For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பி மனைவிக்கு அப்பல்லோவில் சிகிச்சை: சட்டசபையில் கடும் வாக்குவாதம்- தே.மு.தி.க. வெளிநடப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha and O Paneerselvam
சென்னை: சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய தேமுதிக எம்எல்ஏ சேகர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜய், அங்கொன்றும், இங்கொன்றும் சில குறைபாடு இருக்கலாம். அதற்காக பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. குறிப்பிட்டு சொன்னால் விளக்கம் அளிக்க வசதியாக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தான் அதிகமான ஆபரேசன்கள் செய்யப்படுகின்றன. தேவையான மருந்து, மாத்திரைகளும் உடனுக்குடன் கொடுக்கப்படுகிறது என்றார்.

சென்னை 'ஹெல்த் கேப்பிட்டல் ஆப் இந்தியா'-ஜெ:

இதையடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவில் ஒவ்வொரு மாநில தலை நகருக்கும் ஒரு சிறப்பு உள்ளது. டெல்லியை 'பொலிடிக்கல் சிட்டி' என்றும், மும்பையை 'பிசினஸ் சிட்டி' என்றும், சென்னையை 'ரீடெயில் கேப்பிட்டல் ஆப் இந்தியா' என்றும் கூறுவார்கள்.

ஆனால் இப்போது சென்னையை 'ஹெல்த் கேப்பிட்டல் ஆப் இந்தியா' என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு சென்னை புகழ் பெற்றுள்ளது. ஆனால் தேமுதிக உறுப்பினர் சேகர் இந்த அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குற்றம் சாட்டி பேசுவது போல் அவரது பேச்சு அமைந்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருந்து பல நோயாளிகள் சென்னை வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெல்லிக்கோ, மும்பைக்கோ சென்று சிகிச்சை பெறுவதில்லை. பல வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மக்களும் இங்குவந்து தான் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவத் துறை முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டை பார்த்து தான் மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது என்றார்.

நான் பேசுவது அரசு மருத்துவமனைகள் பற்றி...:

இதற்கு பதில் தந்த தேமுதிக எம்எல்ஏ சேகர், முதல்வர் சொல்வது தனியார் மருத்துவமனையை. நான் பேசுவது அரசு மருத்துவமனைகள் பற்றி. அரது மருத்துவமனைகளுக்கு அதிக அளவுக்கு யாரும் வருவதில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2001-2006ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை தலைமை மருத்துவமனைக்கு முழுமையாக புதுப்புது கருவிகள் அனைத்தும் வாங்கி கொடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு இணையாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதான் உண்மை. ஆனால், திமுக ஆட்சியில் இதை சீரழித்து விட்டனர். அரசு பொது மருத்துவமனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவ மனைகளையும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக கொண்டு வந்து காட்டுவோம் என்றார்.

ஓ.பி. மனைவிக்கு ஏன் அப்பல்லோவில் சிகிச்சை?:

தொடர்ந்து பேசிய சேகர், அப்படியானால் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாரே என்றார் (அவரை இரு தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவும் மருத்துவமனையில் சென்று சந்தித்துவிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சேகரின் இந்தப் பேச்சால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, உறுப்பினர் சேகர் ஆரம்பத்தில் இருந்தே இந்த அரசை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பேசுகிறார். முதல்வர் சரியான விளக்கம் கொடுத்த பிறகும் எனது மனைவி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது பற்றி பேசுகிறார். எனது மனைவிக்கு ஆபரேசன் செய்தவர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன்தான். அவர் ஏற்கனவே அரசு மருத்துவ மனையில் எச்.ஓ.டியாக இருந்தவர் என்றார்.

நாம் எல்லோரும் முதலில் தமிழர்கள்-ஜெ:

அடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நாம் எல்லோரும் முதலில் தமிழர்கள். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு நோயாளிகள், ஏன் உலகம் முழுவதிலும் இருந்து மருத்துவ சிகிச்சை பெற சென்னை நோக்கி தமிழகம் நோக்கி வருவது நமக்கெல்லாம் பெருமை. அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தாலும், தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக்குத்தான் பெருமை. இதை தேமுதிக உணர வேண்டும் என்றார்.

அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் எழுந்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தான் கிட்னி ஆபரேஷன் அதிக அளவில் நடக்கிறது என்றார்.

அமைச்சர் முனுசாமி எழுந்து, கதிரவன் எம்.எல்.ஏ.வுக்கு கூட நெஞ்சுவலி வந்த போது அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார் என்றார்.

அடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம். அதற்கான செலவை அரசே ஏற்கும். அப்படி இருக்கும் போது தேமுதிக உறுப்பினர் இதை ஏன் குறை கூறுகிறார் என்று தெரியவில்லை என்றார்.

விஜயகாந்த் ஏன் அப்பல்லோ போனார்?-சரத்குமார்:

அப்போது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எழுந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதற்கு முன்பு அண்ணா சாலையில் நடந்த படப்பிடிப்பு விபத்தில் காயம் அடைந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார் என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியில் காப்பீடு திட்டத்தில் 1.2 சதவீதம் பேர்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இப்போது அதிமுக ஆட்சியில் 28 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றார்.

அடுத்து புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து, ஒரு நோயாளி எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிப்பார். டாக்டர் மயில்வாகனன் நடராஜனிடம் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி நீண்ட காலமாக மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆபரேசன் செய்ய முடியாது. அதனால் தனியார் மருத்துவமனைக்கு வரச் சொல்லி ஆபரேசன் செய்திருக்கிறார் என்றார்.

அருகதை இல்லை, இல்லை, இல்லை-ஓ.பி:

இதையடுத்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எனது மனைவி 10 ஆண்டாக மயில்வாகனன் நடராஜனிடம் சிகிச்சை எடுத்தவர். அப்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையில் எச்.ஓ.டியாக இருந்தார். அவரிடம் சிகிச்சை பெற்றதின் தொடர்ச்சியாகவே அப்பல்லோ மருத்துவமனையில் எனது மனைவி சிகிச்சை பெற்றார்.

தேமுதிகவினர் இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே. உங்கள் தலைவர் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்காமல் புதுச்சேரிக்கு சென்று மருத்துவக் கல்லூரி தொடங்கி இருக்கிறாரே. அப்படியானால் தமிழ்நாட்டின் மீதும் தமிழக மக்கள் மீதும் என்ன விசுவாசம் உள்ளது. எனவே தமிழக மக்களை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை, இல்லை, இல்லை என்றார்.

இதற்கு பதிலளிக்க தேமுதிகவினர் ஒட்டு மொத்தமாக எழுந்தனர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா எழுந்து, தேமுதிக கொறடா இங்கு பேசும் போது, சம்பந்தம் இல்லாதவர்கள் பதில் சொல்வதாக கூறுகிறார். இங்கு முதல்வரும் மற்ற அமைச்சர்களும் பதில் சொல்கிறார்கள் என்றால் இது அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பாகும். எனவே பதில் சொல்ல எனக்கும், அமைச்சர்களுக்கும் சம்பந்தம் உள்ளது. ஆனால் தேமுதிகவினர் ஆளாளுக்கு பேச முற்படுகிறார்கள். இது சம்பந்தம் இல்லாதது. இதை சபாநாயகர் அனுமதிக்க கூடாது என்றார்.

ஆனாலும் தேமுதிகவினர் ஒட்டு மொத்தமாக எழுந்து பேச வாய்ப்பு கேட்டனர். சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபைக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் வரவில்லை.

துதிபாடுவதற்காகவே சட்டசபைக்கு வருகிறார்கள்-விஜயகாந்த்:

இந் நிலையில் ரிஷிவந்தியம் தொகுதியில் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசிய தேமுதிக தலைவர் விஜய்காந்த், என்னை அடக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். சட்டபசபைக்கு சில எம்எல்ஏக்கள் துதி பாடுவதற்காகவே வருகின்றனர் என்றார்.

English summary
DMDK MLAs walk out of assembly following heated argument with treasuey benches over finance ministr O.Paneerselvam's wife getting treated in Apollo hospital instead of government hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X