For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மைக்குப் புறம்பாகவே தொடர்ந்து பேசி வருகிறார் அறிக்கை நாயகி ஜெ.-ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Stalin
சென்னை: நான் ஏற்கனவே கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த தனது புகார்களுக்கு ஜெயலலிதா ஆதராங்களைக் காட்ட வேண்டும் என்று சவால் விட்டும் இதுவரை ஆதாரத்தைக் காட்டாத ஜெயலலிதா தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் குறித்து உண்மைக்குப் புறம்பான அறிக்கை விட்டுள்ளார் என்று சாடியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

அறிக்கை நாயகி ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், திருமண உதவித் திட்டம் எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது என்று மு.க. ஸ்டாலின் பேசியிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று முதல் பத்தியில் எழுதியிருக்கிறார்.

ஆனால் அவரே இரண்டாவது பத்தியின் இறுதியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமணத் திட்டம் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில்; அதில் பல் வேறு முறைகேடுகள் நடத்தப்பட்டதன் காரணமாக அந்தத் திட்டம் தனது ஆட்சியில் கைவிடப்பட்டது என்று எழுதி, எனது கூற்றை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எப்படியோ அந்தத் திட்டத்தை ஏதோ ஒரு காரணம் கூறி அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டதா இல்லையா? எனவே நான் பேசியதில் எந்தவிதமான உண்மைக்கு மாறான தகவலும் இல்லை என்பது புலன் ஆகிறதா, இல்லையா?

திருமண உதவித் திட்டத்தைப் பொறுத்தவரையில் ஐந்து திட்டங்கள் தமிழக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் நான்கு திட்டங்கள் சிறிய திட்டங்கள், அவை குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் நடத்தப் படுபவை.

உதாரணமாக ஏழை விதவைகளாக இருப்பவர்களின் மகள்கள் திருமண உதவித் திட்டம்; இந்தத் திட்டம் ஈ.வெ.ரா மணியம்மையார் பெயரால் இயங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை விதவைகளாக இருப்பவர்களின் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும்.

இரண்டாவது திட்டம் ஆதரவற்ற பெண்களுக்கு திருமணத்திற்காக நிதி உதவி அளிக்கும் திட்டம். இத்திட்டம் அன்னை தெரசா பெயரால் இயங்கி வரும் திட்டமாகும்.

மூன்றாவது திட்டம் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் பெயரால் இயங்கி வரும் விதவைகள் மறு மணத் திட்டம். இத்திட்டத்தின்படி விதவைகள் மறுமணம் செய்து கொண்டால் அதற்காக வழங்கப்படும் திட்டம்.

நான்காவது திட்டம், கலப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு எனது பாட்டியார் அஞ்சுகம் அம்மையார் பெயரால் நடத்தப்படும் திட்டம்.

இந்த நான்கு திட்டங்களையும் விட, மிகப் பெரிய திட்டம் அனைத்து ஏழைப் பெண்களுக்கும் திருமணம் செய்து கொள்வதற்காக வழங்கப்படும் நிதி உதவித் திட்டம் தான். அந்தத் திட்டம் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரால் வழங்கப்பட்டு வரும் நிதி உதவித் திட்டம். இத்திட்டத்தின்கீழ் தான் அதிகமான பெண்கள் பயன் பெற முடியும்.

இத்திட்டம் 1989ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அந்தத் திட்டத்தின்கீழ் தரப்பட்ட உதவித் தொகை 5 ஆயிரம் ரூபாய். இந்த உதவித் தொகை மீண்டும் 1996ஆம் ஆண்டு தி.மு. கழகம் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்த போது 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு-அந்த ஐந்தாண்டு கால கழக ஆட்சியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 593 ஏழைப் பெண்களுக்கு 228 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா தனது அறிக்கையிலே அவருடைய ஆட்சியிலே, ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையரது மகள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் என நான்கு விதமான திருமண நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று சொல்லியிருக்கிறார்.

இதிலே கூட மூன்று திட்டங்கள் யாருடைய நினைவால் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிடும்போது கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் எனது பாட்டியார் அஞ்சுகம் பெயரிலே உள்ள திட்டம் என்பதால், பெருந்தன்மையோடு(?) அந்தப் பெயரை விட்டு விட்டார்.

மேலும் ஜெயா தனது அறிக்கையிலே இலவசத் திருமணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்றும் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஏழை விதவைத் தாய்மார்களின் பெண்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தன! ஆனால் 1967ஆம் ஆண்டிலேயே தி.மு. கழக ஆட்சியில் கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது.

