 145 கண்மாய்கள் நிரம்பி உள்ளன. மானாமதுரையில் வீடுகளுக்குள் கண்மாய் நீர் புகுந்ததில் 2 வீடுகள் இடிந்தன.

மதுரை மாவட்டத்தில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வைகையிலும் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.

தூத்துக்குடியில் நேற்று காலை 9 மணிக்கு பெய்யத் தொடங்கிய கனமழை மதியம் 12 வரை நீடித்தது. மழையினால் ஓட்டப்பிடாரம், குலசேகரநல்லூர், எட்டயபுரம், வாலம்பட்டி, ஈராச்சி உள்ளிட்ட இடங்களில் 103 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

குமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. கடல்சீற்றம் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று காலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

வேலாயுதம் குலசேகரன்புதூர் சந்திப்பில் டீக்கடை நடத்தி வந்த வேலாயுதம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையவில்லை.

கடந்த ஒரு வார காலமாக மழை பெய்தும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாதததால் அணைக்கு நீர்வரத்து மிகக்குறைவாக உள்ளது. இதனால் அணைகள் நிரம்பவில்லை.

கடந்த ஆண்டு இதே தேதியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.60 அடியாக இருந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 3-ல் ஒரு பங்கு தண்ணீர்தான் இருப்பில் உள்ளது.

நேற்று முன்தினம் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 75.46 அடியாக இருந்தது. நேற்று 78.74 அடியாக உயர்ந்து உள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.10 அடியில் இருந்து நேற்று 61 அடியாக உயர்ந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 1,046 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதே போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் பெய்த தொடர் மழையால் விளந்தை பெரிய ஏரி உடைந்தது. இதனால் சுமார் 200 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. 100 ஏக்கர் நெல், கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கின. 3 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன.

ஆண்டிமடத்தை அடுத்த கவரப்பாளையம் அருகே மேய்ந்து கொண்டிருந்த கறவை மாடு மின்சாரம் தாக்கியதால் இறந்தது. இதேபோல அழகாபுரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு கறவை மாடு இறந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X