For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுதாவூர், கொடநாடு குறித்து அவதூறாகப் பேசிய ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை- அமைச்சர்

Google Oneindia Tamil News

Jayalalitha and Stalin
சென்னை: கொடநாடு எஸ்டேட் மற்றும் சிறுதாவூர் நிலம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை சம்பந்தப்படுத்தி உண்மைக்கு மாறாக பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின். அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையம், சட்டத் துறை அமைச்சர் மு.பரஞ்சோதி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நில அபகரிப்பு தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், வாரண்ட் வேண்டா குற்றங்கள் புரிந்தவர்களுக்கு எதிராக காவல் துறையினரால் கடைபிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை தான் இது.

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ என்று அஞ்சிய மு.க. ஸ்டாலின், தான் நேர்மையானவர் என்பதை காட்டிக் கொள்ளும் வகையில், காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று, கைதாகத் தயார் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்க வேண்டும் என்ற நினைப்புடனோ, அல்லது ஊழல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்துள்ள கனிமொழியை தியாகி போல் சித்தரித்து தி.மு.க. வரவேற்பு அளிப்பதன் மூலம் தனக்கிருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் அரசியல் முக்கியத்துவம் கனிமொழியின் பக்கம் திரும்பிவிடும் என்ற நினைப்பிலோ இது போன்ற நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கலாம்.

குடும்பச் சண்டையில், தான் ஒதுக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைக்கிறார் ஸ்டாலின். தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக நடத்துகின்ற இந்த நாடகத்தில், தேவையில்லாமல் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் வகையில், கொடநாடு மற்றும் சிறுதாவூரில் நில அபகரிப்புகள் நடைபெற்று இருப்பதாக அற்பத்தனமான, பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு மனுவை காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநரிடம் அளித்து இருக்கிறார் ஸ்டாலின். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, வஞ்சகத்தன்மை வாய்ந்தவை.

சிறுதாவூரில் உள்ள நிலங்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தும், 2006 ஆம் ஆண்டு, சிறுதாவூர் கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 27.7.2006 அன்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார் கருணாநிதி.

இது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக பொய்யாக புனையப்பட்ட, அடிப்படை ஆதாரமற்ற வழக்கு என்பதால், தி.மு.க. வினரைப் போல் ஓமந்தூரார் எஸ்டேட்டில் கட்டப்பட்ட கட்டத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை எதிர்த்து தங்கம் தென்னரசு மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது போல் அல்லாமல், துணிச்சலுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதை எதிர் கொண்டார்.

சிறுதாவூர் கிராம நில அபகரிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதியரசர் கே.பி. சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையம், முதலமைச்சருக்கு எதிராக எந்தவித குறிப்பிட்ட புகாரும் பெறப்படாததால், முதலமைச்சரை விசாரிக்க நோட்டீஸ் கூட அனுப்பப்படவில்லை என்று தெளிவாக, வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

முன்னாள் முதலமைச்சரும், ஸ்டாலினின் தந்தையுமான கருணாநிதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையமே முதலமைச்சருக்கு எதிராக எந்தவித புகாரும் இல்லை என்று தெரிவித்த பிறகு, ஸ்டாலின் இது போன்ற நில அபகரிப்பு பிரச்சனையை மீண்டும் எழுப்புவது மக்களை ஏமாற்றும் செயல் என்பதோடு மட்டுமல்லாமல், தன் மீதுள்ள நில அபகரிப்பு புகாரிலிருந்து மக்களை திசை திருப்பும் செயல் என்பது தெளிவாகிறது.

நீதியரசர் சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையம் எவர் மீதாவது குற்றம் சாட்டப்பட்டிருந்தால், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓர் ஆண்டிற்கும் மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சிவசுப்ரமண்யம் விசாரணை ஆணையத்தை நியமித்ததன் மூலம், மு.க. ஸ்டாலினும், அவருடைய தந்தை கருணாநிதியும் முகத்தில் கரியை பூசிக் கொண்டது தான் மிச்சம்.

கொடநாடு எஸ்டேட்டில் பொது மக்கள் பயன்படுத்துகின்ற பொது வழி உட்பட நிலங்களை இன்றைய முதலமைச்சர் அபகரித்துக் கொண்டதாக வாய்க்கு வந்தபடி புழுதி வாரி தூற்றி உள்ளார் மு.க. ஸ்டாலின் அவரது மனு முற்றிலும் தவறான தகவல்களை கொண்டதாக உள்ளது.

