For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம், இடிந்தகரைக்குச் செல்லும் பாதைகளை மூடினர் மக்கள்-பஸ் போகவில்லை

Google Oneindia Tamil News

கூடங்குளம்: போலீஸார் போட்டுள்ள 144 தடை உத்தரவைக் கண்டித்தும், கைது நடவடிக்கையைக் கண்டித்தும், மேலும் பலரைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலும், கூடங்குளம், இடிந்தகரைக்குச் செல்லும் பாதைகளை போராட்டக்காரர்கள் கற்களைப் போட்டும், முள் மரங்களை வெட்டிப் போட்டும் மூடியுள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்குச் சாதகமான முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இதையடுத்து கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீஸாரையும், 3 டிஐஜிக்கள், 10 எஸ்.பிக்களையும் கொண்டு வந்து கூடங்குளத்தில் குவித்துள்ளனர்.

மேலும் ராதாபுரம் தாலுகாவில் 144 போலீஸ் தடை உத்தரவும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போராட்டக் குழுவைச் சேர்ந்த வக்கீல் சிவசுப்ரமணியன் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இதைக் கண்டித்து இடிந்தகரை கிராமத்தி்ல உள்ள புனித லூர்துமாதா சர்ச்சில் உதயக்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். உதயக்குமாரைக் கைது செய்ய தற்போது போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். ஆனால் மக்கள் படையைத் தாண்டி சென்று வலுக்கட்டாயமாக உதயக்குமாரைக் கைது செய்தால் நிலைமை விபரீதமாகும் என்பதால் பொறுமையாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இடிந்தகரை கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு வரும் பாதைகளை அடைத்து உள்ளனர். இடிந்தகரைக்கு செல்ல தாமஸ் மண்டபம், வைராவிகிணறு விலக்கு ஆகிய பகுதிகள் வழியாக 2 பாதைகள் உள்ளன. இந்த 2 பாதைகளிலும் எந்த வாகனங்களும் போய்வர முடியாதபடி பெரிய கற்கள் மற்றும் மரங்கள், முள்மரங்களை வெட்டிப்போட்டு உள்ளனர்.

பஸ் நிறுத்தங்களில் வைக்கப்பட்டு இருக்கும் சிமெண்டு இருக்கைகளை தூக்கி வந்து சாலையின் குறுக்காக போட்டு உள்ளார்கள். இதனால் இடிந்தகரை கிராமத்துக்கு யாரும் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதே போல் ஊரிலிருந்தும் வாகனங்கள் எதுவும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, இடிந்தகரை, கூடங்குளம் பகுதிக்கு பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பஸ் இல்லாததால் பிளஸ்-2 தேர்வுக்கு சென்ற மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர், பிஸ்கட், உணவு உள்ளிட்டவை கடல் மார்க்கமாக, படகுகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

எங்கள் மீது சமூக விரோத தாக்குதல்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதைகளை அடைத்து உள்ளோம். போலீசார் வருவதை தடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்று இந்த நடவடிக்கை குறித்து உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

English summary
Idinthakarai villagers have closed the roads to Kudankulam and other parts to avoid police action against Udayakumar and other agitators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X