For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றி மிதப்பில் அதீத 'ஆட்டத்தில்' தொண்டர்கள்-ஜெ. கவனிக்க வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளதைத் தொடர்ந்து தொண்டர்கள் குறிப்பாக புது மாப்பிள்ளையாக மாறியுள்ள தேமுதிகவினர் ஆங்காங்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்காக போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு இவற்றுக்கு ஆரம்பத்திலேயே ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க முயல்வது நல்லது.

சாதாரண வெற்றி பெற்றாலே கட்சிக்கார்களைப் பிடிக்க முடியாது. தற்போது அதிமுக பெற்றுள்ள வெற்றி, குறிப்பாக தேமுதிகவுக்கு கிடைத்துள்ள வெற்றி மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. எனவே தேமுதிகவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.

தேர்தல் முடிவு வெளியான நாளன்று வாகனங்களை படு வேகமாக ஓட்டிக் கொண்டு அவர்கள் போன விதமும், பட்டாசுகளை ஆங்காங்கு வெடித்த விதமும் மக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் முகச் சுளிப்பையே ஏற்படுத்தியது.

கையில் அதிகாரம் வரப் போகிறது, அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்ற பயமும் கூடவே மக்களுக்கு வந்துள்ளது.

அதேபோல போலீஸாரும் தற்போது அதிமுகவின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

நேற்று ஜெயலலிதா தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள எம்.ஜிஆர் சிலை, பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்தையே நிறுத்தி விட்டனர் போலீஸார். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.

போக்குவரத்துப் போலீஸார் தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்ததாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒருபக்கம் வாகனங்களை சிக்கல் இல்லாமல் செல்ல வழி வகுத்து விட்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இப்படியா போக்குவரத்தை முடக்கி வைப்பது என்று அவர்கள் முனு முனுத்தனர். அதற்குள்ளேயே இப்படியா என்று அவர்கள் சலித்துக் கொண்டனர். கடந்த 1991 முதல் 96 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் தோல்வி அடைய இந்த போக்குவரத்துக் குளறுபடிகளும் ஒரு முக்கியக் காரணம்.

சென்னை நகரில் ஜெயலலிதா எங்கு சென்றாலும் உடனே அந்தப் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் போலீஸார், ஜெயலலிதா போன பின்னர்தான் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அதிமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

தற்போது மிகப் பெரிய வெற்றியுடன் கோட்டைக்குத் திரும்பியுள்ள அதிமுக இந்த விஷயத்தில் மிகக் கவனமுடன் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆட்சி மீதும், அதிமுக மீதும் அதிருப்தியும் வந்து விடும் என்பதை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.

நல்லாட்சியைத் தருவது மட்டும் ஒரு கட்சிக்கு முக்கியமானதல்ல. அவர்களையும் அறியாமல் கெட்ட பெயரை சம்பாதிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டியதும் அவசியமானது.

அதேபோல ஆட்சி நம் கையில் என்ற மமதை தொண்டர்களுக்கும் வந்து விடாமல் இருப்பதும் முக்கியம். அதிமுகவினர் மட்டுமல்ல, முதல் முறையாக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள தேமுதிகவினரும் மிகுந்த கவனத்துடன், அடக்கத்துடன் இருந்து தாங்கள் இதுவரை பெற்றுள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வதும், அதை பலமாக்கிக் கொள்வதும் அவசியம்.

அதை விட்டு விட்டு 'வடிவேலுவை அடிப்போம்' என்ற ரீதியில் கிளம்புவது அவர்களுக்கு சமூகத்தில் நிச்சயம் நல்ல பெயரைக் கொடுக்காது.

அப்படி இல்லாமல் அதிமுகவினரும், தேமுதிகவினரும் அடிதடியில் குதித்தால், இவங்களுக்கு திமுக பரவாயில்லையே என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளது.

English summary
ADMK is set to form the new govt tomorrow. But there are few bad things are back to trouble the party and govt. Unncessary traffic jam made yesterday in Anna Salai during Jayalalitha's visit to leaders' statues. This made the people to face horrible time in scorching summer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X