For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Ghulam Nabi Azad and Karunanidhi
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை சந்திப்பதற்காக கருணாநிதி டெல்லி வந்துள்ளார். திகார் சிறையில் நேற்று அவர் கனிமொழியையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

கனிமொழி கைது நடவடிக்கையாலும், தமிழகத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்வியாலும் திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு சீர்குலைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கான பொறுப்பாளரான ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று இன்று சந்தித்தார்.

''உண்மையை உணர்ந்துள்ளார் கருணாநிதி, உறவு பாதிக்கப்படாது'':

இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய குலாம் நபி, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி கைது செய்யப்பட்டதால் திமுக-காங்கிரஸ் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசு எந்த வகையிலும் தலையிடவில்லை, தலையிடாது.

ஒரு பெண் என்ற வகையில் கனிமொழி சிறையில் இருப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வருத்தமடையச் செய்துள்ளது. ஆனால், இதில் யாரும் ஏதும் செய்ய முடியாது என்பதே உண்மை.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருவதையும், இதில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதியும் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார். கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, அரசியலை மிகச் சிறப்பாக உணர்ந்தவர். இந்த விஷயத்திலும் அவர் உண்மை நிலையை புரிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் காங்கிரசும் ஏதும் செய்ய முடியாது என்பதையும் அவர் உணர்ந்துள்ளார் என்றார்.

ஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:

அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.

கனிமொழி நலமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை சட்டரீதியில் எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார் என்றார்.

நேற்றிரவு கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இணையமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

நாராயணசாமி பொறுப்பு வகிக்கும் பெர்சனல் துறையின் கீழ் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று கனிமொழியை முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

திமுக சட்டசபை தலைவர்-ஆலோசனை:

முன்னதாக நேற்று திமுகவின் சட்டசபைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தலைவராக இருக்க திமுக தலைவர் கருணாநிதியும் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் மறுத்துவிட்டதால் நாம் ஏற்கனவே தெரிவித்தது போல துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கருணாநிதி டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பட்டுக்கோட்டை, ஓசூர், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் ஆகிய 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதிகளின் புதிய எம்எல்ஏக்களான பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஓசூர் கோபிநாத், கிள்ளியூர் ஜான் ஜேக்கப், விளவங்கோடு விஜயதரணி, குளச்சல் பிரின்ஸ் ஆகியோர் இன்று காலை சத்திய மூர்த்தி பவனுக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
Senior Congress leader Ghulam Nabi Azad called on DMK chief M Karunanidhi here today. Azad, who is in charge of Congress affairs in Tamil Nadu, came to the hotel where Karunanidhi is staying and met him. Karunanidhi, who came here yesterday to meet his daughter Kanimozhi in Tihar jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X