For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை முதலீடாகப் போட்டு முளைத்த நிறுவனங்கள்-சிபிஐ கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

Green Houe Promoters Ltd
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து இந்தியா முழுவதும் ஏகப்பட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஊழல் பணத்தை இந்த நிறுவனங்களில்தான் முடக்கி வைத்துள்ளதாகவும் அது சந்தேகப்படுகிறது. நேற்று நடந்த 2வது ரெய்டின்போது இதுதொடர்பான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவே முன்னுரிமை தரப்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

34 இடங்களில் ரெய்டு

நேற்று அதிகாலை முதல் இரவு வரை டெல்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடத்தினர்.

டெல்லியில் நீரா ராடியா, முன்னாள் டிராய் அமைப்பின் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயின், அவரது சகோதரர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடந்தது.

தமிழகத்தில் பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் உள்ள ராஜாவின் வீடு, நண்பர் சாதிக்பாட்சாவின் பங்குதாரர் சுப்புடு என்கிற சுப்ரமணியன் வீடு ஆகியைவை சோதனைக்குள்ளாகின.

ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வங்கிக் கணக்கும் ஆராயப்பட்டது. கலியபெருமாள் நடத்தி வரும் டிரேடிங் ஏஜென்சியிலும் சோதனை நடந்தது.

திருச்சி அருகே திருவானைக்காவில் ராஜாவின் சகோதரி சரோஜாவின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

ராஜாவின் சகோதரர் ஆ.ராமச்சந்திரன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் தகவலமைப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். திருச்சி அருகே சிவராமன் நகரில் அவருடைய வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராஜாவின் முன்னாள் உதவியாளர் அகிலன் ராமநாதன் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

2 பத்திரிக்கையாளர்களிடம் தீவிர விசாரணை

நேற்று நடந்த சோதனையில் இரண்டு பத்திரிக்கையாளர்களும் விசாரணைக்குள்ளாயினர். ஒருவர் நக்கீரன் இணையாசிரியர் காமராஜ். இன்னொருவர் திருச்சியைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர். இவர் ஒரு டிவி சேனலில் செய்தியாளராக உள்ளார். இவருக்கும் ராஜாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ராஜா குறித்த பல விவரங்கள் இவருக்குத் தெரியும் என்கிறார்கள். இதனால்தான் நரசிம்மனின் இருப்பிடத்தையும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் காமராஜ், ராஜாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூரைச் சேர்ந்தவர். கடந்த 25 வருடங்களாக பத்திரிக்கையாளராக இருந்து வருகிறார். மிகவும் கடினமான உழைப்பாளி என்பதோடு, கடுமையாக உழைத்து முன்னேறி உயர்வைக் கண்டவர்.

மிகவும் அடக்கமான நபர். சந்தனக் கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய சமயத்தில்தான் காமராஜ் வெளியுலகில் நன்கு பிரபலமானார். திமுக அரசால் அப்போது வீரப்பனிடம் தூது சென்றார் நக்கீரன் ஆசிரியர் கோபால். அந்த சமயத்தில் நக்கீரன் பத்திரிக்கை நிர்வாகத்தையும், வீரப்பன் தொடர்பான செய்திகளையும் மிகவும் திறமையோடு கவனித்து ஒருங்கிணைத்தவர் காமராஜ். நக்கீரன் ஆசிரியரும், காமராஜும் இணைந்து திறமையோடு செயல்பட்டதால்தான் ராஜ்குமாருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் அவரை பத்திரமாக மீட்க முடிந்தது. இதனால் அனைவரின் பாராட்டுக்கும் உரித்தானார்கள் அப்போது.

சாமியார் நித்தியானந்தாவின் காம லீலைகளை அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்விலும் காமராஜுக்கு முக்கியப் பங்கு உண்டு. நக்கீரன் ஆசிரியரின் மிகவும் அன்புக்குரியவர் மட்டுமல்லாமல் நம்பிக்கைக்குரிய படைத் தளபதி போலவும் திகழ்ந்து வருபவர் காமராஜ்.

இன்னொரு செய்தியாளரான நரசிம்மன், ராஜாவுக்குத் தொடர்பான ரியல் எஸ்டேட் பணிகளில் பங்குடையவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால்தான் இவரையும் சிபிஐ தனது வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

அடுத்த ரெய்டு எங்கே?

