For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் அமைதி திரும்புகிறது- கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் வர அனுமதி

Google Oneindia Tamil News

கம்பம்: தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி திரும்பி வருகிறது. புதிதாக எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறவில்லை. இதையடுத்து கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்திலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி கேரளாவில் சில சமூக விரோதிகள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தமிழகத்திலிருந்து போன ஐயப்ப பக்தர்களையும், அவர்களது வாகனங்களையும் தாக்கினர். பணப் பறிப்பில் ஈடுபட்டனர். பெண்களை மானபங்கப்படுத்தினர்.

இதனால் கம்பம் பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கேரளத்தவரின் கடைகள், வாகனங்கள் தோட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, தீவைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து உத்தமபாளையம் வட்டத்தில் போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர். அதேபோல கேரளாவின் குமுளியிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கேரளாவில் நடந்த வன்முறையால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளத்தவரின் கடைகள் தாக்கி நொறுக்கப்பட்டன. ஆலுக்காஸ் நகைக் கடைகளும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. மேலும் குமுளி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்திற்கும், கேரளாவுக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கேரளாவுக்கு காய்கறிகள், பால் என எதுவும் செல்லவில்லை.

நேற்று தமிழகத்தில் கேரளத்தவரின் கடைகள் உள்ளிட்டவை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குமுளிப் பகுதியில் தற்போது வன்முறை அடங்கியுள்ளது. புதிதாக எந்த வன் செயலும் நடைபெறவில்லை. அதேபோல கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது.

இதையடுத்து தற்போது கேரளாவிலிருந்து குமுளி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதேசமயம், தமிழகத்திலிருந்து குமுளி வழியாக வாகனப் போக்குவரத்துக்கு இன்னும் அனுமதி தரப்படவில்லை. மேலும், கேரளாவுக்கு காய்கறிகள் உள்ளிட்டவற்றை அனுப்ப கம்பம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்திலிருந்து வாகனப் போக்குவரத்து தொடங்காமல் உள்ளது. இதையடுத்து சபரிமலைக்குச் செல்வோர் தொடர்ந்து செங்கோட்டை வழியாக சென்று வருகின்றனர்.

அமைதி நிலவினாலும் கூட கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.

கடைகள் அடைப்பு

இதற்கிடையே, சின்னமனூர், கம்பம், உத்தமபாளையத்தில் இன்று வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் கடைகள் அனைத்தும் தொடர்ந்து மூடியே கிடக்கின்றன.

உசிலம்பட்டியில் ஆட்டோ, டாக்சி ஸ்டிரைக்

அதேபோல உசிலம்பட்டியில் கேரளாவைக் கண்டித்து ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் ஒரு நாள் ஸ்டிரைக் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு ஆட்டோ, டாக்சி எதுவும் ஓடவில்லை.

English summary
Normalcy is returning to TN, Kerala border areas in Theni and Idukki dts. No more untoward incidents reported in these areas. Vehicles are allowed from Kerala via Kumuli. But vehicles from Tamil Nadu are not allowed yet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X