குறிப்பாக ஏழைப் பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் திருமண நிதி உதவி அளிக்கும் திட்டம் தி.மு.கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான்; 3-6-1989 அன்று தான்; அவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

இதற்கும் அம்மையார் ஆதாரம் கேட்பாரானால், 1989-90ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பக்கம் 40, பத்தி 80இல் “மகளிர் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் தருகிற மற்றுமொரு ஏற்பாடாக, வறுமையில் உழலும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், எட்டாம் வகுப்பும், அல்லது அதற்கு மேலும் படித்துத் தேறியிருந்தால், அவர்களின் திருமணச் செலவுக்காக ரூ. 5000 உதவித் தொகை வழங்கப்படும்" என்பதாகும்.

இத்திட்டம் 1989 ஆம் ஆண்டு ரூ.5000/- நிதி உதவித் திட்டத்துடன் துவங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது தொடர்ந்து ரூ.5000/-த்திலிருந்து 21.08.1996 முதல் கழக ஆட்சியில் ரூ.10000/-மாக உயர்த்தப்பட்டது. எனினும் இத்திட்டம் 01.04.2002 முதல் ஜெயலலிதா ஆட்சியிலே நிறுத்தப்பட்டது.

பின்னர் 03.06.2006 முதல் இவ்வரசால் மீண்டும் செயல்படுத்தப்பட்டு ரூ.15000/-என உதவித்தொகை உயர்த்தப்பட்டது; மீண்டும் 20.03.2008 முதல் இந்த ஆட்சியில் நிதி உதவியை ரூ.20000/- என்று உயர்த்தி வழங்கியது.

மாநில அரசின் முன்னோடி நிதித் திட்டமாக இத்திட்டம் செயல்படுவதால் இதுவரை வழங்கப்பட்ட நிதியுதவித் தொகை 1.4.2010 முதல் ரூ.20,000/- லிருந்து ரூ.25,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் இலங்கை அகதிகள் சுமார் 1100 பேர்கள் பயனடையும் விதத்தில் ரூ.2.20 கோடி ரூபாய் அதற்காகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டில் மட்டும் 4,39,538 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியாக ரூ. 832.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத் தான் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் நிறுத்தி விட்டார். அதே நேரத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் நான்கு பிரிவினருக்கு நிதி உதவிகள் வழங்கியதாக அவரது அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே, அந்த நான்கு திட்டங்களுக்கும் சேர்ந்து எத்தனை பேர்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது தெரியுமா?

2006ஆம் ஆண்டு முதல் 2009-2010 வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரால் உள்ள ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 44 ஆயிரத்து 456 பேர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அம்மையார் குறிப்பிட்டுள்ள அந்த நான்கு திட்டங்களின் மூலமாக இதே கால கட்டத்தில் நிதி உதவி பெற்றோரின் எண்ணிக்கை 17,585 பேர்கள் மட்டுமே!

மேலும் ஒரு உதாரணம் கூறுகிறேன் - ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் நிறுத்தி வைத்த பெரும்பான்மையான ஏழைப் பெண்களுக்கு உதவிடக் கூடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான திருமண நிதி உதவித் திட்டத்திற்காக மட்டும் 2010-2011ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 1,20,000 குடும்பங்கள் பயனடையத் தக்க விதத்தில் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் இந்தக் கழக ஆட்சியில் செலவழிக்கப்பட்ட 882 கோடியே 6 இலட்சம் ரூபாய். பயனாளிகள் 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 பேர்கள்.

ஆனால் ஜெயா தனது ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தியதாக அறிக்கையிலே கூறியுள்ள அந்த நான்கு திட்டங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கினார் என்பதிலிருந்தும், அந்த ஐந்தாண்டு காலத்தில் அவர் கூறும் நான்கு திட்டங்களின் மூலமாக 17,585 பேர்களுக்கு 22.51 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது என்பதிலிருந்தே, யாருடைய அறிக்கை கோயபல்ஸ் அறிக்கை, விஷமத்தான அறிக்கை, கண்டிக்கத்தக்க அறிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு “கலைஞர் வீடு வழங்கும் திட்ட"த்தில் முறைகேடுகள், தவறுகள் என்றெல்லாம் இதே ஜெயலலிதா அம்மையார் அறிக்கை விட்டு, அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவர் தயாரா? என்று நான் சவாலே விடுத்ததும், அதற்குப் பிறகு வாரங்கள் பல கடந்தும் கூட, அந்தச் சவாலுக்குப் பதில் கூற முன் வராத எதிர்க்கட்சித் தலைவர் ஜெயா என்னுடைய இந்தப் பதிலுக்காவது அவரது அடுத்த அறிக்கையிலே விளக்கம் தருவாரா? தரத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X