கிட்டத்தட்ட முதல்வர் கருணாநிதியின் வீட்டு வாசல் வரை சிபிஐ சோதனை நெருங்கி விட்டதால் நேற்றைய ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வரை ரெய்டு வந்து விட்டதால், அடுத்து யாரிடம் சிபிஐ விசாரணை நடத்தப் போகிறது, அடுத்த ரெய்டு எங்கே என்ற பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன் நீரா ராடியாவுடன் ராஜாத்தி அம்மாளும், அவரது ஆடிட்டரும், உதவியாளருமான ரத்தினம் தொலைபேசியில் பேசிய உரையாடல் வெளியாகி விட்டதால் இந்த பரபரப்பு கூடியுள்ளது.

ரெய்டின் உண்மையான நோக்கம் என்ன?

இந்த நிலையில் நேற்று நடந்த ரெய்டின் முக்கிய நோக்கம் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் மிகப் பெரிய அளவில் பணம் பார்த்துள்ளனர் சிலர் என்று சிபிஐ சந்தேகிக்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் எங்கு முடக்கி வைத்திருக்கிறார்கள் என்று சிபிஐ விசாரித்தபோது அவர்களுக்குப் புதிய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இந்தப் பணத்தை வங்கியிலோ வேறு எங்குமோ போடாமல், புதுப் புது நிறுவனங்களைத் தொடங்கி அதில் முதலீடாகப் போட்டு வைத்துள்ளனர் அவர்கள் என்பது சிபிஐயின் புதிய கண்டுபிடிப்பு. இதை உறுதிப்படுத்திக் கொள்ளவே நேற்று அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது சிபிஐ என்கிறார்கள்.

நேற்று டெல்லியில் 7 இடங்களில் சோதனை நடந்தது. ஆனால் தமிழகத்தில்தான் வரலாறு காணாத வகையில் 27 இடங்களில் சோதனை நடந்தது. இதில் சென்னையில் மட்டும் சோதனைக்குள்ளானவை 20 இடங்களாகும்.

நேற்று நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தொடர்புடைய ஆவணங்களை சரி பார்ப்பதிலும், அவர்களின் முதலீடு விவரம், அந்தப் பணம் எப்படி வந்தது என்பது உள்ளிட்ட விவரங்களைத் திரட்டுவதிலும் சிபிஐ கவனமாக இருந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கம் வகிக்கும் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்கள் அங்கும் வகிக்கும் நிறுவனங்கள் இவை.

ஊழல் மூலம் கிடைத்த பணத்தை இந்த நிறுவனங்களைத் தொடங்கி அதில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பாகவே ரெய்டு நடந்தது. அதில் எங்களுக்குத் தேவையான சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன என்கிறார்கள்.

பலத்த சந்தேகத்தில் கிரீன்ஹவுஸ் பிரமோட்டர்ஸ்

சிபிஐயின் வலையில் சிக்கியுள்ள நிறுவனங்களில் முக்கியமானு கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ். இது முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷாவின் நிறுவனமாகும். ராஜா அமைச்சரான பின்னர்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி முன்பு இயக்குநராக இருந்தார். பின்னர் விலகி விட்டார். காரணம் தெரியவில்லை. ஆனால் ராஜாவின் அண்ணன் கலியபெருமாள் தொடர்ந்து இந்த நிறுவனத்துடன் இணைந்திருந்தார்.

இதுதவிர ஈகுவஸ் எஸ்டேட்ஸ், ஷிவம் டிரேடிங், கதிர் கமாங் டிரேடிங், கோவை ஷெல்டர்ஸ், ஏஜிஎம் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ், வெல்கம் கம்யூனிகேஷன்ஸ், ஜெனிம் எக்ஸிம் வென்சர், ஷெல்லி தெர்மோ பிளாஸ்டிக், ஐயப்பா என்டர்பிரைசஸ், ஷெல்லி ரோட் சிஸ்டம்ஸ், சென்னையில் உள்ள ஜேஜி எஸ்க்போர்ட்ஸின் மூன்று கிளைகள் ஆகியவை குறித்துதான் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதுதவிர கனிமொழியை இயக்குநராகக் கொண்டுள்ள, ஜெகத் கஸ்பாரின் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மையம் அமைப்பும் சிபிஐயின் கண்காணிப்புக்குள்ளாகியுள்ளது. நேற்று நடந்த ரெய்டு, விசாரணையின்போது தமிழ் மையத்தில்தான் தீவிர விசாரணையும், தேடுதலும் நடந்துள்ளது.

