For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்-ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Meketadu
சென்னை: கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் புதிய அணையை கட்ட இயலாது. அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால் தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து ஜெயலலிதா பேசுகையில்,

இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கு பெறப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பேசியுள்ளார்கள். காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதித் தீர்ப்பினை வழங்கியது.

இந்த இறுதித் தீர்ப்பு மத்திய கெஜட்டில் பிரசுரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு உடனே பிரசுரிக்கப்பட்டு இருந்தால், இந்த இறுதி ஆணை செயல் வடிவம் பெற்றிருக்கும். ஆனால், காவிரி தாவாவில் தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், அதாவது, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கங்கள் கேட்டு காவிரி நடுவர் மன்றத்தை அணுகின.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், 2011ம் ஆண்டு மே மாதம் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, 14.6.2011 அன்று பிரதமரை டெல்லியில் சந்தித்த போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடுவது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும்; மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு 17.10.2011 அன்று நான் பிரதமருக்கு மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், இக்கோரிக்கை மத்திய அரசால் இது நாள் வரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரை, அதன் 25.6.1991 நாளிட்ட இடைக்கால ஆணை அமலில் இருக்கும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. 16.10.2008 அன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுவின் 23வது கூட்டத்தில் அதன் தலைவரும் இதே கருத்தை உறுதி செய்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள இடைக்கால ஆணையின்படி, நீரை விடுவிப்பதற்கான பாசன ஆண்டு என்பது ஜுன் மாதம் முதல் அடுத்த ஆண்டின் மே மாதம் வரை ஆகும். இம்முறையே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், நடுவர்மன்ற இறுதி ஆணையில் பாசன காலம் என்பது 'ஜுன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் நாள் வரை' என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் தாவாவினை காவிரி நடுவர் மன்றம் முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், அதன் 25.6.1991ம் நாளிட்ட இடைக்கால ஆணை காலாவதி ஆகிவிட்டது என்றும்; நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இன்னமும் நடைமுறைக்கு வராத நிலையில், இடர்ப்பாடு காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கர்நாடகாவில் பாசனம் மேற்கொள்ளுதல் உள்ளடக்கிய அனைத்து அம்சங்களுக்கும் இந்த இறுதி ஆணை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும், அதாவது, Protem Governing Regime ஆக இருக்கும் என கர்நாடக அரசு கருத்து தெரிவித்து வருகிறது.

கர்நாடக அரசு இக்கருத்தை கூறிய போதிலும் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படியோ அல்லது இறுதி ஆணைப்படியோ தமிழ்நாட்டுக்கு நீர் வழங்குவதில்லை. கர்நாடக அரசு தன்னுடைய நீர்த்தேக்கங்களில் எல்லா நீர்வரத்தையும் தேக்கி உபரி நீரை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது.

கர்நாடக அரசு நேர்மையற்ற வகையில், பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் தனது கோடைகாலப் பாசனத்திற்காக அதன் நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை உபயோகப்படுத்திக் கொண்டு வருகிறது.

கர்நாடகத்தின் கருத்துப்படி, தற்காலிக ஏற்பாடாக இருக்கும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை பின்பற்றினால் கோடைகாலப் பயிர் பாசனத்திற்கு நீர் பயன்படுத்தக் கூடாது. ஆனால், கடந்த 2007-2008 முதல் 20102011ம் ஆண்டு வரையில், கர்நாடகாவின் 4 பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து அதாவது ஹேரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து, கோடைகாலப் பாசனத்திற்காக பிப்ரவரி முதல் மே வரையில் 42 டி.எம்.சி. அடி முதல் 73 டி.எம்.சி. அடி வரை நீரினை பயன்படுத்தியுள்ளது.

