For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''999 ஆண்டு உரிமையை 125 ஆண்டுகளிலேயே கேரளா பறிக்க முயல்வது ஏன்?''

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி குழுவினரை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் தனித் தீர்மானத்தை ஆதரித்து பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும் பேசியதாவது:

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கக் கூடிய வகையில் கேரள அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது ஏற்புடையதல்ல என்று மத்திய அரசு அதனை அனுமதிக்க மறுத்திருந்தால் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையே வந்திருக்காது.

அணை உடையப் போகிறது என்ற பீதியை கேரளா ஏற்படுத்தியிருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளை காண்பித்தும், டேம் 999' சினிமா மூலமாகவும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையை கேரளா ஏற்றுக்கொண்டால் தான் அனுப்ப முடியும் என்று பிரதமர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இதை கேரளா எப்படி ஏற்கும்?. எனவே உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்பி அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசு நிதானமான முறையில் இந்த பிரச்சனையை அணுகி வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர்ப் பகிர்வு பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் மத்திய அரசு தலையிட்டு, பயனளிக்கத் தக்க வகையில் எதையும் செய்யவில்லை. மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் அக்கறையின்றி இருக்கிறது. ஒரு நியாயமான முறையில் மத்திய அரசு இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும்.

இரு மாநில மக்களை பாதுகாப்பது குறித்தும், சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுவது குறித்தும் 2 மாநில அரசுகளை பிரதமர் அழைத்து பேச வேண்டும். அதில் தமிழக அரசும் கலந்து கொண்டு கடமையை நிறைவேற்ற வேண்டும்.

தேனி மாவட்டத்திலும், கேரளத்திலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு மாநில மக்களிடையே மோதலை உருவாக்கி ஆதாயம் தேடும் முயற்சிக்கு யாரும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்றார்.

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

அரசின் தீர்மானத்தை முழு மனதோடு வரவேற்கிறோம். கேரள அரசியல் கட்சி தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பீதியாலும், அதனால் தமிழக எல்லையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கும் கேரள தலைவர்களே முழுபொறுப்பேற்று அவர்கள் தவறை உணர்ந்து முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு ஒரு சுமுக தீர்வை காண வேண்டும்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய போலீஸ் படையை உடனே அனுப்பி அணை பாதுகாப்புக்கு முதல்கட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். 152 அடிக்கு நீரை தேக்க தேவையான பணிகளை தமிழக அரசு செய்யும் போது கேரள அரசு தடுக்க கூடாது. மத்திய அரசும் அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது போல நதிகளை தேசிய உடைமையாக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சையை கிளப்பிய கேரளாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு இதனை தமிழக பிரச்சனையாக பார்க்காமல் தேசிய பிரச்சனையாக கருதி தீர்வு காண வேண்டும். தமிழக அரசின் பொறுப்புமிக்க இந்த செயல்பாட்டை வரவேற்கிறேன் என்றார்.

என்.ஆர்.ரங்கராஜன் (காங்கிரஸ்):

காங்கிரஸ் சார்பில் இந்த தீர்மானத்தை வரவேற்கிறோம். தமிழகத்தின் உரிமைப் பிரச்சனையில் நாங்கள் எங்களையும் முழுமையாக இணைத்துக் கொள்கிறோம். 2 மாநிலங்களுக்கு இடையே இருந்த நட்புறவு சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனை தீர வேண்டும் என்ற கவலையில் காங்கிரசும் பங்கு கொண்டுள்ளது. முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானப்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையை அணை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வலியுறுத்தியிருக்கிறார்கள். முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை வரவேற்று ஆதரிக்கிறோம் என்றார்.

ஜெ.குரு (பாமக):

முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டியதற்காகவும், தமிழகத்தின் உரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும் முதல்வரை பாமக சார்பில் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் முன்பு தமிழ்நாட்டு பகுதியில் இருந்தது. பின்னர் கேரளாவில் இணைக்கப்பட்டது. மீண்டும் அந்த பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):

ஆக்கப்பூர்வமான தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். முல்லைப் பெரியாறு அணையை இடிப்போம் என்று கேரளா கூறுவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி. புதிய அணை கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காத நிலையில் அங்கு பூர்வாங்க பணிகளை கேரள செய்திருப்பதை மத்திய அரசு கண்டிக்காதது வருத்தமளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகக் கட்டப்படும் புதிய அணை மூலம் தண்ணீர் கிடைக்கும் என்பது ஏமாற்று வேலை. தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனையில் அக்கறையில்லாமல் உள்ளதுபோல, முல்லைப் பெரியாறு விஷயத்திலும் மத்திய அரசு அக்கறையில்லாமல் உள்ளது.

