ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Surjit Singh Barnala
சண்டிகர்: ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல பழுத்த அரசியல்வாதியான சுர்ஜித் சிங் பர்னாலா, ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், 86 வயதாகும் நிலையிலும் மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். வருகிற சட்டசபைத் தேர்தலில் பஞ்சாபில் 3வது அணி அமைத்து தனது கட்சி தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பஞ்சாபின் முக்கிய அரசியல் தலைவர்களில் பர்னாலாவும் ஒருவர். ஒரு முறை முதல்வராகவும், 3 முறை எம்.பியாகவும், 6 முறை எம்.எல்.ஏவாகவும், 2 முறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

ஆரம்பத்தில் சிரோன்மணி அகாலிதளக் கட்சியில் இருந்தவர். பின்னர் அவருக்கும், தற்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சிரோன்மணி அகாலிதளம் (லோங்கோவால்) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

இந்த நிலையில், இடையில் ஆளுநர் பதவி வகித்தார். தமிழக ஆளுநராக நீண்ட காலம் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று சண்டிகர் திரும்பினார். அவர் தற்போது மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.

அவர் ஆளுநராக இருந்து வந்த காலத்தில் பர்னாலாவின் கட்சியை அவரது மனைவி சுர்ஜித் கவுரும், மகன் ககனாஜித் கவுரும் பார்த்து வந்தனர். தற்போது மீண்டும் பர்னாலாவே கட்சிப் பொறுப்பை கையில் எடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாதல் கட்சி தவிர்த்த பிற கட்சிகளுடன் இணைந்து 3வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக கூறியுள்ளார். மேலும் பிரகாஷ் சிங் பாதல் மிகப் பெரிய ஊழல் பேர்வழி என்றும் அவர் கடுமையாக வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாதல் தலைமையில் பஞ்சாப் நாளுக்கு நாள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பஞ்சாப் முன்னேறவில்லை.

நிர்வாக சீரழிவு, ஊழல்தான் இதற்கு முக்கிய காரணம். அரசியலில் பாதல் நுழைந்தபோது அவரிடம் ஒன்றும் இல்லை. இப்போது கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. ஊழலில் ஈடுபட்டதால் இவ்வளவு சொத்து குவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பல கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்றார் பர்னாலா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former TN governor S.S.Barnala has re entered active Politics. Recently he was retired from TN Governorship. He said to the reporters that, My party will form a third front and face the Assembly polls.
Please Wait while comments are loading...