For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி சென்னையில் கைது

Google Oneindia Tamil News

Chennai City
சென்னை: டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபரை சென்னையில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரும், அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்ட இன்னொரு நபரும் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட நபர்கள், டிசம்பர் 6ம் தேதி பெங்களூரில் பெரும் நாசவேலைக்குத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெங்களூர் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐபி உளவுப் பிரிவினர் ஒரு தீவிரவாத இயக்கத்தின் செல்போன் பேச்சுக்களைக் கண்காணித்து வந்தபோது, சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் விஜயராமன் நகரில் சில கல்லூரி மாணவர்கள் அந்தத் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தின் நிர்வாகிகளுடன் பேசியதும், அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இருவர் விஜயராமன் நகரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் உதவியுடன், மத்திய உளவுப்பிரிவு போலீசார் சேலையூர் விஜயராமன் நகரில் அந்த நபர்கள் தங்கியிருந்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கிருந்த 5 பேரை, புனித தோமையார் மலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்கள் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் நான்கு பேர் கல்லூரி மாணவர்கள் ஆவர். அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள். ஐந்தாவது நபரின் பெயர் முகம்மது அஸ்ரத் கான். இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் அஸ்ரத் கான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் பல வெடிகுண்டுச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்தனர். மற்ற நான்கு மாணவர்களில் அப்துல் ரஹ்மான் என்பவர், அஸ்ரத் கானின் உறவினர் ஆவார். இதையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்தனர். மற்ற மூன்று மாணவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர்.

அந்த அறையில் இன்னொரு முக்கிய நபரான ஆசிப் என்பவரும் உடன் இருந்துள்ளார். இவர் அஸ்ரத் கானின் கூட்டாளி ஆவார். போலீஸார் வரும் தகவலை முன்கூட்டியே ஊகித்து விட்ட அவர் அங்கிருந்து தப்பி விட்டார். அதேபோல சபீர் ரஹ்மான், முகம்மது இக்பால் உள்ளிட்ட மேலும் 3 மாணவர்களும் தப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த நால்வரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் குறித்த தகவல் பீகார் போலீஸாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அஸ்ரத் கானும், அப்துல் ரஹ்மானும் மீனம்பாக்கம் அருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். பின்னர் தாம்பரம் கோர்ட்டில் அவர்களை போலீஸார் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் அவர்களை டெல்லியிலிருந்து வந்த உளவுப் பிரிவு குழுவிடம் சென்னை போலீஸார் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்தியன் முஜாஹிதீன் இயக்கம், சிமி அமைப்பின் உதவியோடு, பெங்களூரில் டிசம்பர் 6ம் தேதி பெரும் நாச வேலைக்குத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெங்களூர் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்பது குறித்த தீவிர விசாரணை நடந்து வருகிறது.

English summary
An Indian Mujaheddin terror suspect and another person were arrested in Chennai. They were sent to Delhi after a probe by Chennai police. Arrested person Mohammad Asrath Khan had a plan to hold terror strikes in Bangalore on Dec 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X