For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் அமைத்த நிபுணர் குழுவை தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறது கேரளா- ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று சொல்லி கேரள மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தவும், சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள அதிகாரக் குழுவிடம் உண்மை விவரங்கள் இல்லாமல் பயம் சார்ந்த விஷயங்களை அறிக்கையாக சமர்ப்பித்து அந்த குழுவை தன் பக்கம் ஈர்க்கும் வகையிலும் செயல்படுவது போல் தோன்றுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:

கேரள முதல்வர் தங்களை சந்தித்ததாகவும், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள மக்களை பாதுகாப்பதற்கு ஒரே தீர்வு தற்போதைய அணைக்குப் பதிலாக புதிய அணையை கட்டுவதுதான் என்று கோரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தலாம் என்று 2006-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்து விட்ட நிலையில், கேரள அரசாங்கம், மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறது.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று சொல்லி கேரள மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தவும், சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள அதிகாரக் குழுவிடம் உண்மை விவரங்கள் இல்லாமல் பயம் சார்ந்த விஷயங்களை அறிக்கையாக சமர்ப்பித்து அந்த குழுவை தன் பக்கம் ஈர்க்கும் வகையிலும் செயல்படுவது போல் தோன்றுகிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்த முடியும் என்று சுப்ரீம் கோர்ட் 27.2.2006 அன்று தீர்ப்பு வழங்கியது. அணை முழு பாதுகாப்பாக உள்ளது என்றும் அணையை பாதுகாக்க தமிழக அரசு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அந்த அணையை புத்தம்புது அணை போல் மாற்றி இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டது.

அணை பாதுகாப்பு குறித்து 1979-ம் ஆண்டே கேரள அரசு பிரச்சினையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து, அணையை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர், அணை முழு பாதுகாப்புடன் இருப்பதாக சொன்னார். அதோடு அந்த அணையை பாதுகாக்க 1980-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசு எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள அரசும் மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுரையும் வழங்கினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருந்து வருகிறது. புதிய அணை போன்று இயங்கி வருகிறது. இந்த கருத்தை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

அணையின் கீழ்ப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பு மீதும் தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளது. அணை பாதுகாப்பாக இருப்பதற்கு என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமோ அவை அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

மூன்றாவது மண்டலம் பிரிவின் கீழ் வரும் முல்லைப் பெரியாறு அணை, இந்தியன் ஸ்டாண்டர்டு கோட் விதிமுறைகளின்படி, பூகம்பத்தை தாங்கக்கூடிய அளவுக்கு உரிய முறையில் வடிவமைத்து கட்டப்பட்டு இருக்கிறது என்று தமிழக அரசு கருதுகிறது. கடந்த 18.11.2011 நிகழ்ந்த நில அதிர்ச்சி ஒரு துளி கூட அணையின் மீது பாதிப்பு ஏற்படுத்தவில்லை. உண்மையைச் சொன்னால், அணை பகுதியில் நில அதிர்ச்சி உணரப்படவே இல்லை.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்ட அதிகாரக்குழு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தி இருக்கிறது. தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு குறித்து இதுவரை எந்தவித எதிர்மறையான கருத்தையும் அது தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், கேரள அரசுக்கு தாங்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய அறிவுரைகள் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

1886-ம் ஆண்டு ஒப்பந்தம் மற்றும் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, 1970-ம் ஆண்டு போடப்பட்ட துணை ஒப்பந்தத்தில் தமிழகத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மதிக்கவும், கடந்த 27.2.2006 அன்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவை மதித்திடவும், 2006-ம் ஆண்டு செய்யப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்திடவும் கேரள அரசுக்கு தாங்கள் அறிவுரை கூற வேண்டும்.

தற்போதுள்ள அணை பாதுகாப்பாக இருப்பதாலும், இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருவதாலும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக கேரள மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தாமலும் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has asked the PM to stop Kerala's attempt to build a new dam across Mullai periyar. She has also alleged that, Kerala is attempting to divert the attention of SC appointed panel's probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X