For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்தது-புயலாக மாறுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, இன்று மாலையில் வலுவடைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. தமிழகத்திற்கு வெகு அருகே அது நிலை கொண்டிருப்பதால் சென்னை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று மாலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு அவசர செய்தி அறிக்கையில், தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்த அதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும்.

மேலும், இது வடமேற்கு திசையில் தமிழக கடலோரத்தை ஒட்டி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகபப்ட்டனம் மாவட்ட கரையோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். கன மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று பிற்பகல் நிலவரப்படி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியான ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியிருந்தது. இதனால் படிப்படியாக மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாழ்வுப் பகுதி தற்போது வலுவடைந்து விட்டது. இதனால் இது புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

தற்போது தெற்கு கடலோர ஆந்திராவில் மிக தீவிரமாகவும், தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிரமாகவும் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது.

கடலோர தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 17 செமீ மழையும், மகாபலிபுரத்தில் 13, அண்ணா பல்கலைக்கழகம், டிஜிபி அலுவலகம் தலா 11, சென்னை விமான நிலையம், சென்னை தலா 10, செங்கல்பட்டு, செய்யூர், பொன்னேரி தலா 9, தாம்பரம் 8, காஞ்சிபுரம் 7 செமீ மழை பெய்துள்ளது.

புயல் சின்னம் காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களிலும், உள்புற தமிழகத்தில் சில இடங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோரத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக கன மழை பெய்யும்.

சென்னைக்கான வானிலை எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில், அவ்வப்போது மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்யலாம். தரைக்காற்று பலமாக இருக்கும். சில நேரங்களில் அதி வேகமாக இருக்கும்.

அடுத்த 48 மணிநேரத்தில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு வானிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக மாறியிருப்பதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக அரியர்ஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கன மழை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட்டிருந்தது. அதில் 2 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

சிதம்பரத்தில்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் நகரின் பல பகுதிகள் மிதக்கின்றன. குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அங்கு ஏற்கனவே முகாம்களில் பல ஆயிரம் பேர்தங்கியுள்ளனர். தற்போது மேலும் பல நூறு பேர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகள் மிதக்கின்றன

காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்னும் மழை ஓயவில்லை. அங்கு ஏற்கனவே பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப் போய் விட்டன.

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. நாகை மாவட்டத்தில் மட்டும் 45000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

12 மாவட்டங்களுக்கு விடுமுறை:

மழை தொடர்ந்து விளாசி வருவதால் தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், நாகை, விழுப்புரம், திருச்சி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேபோல, தஞ்சை, ராமநாதபுரத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வடுமுறை விடப்பட்டுள்ளது.

மழைக்கு இதுவரை 181 பேர் பலி:

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இதுவரை 181 பேர் பலியாகியுள்ளனர். இதில் திருவாரூரில்தான் உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாகும்.

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு நோய் பாதிப்பு வந்து விடாமல் தடுக்க முன்னேற்பாடுகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

திருவாரூரில் கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதுவரை தென் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த மழை தற்போது வட தமிழகத்தை வெள்ளக்காடாக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 88 ஆண்கள், 52 பெண்கள், 41 குழந்தைகள் என மொத்தம் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

29 ஆயிரத்து 155 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளது. இதில் முற்றிலும் சேதம் அடைந்த வீடுகள் 4185 ஆகும்.

அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு:

இதற்கிடையே கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ள 9 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வரும் அதிகாரிகள் குழு இன்று 2வது நாளாக தனது ஆய்வைத் தொடருகிறது.

சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் வெள்ள பாதிப்பை நேற்று அதிகாரி ககந்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாயிகளை சந்தித்துப் பேசினார்.

அப்போது விவசாயிகள் கூறுகையில், ஆண்டுதோறும் வீராணம் ஏரி நிறையும்போது அதன் உபரி நீர் வெளியாகி நூற்றுக்கணக்கான கிராமங்களை கடுமையாக பாதிக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி ஏரியை ஆழப்படுத்துவதுதான். ஏரியின் நீர் இருப்பு அளவை 2 டிஎம்சியாக உயர்த்தி ஏரியை ஆழப்படுத்தினால்தான் கிராமங்களையும், மக்களையும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர் நிலங்களையும்காப்பாற்ற முடியும் என்று கூறினர்.

இதேபோல நாகை மாவட்டத்தில் அதிகாரி சிவதாஸ் மீனா ஆய்வு நடத்தினார். இன்றும் ஆய்வு தொடருகிறது. தங்களது ஆய்வை முடித்துக் கொண்ட பின்னர் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக தங்களது அறிக்கையை அதிகாரிகள் குழு முதல்வரிடம் ஒப்படைக்கும்.

விமானப் போக்குவரத்து பாதிப்பு:

சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும், சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதமாக வருகின்றன, செல்கின்றன. லூப்தன்சா விமானம் தொடர் மழைகாரணமாக தரையிறங்க முடியாமல் பெங்களூக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நேற்று 117 பயணிகளுடன் அந்தமான் சென்ற கிங்பிஷர் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாததால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அனைவரும் அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

கொடைக்கானலில் கடும் குளிர்:

மலைவாசஸ்தலமான கொடைக்கானலில் மழையுடன் மிகக் கடுமையான குளிரும் அடிப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால், வெள்ளி நீர்வீழ்ச்சி,பாம்பார் அருவி,பியர்சோழா அருவி,செண்பகா அருவி,வட்டக்கானல் அருவி மற்றும் நீர்வரத்துப் பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் பழனி வத்தலகுண்டு மலைச் சாலைகளான பேத்துப்பாறை, பெருமாள் மலை, லாஸ்காட் சாலை, பி.எல். செட்,சவரிக்காடு,வட்ட மலை ஆகிய இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. சாலைகளில் அதிகமான தண்ணீர் தேங்கி உள்ளது.

கடந்த இரு நாள்களாக மழை குறைந்து விட்டாலும், கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால், ஏராளமானோர் குறிப்பாக வயதானோர், குழந்தைகள், பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர். காய்ச்சலும் பரவி வருவதால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மதுராந்தகம்-6 ஏரிகளில் உடைப்பு:

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையினால் சில நாட்களுக்கு முன்பு பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.

தற்போது தோட்டநாவல் ஏரி, புதுப்பட்டு தாங்கல் ஏரி, பசும்பூர் ஏரி, ஜமீன்பூதூர் சித்தேரி, கொள்ளம்பாக்கம் ஏரி, மாம்பட்டு ஏரி ஆகியவைகளில் உடைப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று மணல் மூட்டைகளை அடுக்கி நீர் வெளியேறுவதை தடுத்தனர்.

மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட தெருவில் வசித்தவர் அர்ச்சுனன்(52). இவர் வெள்ளக்கொண்ட அகரம் ஆற்றுப்படுகையில் ஆற்றை கடந்து கொண்டிருந்தார்.

அப்போது வெள்ள நீரில் அவர் அடித்து செல்லப்பட்டார். பிறகு சிறிது தூரத்தில் அவர் பிணமாக மிதந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சூனாம்பேடு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X