பட்ஜெட் அறிக்கையை கிழித்து கருணாநிதி முகத்தில் எறிந்தது யார்?: ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Stalin
சென்னை: கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, பட்ஜெட் அறிக்கையை படிக்க துவங்கியபோது, அந்த புத்தகத்தை கிழித்து அவருடைய முகத்தில் எறிந்தது யார்? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட் தாக்கலான தினத்தன்று திமுக எம்எல்ஏக்களுடன் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், முன்பெல்லாம் பட்ஜெட் என்றால் ரகசியம் என்பார்கள். இப்போது பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகவே அவை மரபுகளுக்கு மாறாக முதல்வரே அரசின் திட்டங்களை எல்லாம் அவரே அறிவித்து விடுகிறார். இதன்மூலம் அவருக்கே இந்த பட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது. அவருக்கே நம்பிக்கை இல்லாததால், எங்களுக்கும் நம்பிக்கை இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.

இதற்கு இன்று சட்டசபையில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களை முன்னரே தெரிவிக்க நான் ஒன்றும் கத்துக்குட்டி அல்ல என்றார். மேலும் எதிர்க்கட்சியாக இருந்த போதே, பேரவை மரபுகளுக்கு மாறாக 'பால் கமிஷன்' அறிக்கையை பத்திரிகைகளுக்கு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு விளக்கம் அளிக்க திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் வாய்ப்பளிக்காததால் அவர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சபை கண்ணியத்தை குறைக்கக் கூடிய வகையில், நாகரீகம் தெரியாத வகையில் நாங்கள் நடந்து கொண்டதாக ஒரு குற்றச்சாட்டை அவையிலே முதல்வர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லக் கூடிய வகையில் அவையில் அமர்ந்திருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து விளக்கம் சொல்ல முயற்சித்தபோது, அனுமதிக்கப்படவில்லை.

அனுமதிக்கப்படாத காரணத்தால் அதனை கண்டித்து, திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஒருமுறை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, பட்ஜெட் அறிக்கையை படிக்க துவங்கியபோது, அந்த புத்தகத்தை கிழித்து அவருடைய முகத்தில் எறிந்தது யார்?.

அதைப்போல தொடர்ந்து கடந்த கால சட்டமன்ற நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்ற போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, கவர்னர் உரையாக இருந்தாலும் சரி, பட்ஜெட் அறிக்கையாக இருந்தாலும் சரி தொடர்ந்து அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். புறக்கணித்தது மட்டுமல்ல வெளிநடப்பும் செய்திருக்கிறார்கள். கருப்பு சட்டை போட்டுக்கொண்டு வந்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

சபாநாயகர் இருக்கைக்கு முன்வந்து கோஷம் போட்டு, கூச்சல் போட்டு சபையினுடைய கண்ணியத்தையே குறைத்திருக்கிறார்கள் என்பது வரலாற்றிலே தெளிவாக பதிவாகி இருக்கிறது என்றார் ஸ்டாலின்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Who tore and threw the budget papers on Karunanidhi, when he was CM, DMK treasurer MK Stalin today questioned CM Jayalalithaa
Please Wait while comments are loading...