For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் அன்னா குழுவினரின் பார்வை மாற வேண்டும்-சந்தோஷ் ஹெக்டே

Google Oneindia Tamil News

பெங்களூர்: தோல்வி அடைந்துள்ள ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்குப் புத்துயிர் அளிக்க அன்னா ஹஸாரே குழுவினருக்கு நான்கு யோசனைகளைத் தெரிவித்துள்ளார் அந்தக் குழுவைச் சேர்ந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.

லோக்பால் மசோதாவை லோக்சபாவில் கஷ்டப்பட்டு நிறைவேற்றி அன்னா குழுவினரை தொய்வுறச் செய்து விட்டது மத்திய அரசு. அதேசமயம், அன்னா குழுவின் உறுப்பினர்கள் சிலரின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியிலும் அவர்கள் மீது ஒருவிதமான எரிச்சல் உருவாகி விட்டது. இதனால்தான் மும்பையில் அன்னா ஹஸாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அவர் பாதியிலேயே தனது உண்ணாவிரதத்தை நிறுத்தி விட்டார்.

மேலும் அன்னாவுக்கு கருப்புக் கொடி காட்டும் சம்பவங்களும் அதிகரித்து விட்டன. சென்னையிலும், பின்னர் மும்பையிலும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அவரது குழுவின் முக்கிய உறுப்பினர்களான அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினர். இதில் பூஷன் அவரது அலுவலகத்தில் வைத்தே தாக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் காரணமாக ஒரு நேரத்தில் இன்னொரு காந்தியாக பார்க்கப்பட்ட அன்னா ஹஸாரேவுக்கு தற்போது செல்வாக்கு வெகுவாக சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் அன்னாவுக்கும், அவரது குழுவினருக்கும் நான்கு ஆலோசனைகளைக் கொடுத்துள்ளார் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இடையில் இவரையும் அரவிந்த் கேஜ்ரிவால் அன் கோவினர் சற்றே ஒதுக்கி வைத்ததால் அதிருப்தியடைந்து அன்னாவின் போராட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார் ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா குழுவினருக்கு அவர் கூறியுள்ள நான்கு யோசனைகள்...

கவலைப்படாதே சகோதரா!

அன்னா குழுவினர் தங்களது இலக்கு மற்றும் குறிக்கோளை நழுவ விட்டதே அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் பிற போராட்டங்களுக்கும் எதிர்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணம். அதை முதலில் அன்னா புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன என்பதை அன்னா ஒப்புக் கொள்ள வேண்டும். ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக ஒவ்வொரு முறையும் அரசுக்கு எதிராக அன்னா நடத்தும் போராட்டங்களுக்கு அவர்கள் வர விரும்பவில்லை என்பதே உண்மை. எனவே தற்போதைய தோல்விகளால் மனம் தளராமல், கவலைப்படாமல், அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து புதிய கோணத்தில் சிந்தித்து அவற்றை நடத்த வேண்டும்.

பாரபட்சம் கூடாது

இனிமேலாவது அரசியல் விவகாரங்களில் குறிப்பாக தேர்தல் போன்றவற்றில் நடுநிலையான, பாரபட்சமற்ற நிலைப்பாட்டை அன்னாவும், அவரது குழுவினரும் எடுக்க வேண்டியது அவசியம். காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாதே, பாஜகவுக்கு ஓட்டுப் போடாதே என்றெல்லாம் கூறவே கூடாது. ஊழல் குறித்து மட்டுமே அன்னா பேச வேண்டும். அதை விட்டு விட்டு வேறு எந்தப் பக்கமும் திரும்பக் கூடாது. ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்றுதான் அன்னா மக்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். கட்சி பேதம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதே நல்லது.

நாடு முழுவதும் சுற்றி வாருங்கள்

நாடு முழுவதும் அன்னாவும், அவரது குழுவினரும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய வேண்டியது அவசியம். லோக்பால் குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் பரவலாக்க வேண்டியது அவசியம். நாட்டில் உள்ள 80 சதவீத மக்களுக்கு லோக்பால் என்றால் என்ன என்றே தெரியவில்லை. எனவே நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பேரணிகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் இது ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வகை செய்யும்.

கிராமங்களின் பிரச்சினைகளையும் பாருங்கள்

இப்போது நடுத்தர வர்க்கத்தின் மீதான கவலையாக மட்டுமே அன்னாவின் இயக்கம் உள்ளது. இந்த பார்வை மாற வேண்டும். ஊரக இந்தியாவுக்கும் நமது போராட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஊரகப் பகுதிகளின் பிரச்சினைகள் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டும். ஊரகப் பகுதிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும்போதுதான் அந்த மக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் இயக்கத்தில் இணைய வைக்க முடியும். தங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லையே என்று இந்த நிமிடம் வரை கிராமப்புற இந்தியர்கள் கவலையுடனும், ஏக்கத்துடனும் உள்ளனர். எனவே இதில் அன்னா குழு கவனம் செலுத்துவது முக்கியமானது என்று கூறியுள்ளார் ஹெக்டே.

அரவிந்த் கேஜ்ரிவால், பூஷன், பேடி ஆகியோர் இதை கேட்பார்களா, அன்னாவுக்கு உரிய முறையில் ஆலோசனை சொல்வார்களா...

ஆலோசனைக் கூட்டம்

முன்னதாக ராலேகான் சித்தியில் நேற்றும், இன்றும் அன்னா குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்னாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டது.

English summary
Team Anna member Justice N Santosh Hegde has suggested four ideas to revive the failed anti-corruption movement. Don't lose heart, Being non-partisan, Travel across country and Take up rural cause are the ideas of Hegde to Team Anna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X