நாம் அனைவரும் இந்த பிரச்சனையில் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்ற வகையில் இந்த தீர்மானம் அமைந்திருக்கிறது. சட்டசபைக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் முதல்வர் தலைமையில் ஒரு குழுவினர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என்றார்.

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):

தமிழகத்தின் உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற இந்த தீர்மானத்தை முழுமனதோடு வரவேற்கிறோம். சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் எந்த அணையும் உடைந்ததாக வரலாறே இல்லை. தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. தாமிரபரணி தவிர ஒரு நதி கூட தமிழகத்தின் எல்லைக்குள் உற்பத்தியாகவில்லை. எனவே மாநில எல்லை சீரமைப்பை நடத்த மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

அமைதியான முறையில் அணுகுவதை வரவேற்கும் அதே நேரம், இன்னும் விரைந்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். பிரதமரை அனைத்து கட்சி குழு சந்திக்கலாம், ஒரு நாள் முழு அடைப்பு கூட நடத்தலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு கலைக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி பார்வையில் விடலாம் என்பது எனது கருத்து. மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.

தமிழகத்தின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கொண்ட குழுவுடன் பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும் என்றார்.

சரத்குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி):

நிலநடுக்கத்தின் காரணமாக உலகில் இதுவரை எந்த அணையுமே உடைந்ததில்லை என்பதே உண்மை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காததோடு, அணையின் பாதுகாப்பு குறித்து தவறான பிரசாரங்களை செய்து, புதியதாக ஒரு அணை கட்டியே தீருவோம் என்று கூறிவரும் கேரள அரசின் நியாயமற்ற நிலையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசும் தனது மெத்தனப் போக்கை கைவிட்டு உடனடியாக சுமுக முடிவு எட்ட வழிவகை செய்ய வேண்டும். தவறான பிரசாரங்கள் இரு மாநில உறவை பாதித்து, இந்திய இறையாண்மைக்கே ஊறுவிளைவித்துவிடும் அபாயத்தை கேரள அரசு உணர வேண்டும். தமிழக மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை ஆதரித்து நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. புதிய அணை தேவையில்லை என்றார்.

பி.வி.கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்):

999 ஆண்டுகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் நமக்கு உரிமை இருக்கும்போது 125 ஆண்டுகளிலேயே கேரளா இதனை தடுத்து நிறுத்துவது எப்படி நியாயமாகும்?. ஒரு இடைத் தேர்தலுக்காக, அரசியலுக்காக கேரளம் இப்படி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கேரள அமைச்சர்களே வன்முறையில் தூண்டும் விதத்தில் பேசுகிறார்கள் என்றார்.

தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை):

கேரள காங்கிரஸ் அரசும், எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இணைந்து நமது சட்டப்பூர்வமான உரிமையை சிதைக்கும் வகையில் அணை உடையப் போகிறது என்று பீதி கிளப்பி உடைக்க நினைக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, அரசு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகியவைகளை கேரள முதல்வர் உம்மன்சாண்டியும், அச்சுதானந்தனும் அதிகாரத்தில் இருந்து கொண்டு தூண்டிவிடுவது பெரிய குற்றம். அவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தை நாடி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

English summary
In rare show of unanimity, all parties in Tamil Nadu passed a resolution in the Assembly asserting the State’s rights over Mullaperiyar dam water. “This House resolves that under no circumstance will Tamil Nadu give up its rights,” the resolution read. The special session convened to counter the one held by Kerala Assembly on December 6 also demanded that Kerala amend its Irrigation & Water Conservation (Amendment) Act, 2006, so as to allow increase of levels in the 116-year-old dam to 142 feet, as allowed by the Supreme Court. It insisted Kerala not deter Tamil Nadu from carrying out strengthening work, so as to raise the water level to its original height of 152 feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X