முந்தைய தி.மு.க. அரசு, கொடநாடு எஸ்டேட்டில் இன்றைய முதலமைச்சர் பங்குதாரர் என்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், உள் நோக்கத்துடன், அதிகார துஷ்பிரயோகம் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள சாலை பொது சாலை என்ற ஒரு பொய்யான அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் மூலம் கொடநாடு எஸ்டேட்டுக்கு சொந்தமான சாலையை அபகரிக்க திட்டமிட்டது.

இது தொடர்பாக எஸ்டேட் நிர்வாகம் தொடுத்த குற்றவியல் வழக்கு எண். ஆர்.சி. 1486 மற்றும் 1508 / 2007ல் சென்னை உயர் நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், இரு சாராரும் ஒத்துக்கொண்ட வகையில், இந்த சாலை தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்; இதில் சில காலமாக பொதுமக்கள் சில நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்; இதை வைத்து ஒரே நாளில் பொதுமக்கள் உரிமை கொண்டாட முடியாது.

அவ்வாறான உரிமை அவர்களுக்கு உள்ளது என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அவ்வழியே செல்வதற்கான உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதி மன்றத்தைத் தான் அணுகியிருக்க வேண்டுமே தவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133ன் படி நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கக் கூடாது. மேலும், புகார்தாரர்களே தங்களது சாட்சியங்களில் நில எடுப்பு நடவடிக்கையின் மூலம் பொதுச் சாலையை ஏற்படுத்தித் தர வேண்டுமென கோரியுள்ளதாக கூறியுள்ளபோது, அதிலிருந்து மாறுபட்டு தனியாருக்குச் சொந்தமான சாலையை இலவசமாக பயன்படுத்தும் அதிகாரம் உள்ளதாகக் கூறி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133ன் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133ன் கீழ் அவசர அதிகாரத்தினை பயன்படுத்துகிறோம் என்ற போர்வையில், புகார்தாரர்கள் என சொல்லப்படுவர்களுக்கு புதிய அதிகாரங்களை அதிகாரிகள் ஏற்படுத்தித் தர இயலாது.

இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பார்த்த பின், எதிர்மனுதாரர் சார் கோட்ட நடுவரின் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என நீதிமன்றம் கருதுகிறது. அந்தப் பகுதி மக்கள் ஒரு நிரந்தரமான, சட்டப்படியான தீர்வு காணப்பட வேண்டும் என்கிறபோது, எதிர்மனுதாரர் உள்ளிட்ட அதிகாரிகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 133ன் கீழ் குறுக்கு வழியை மேற்கொண்டு இருக்கக்கூடாது. எனவே, குற்றவியல் மனுக்கள் இரண்டும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.1.8.2007 மற்றும் 20.9.2007 நாளிட்ட சார் கோட்ட நடுவரின் ஆணைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அப்போதைய தி.மு.க. அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த சாலையை பொதுச் சாலை என்று அங்கீகரிக்காததோடு மட்டுமல்லாமல், கோடநாடு எஸ்டேட் தனது காவலாளியை அங்கு போடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்புகளிலிருந்து, கருணாநிதி தலைமையிலான அப்போதைய தி.மு.க. அரசு, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் எஸ்டேட் நிலத்தை வெளிப்படையாக அபகரிக்க நினைத்தது தெளிவாகத் தெரிகிறது. இந்த சாலை பொதுச் சாலை அல்ல, தனியார் சாலை என்பதால்தான், அப்போதைய அரசு நில எடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்தது. அதுவும் சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இவற்றிலிருந்து, அப்போதைய தி.மு.க. அரசு தான் கொடநாடு எஸ்டேட்டிற்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதே தவிர, கொடநாடு எஸ்டேட் எந்தத் தருணத்திலும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மனம் போன போக்கில் பொய்யான குற்றச்சாட்டுகளை விவேகமில்லாமல் உளறித் தள்ளியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

அவர் சுமத்திய சுமத்திய குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பார்க்காமல், அவரது மாய வலையில் பிரசித்தி பெற்ற சில பத்திரிகைகள் வீழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. மு.க. ஸ்டாலின் உண்மைக்கு முற்றிலும் புறம்பான அற்ப குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவினை அளித்து, முதலமைச்சரின் புகழுக்கு களங்கம் கற்பித்துள்ளதால், குற்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவராகிறார்.

எனவே அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Legal action will be taken against Stalin, said Minister Paranjothi. He slammed Stalin for spreading defaming informations against CM Jayalalitha regarding Siruthavoor and Kodanadu lands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X