என்ன ஆவணம் சிக்கியது?

நேற்று நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக மட்டும் சிபிஐ கூறியுள்ளது. இருப்பினும் என்ன கிடைத்தது என்பதை அது தெரிவிக்கவில்லை.

இருப்பினும் நேற்று நடந்த சோதனையின் முக்கிய நோக்கம், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை நிறுவனங்களைத் தொடங்கி அதில் முடக்கி வைத்திருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. மேலும் இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, விதி மீறல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் நிதி நிர்வாகம், பண முதலீடுகள், யார் யாரெல்லாம் இதில் பங்கு வகிக்கின்றனர் என்பது குறித்த பல விவரங்களை நேற்று தோண்டி எடுத்து ஆராய்ந்துள்ளனர்.

துபாய் நிறுவனத்துக்கு சிக்கல்?

நேற்று சோதனை நடந்த இடங்களில் துபாயைச் சேர்ந்த தமிழக தொழிலதிபர் ஒருவரின் வீடும் ஒன்று. இவர் வளைகுடாவைச் சேர்ந்த முன்னணி நிறுவன அதிபராவார். தமிழகத்தில் சமீப காலத்தில் இவர் மிகப் பெரிய அளவில் கட்டிட கான்டிராக்டுகளைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் இவரது நிறுவனம்தான் பெற்றுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்து கொண்டு உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாமின் பெரும்பாலான பங்குளை இவரது நிறுவனம் தான் வாங்கியது. பின்னர் அந்த நிறுவனத்தை எடிசலாட்-டிபி என்று பெயர் மாற்றினர். இந்த எடிசலாட் நிறுவனம் அபுதாபியைச் சேர்ந்ததாகும். கம்பெனி கைமாறியது 2009ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது.

இந்த நிறுவனம்தான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக தற்போது முக்கியமாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால்தான் சாதிக் பாட்ஷாவிடம் தீவிர விசாரணையை நடத்தியுள்ளது சிபிஐ.

நேற்றைய ரெய்டில் அதிகம் சோதனைக்குள்ளானவர்கள் முன்னாள் அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள்தான். இதனால் ராஜாவை சிபிஐ படு வேகமாக நெருங்கி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிக்கலில் கஸ்பார்?

இருப்பினும் நேற்றைய சோதனையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது தமிழ் மையத்தில் நடந்த சோதனைதான். நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை ஜெகத்கஸ்பாரிடம் விசாரணை நடத்தினர் சிபிஐ அதிகாரிகள். மேலும், லஸ் சர்ச் சாலையில் உள்ள அவரது நிறுவனத்தின் கதவுகளை மூடி விட்டு உள்ளே வைத்து தீவிர விசாரணையும் நடந்துள்ளது. இந்த இடத்தில்தான் கஸ்பாரின் குட்வில் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் இயங்கி வருகிறது.

2002ம் ஆண்டு தனது தமிழ் மையம்அமைப்பைத் தொடங்கினார் கஸ்பார். தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் மையமாக இது அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் இது ஈடுபட்டிருந்தாலும், கனிமொழியுடன் இணைந்து நடத்திய சென்னை சங்கமமம்தான் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

நேற்று நடந்த சோதனையில் சிபிஐ முக்கியப் புள்ளிக்கு மிக அருகில் வந்து விட்டதாகவும், இன்னும் சில சோதனைகளுக்கு அது திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இனிமேல் வரப் போகும் ரெய்டுகள் எந்த திசையில் செல்லும், யாரை அது பாதிக்கும், யார் சிக்குவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.

English summary
CBI sleuths have seized incriminating documents from their yesterday"s raid. CBI searched the houses and offices of Nira Radia and Raja"s relatives and associates yesterday. 34 places were searched by the CBI. Raids were conducted in Delhi, Chennai, Trichy, Perambalur and Ariyalur. CBI grilled Fr. Jagth Gaspar and others. They have seized some documents from Gaspar"s office. However CBI didn"t elaborate about their seizure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X