இவ்வாறு கோடைகாலப் பாசனத்திற்காக நீரை பயன்படுத்தாமல், அடுத்த பாசன பருவகால உபயோகத்திற்கு கர்நாடக அரசு நீரைத் தேக்கி வைத்திருக்க வேண்டும். இதைத் தவிர, காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில் கர்நாடக அரசு அதன் நான்கு பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்தும் பாசன காலத்தில் நீரை பயன்படுத்திக்கொள்ள ஆண்டொன்றிற்கு மொத்தமாக ஒதுக்கீடு செய்துள்ள 103.240 டி.எம்.சி. அடிக்கு பதிலாக 203 டி.எம்.சி. அடி வரை நீரினைப் பயன்படுத்தியுள்ளது.

மேலும், தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் அவசியம் தேவையான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காவிரி நடுவர் மன்ற ஆணையின்படி தண்ணீரை வழங்குவதில்லை. கர்நாடக அரசு கோடைகாலப் பாசனத்திற்கு நீரைப் பயன்படுத்துவதால் பருவமழை தொடங்கியவுடன் எல்லா நீர்வரத்தையும் தன் நீர்த்தேக்கங்களில் தேக்கி அவை நிரம்பிய பின்னரே தமிழகத்திற்கு நீர் வழங்குகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நியாயப்படி வந்து சேர வேண்டிய தண்ணீர் பெறப்படுவதில்லை.

எனவே தான், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கவும்; விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டும்; கர்நாடக அரசு பிப்ரவரி முதல் மே மாதம் வரையில் கோடைகாலப் பாசனத்திற்கு அதன் 4 நீர்த்தேக்கங்களிலிருந்து நீரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனுவினை 21.3.2012 அன்று எனது தலைமையிலான தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறுவதில்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில்; நானும், எனது அரசும் உறுதியுடன் செயல்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினர்கள் இங்கே பேசும்போது மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதாக குறிப்பிட்டார்கள். காவிரி நதியில், கிருஷ்ணராஜசாகர் மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் சிவசமுத்திரம், மேகதாது, ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் எனும் இடங்களில் புனல் மின் திட்டங்களை செயல்படுத்த தேசிய நீர் மின்கழகம் கருதியது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஓர் ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய மின் அமைச்சகம் 1999ல் அனுப்பி வைத்தது.

தமிழ்நாடு அரசு 2004ம் ஆண்டு ஜூலை திங்களில், 1) முதல் நிலையாக, சிவசமுத்திரம் மற்றும் ஒகேனக்கல் நீர்மின் திட்டங்களுக்கான அனுமதியை பெற்ற பின்னர் ஒரே சமயத்தில் இதற்கான பணிகள் துவங்கப்பட வேண்டும்;

2) இரண்டாவது நிலையாக, இதே அடிப்படையில், மேகதாது மற்றும் ராசிமணல் நீர்மின் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்;

3) இந்த 4 புனல் மின் திட்டங்களை தேசிய நீர் மின்கழகம் செயல்படுத்த வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து, மேற்படி ஒப்பந்தத்திற்கு இசைவு அளித்தது.

கர்நாடக அரசு ஜனவரி 2001ல் இதற்கு இசைவு அளித்த போதிலும் பின்னர் சிவசமுத்திரம் மற்றும் மேகதாது புனல் மின்நிலையங்கள் அம்மாநில எல்லைக்குள் இருப்பதால் அவைகளை அவ்வரசே செயல்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தது. தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் பன்மாநில நதியான காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது என்று அவ்வரசிற்கு தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நவம்பர் 2008ல் உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்துள்ளது.

இதில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் முன் நிலுவையிலுள்ள விளக்கம் கோரும் மனுக்கள் ஆகியன முடிவுக்கு வரும் வரையில், கர்நாடக அரசு சிவசமுத்திரம் மற்றும் மேகதாது புனல் மின் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்றும்; தேசிய நீர்மின் கழகமோ அல்லது மத்திய அரசின் மற்ற தகுந்த மின் உற்பத்தி நிறுவனமோ இந்த 4 புனல் மின் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு கோரிக்கை வைத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் புதிய அணையை கட்ட இயலாது. அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால் தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்து அமைகிறேன் என்றார் ஜெயலலிதா.

English summary
Chief Minister J Jayalalithaa today vowed to protect the rights of State in the Cauvery river water issue, in which Karnataka is at loggerheads with Tamilnadu .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X