For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம்.. தடுக்க ராணுவ வீரனை விடுதலை செய்த பிரபாகரன்'': அறிவுமதி

By Chakra
Google Oneindia Tamil News

Prabhakaran and Arivumathy
சேலம்: சிங்களப் பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் என்று கவிஞர் அறிவுமதி கூறினார்.

தமிழகத்தில் 1984ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் உதவியோடு விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கின.

அதே போல சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள புலியூர் என்ற இடத்திலும் ஒரு முகாம் இயங்கியது. இங்கு சுமார் 2,800 விடுதலைப் புலிகள் பயிற்சி எடுத்துவிட்டு இலங்கை சென்றனர்.

இங்கு பயிற்சியாளராக இருந்த பொன்னம்மான் என்பவர் இலங்கை போரில் மரணமடைந்த பின் அவரது நினைவாக இந்த ஊர் பொதுமக்கள் நினைவு நிழற்கூடம் ஒன்றை அமைத்துள்ளனர். இங்கு 1989ம் ஆண்டு முதல் வருடந்தோறும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை கொண்டாடி வருகின்றனர் இந்த ஊர் மக்கள் பலரும்.

நேற்றும் அதே போல இந்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் அறிவுமதி கூறியதாவது:

கொளத்தூரில் பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு புலி வீரன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது அந்த வீட்டில் இருந்த ஒரு அம்மையார் விருந்தினராய் வந்த அந்த வீரனுக்கு இரண்டு பிஸ்கட் துண்டுகளை கொடுத்து உபசரித்துள்ளார்.

அந்த வீரன் முகாமுக்கு சென்று அந்த அம்மையார் கொடுத்த இரண்டு பிஸ்கட் துண்டு பற்றி பொன்னம்மானிடம் சொன்னபோது, உனக்கு மட்டும் இரண்டு துண்டு பிஸ்கட் கிடைத்தால் போதுமா..? அதே பிஸ்கட்டை மற்றவர்களுக்கும் நீ கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டாமா..? அவர்களுக்கும் அந்த பிஸ்கட் மீது ஆசை இருக்காதா...? என்று கேட்டுள்ளார். தவறை உணர்ந்த அந்த புலிவீரன் தான் பிஸ்கட் உண்டதுக்காக மன்னிப்பு கேட்டுள்ளான்.

புலிகளின் இயக்கத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது என்பதால், முகாமில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதே அளவுக்கு பிஸ்கட் வாங்கிவரும்படி சொல்லி அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார் பொன்னம்மான்.

அந்த வீரன், வாகனத்தில் சென்று பிஸ்கட் வாங்கி வர தயாராகியுள்ளார், இந்த வாகனம் இயக்கத்துக்கு சொந்தமானது. அதை இப்போது நீ உன்னுடைய சொந்த வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று வாகனத்தில் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டா ர்பொன்னம்மான்.

பின்னர் அந்த வீரன் நடந்தே சென்று அனைத்து வீரர்களுக்கும் தேவையான பிஸ்கட்டுகளை வாங்கிக் மூட்டையில் கட்டித் தூக்கிக் கொண்டு வந்துள்ளார். தனது பிள்ளைகளிடம் பொன்னம்மான் எப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நான் இதைச் சொல்லுகிறேன், பொன்னம்மான் அப்படி நடப்பதற்கு காரணம்... என்ன...? அவருக்கு வழிகாட்டியான தலைவர் அப்படிப்பட்டவர்.

வீரம், அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும்.

திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைப் புலிகளிடம் சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சில வருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது.

தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப விஷயங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் ரயில் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை புலிகள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், ஏதோ காரணத்தால் அன்று அந்த ரயில் வரவில்லை. என்ன செய்வது?, ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது? என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள்.

தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள். அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள்.

இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண்.

கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும் எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா?. இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது.

அந்தப் பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல. இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார்.

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பெளத்த மத குரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மத குருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன்.

என் கணவன், மாமியார், மத குரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நோட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள்.

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த ராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார்.

பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்றார் அறிவுமதி.

English summary
LTTE leader Prabhakaran was so honest and right in his judgement that, he released a Singhala soldier when his wife was in big trouble, said lyricist Arivumathy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X