For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நில அபகரிப்பு: திமுக மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி கைது

By Chakra
Google Oneindia Tamil News

மதுரை: மில் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்ததாக, மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ.தளபதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அருகே உள்ள பசுமலையைச் சேர்ந்த மலைச்சாமி ஆண்டாள்புரத்தில் முன்பு இருந்த மீனாட்சி மில்லில் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மூலக்கரை பகுதியில் தியாகராஜர் காலனியில் மானிய விலையில் வீடும், காலியிடமும் மில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.

2003ம் ஆண்டில் மலைச்சாமி இறந்துவிட்டார். அவரது மகன் முருகேசன், மில் நிர்வாக அதிகாரி சீனிவாசனை சந்தித்து மலைச்சாமிக்கு வழங்கப்பட்ட வீடு, காலியிடம் தொடர்பாகப் பேசியுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு, காலியிடத்துக்கு மலைச்சாமி செலுத்திய தொகை போக, மீதிப் பணத்தை செலுத்த வேண்டும் என சீனிவாசன் கூறியுள்ளார்.

இதையடுத்து, வீட்டுக்காக ரூ.72,000த்தையும், காலியிடத்துக்கு ரூ.52,000த்தையும் முருகேசன் செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், பணம் செலுத்திய நிலையில் வீடு, காலியிடத்தை அவருக்கு சீனிவாசன் கிரயம் செய்து தரவில்லை.

இது தொடர்பாக திமுக மாநகர் மாவட்டச் செயலர் தளபதியை சந்திக்குமாறு, முருகேசனை சீனிவாசன் கூறியுள்ளார். இதற்கிடையே 2008-ம் ஆண்டு அந்த வீடு, காலியிடத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயருக்கு மாற்றியதும் தெரியவந்தது.

மேலும் மதுரை மாநகர தி.மு.க. செயலாளர் தளபதி மற்றும் அவரது ஆட்கள் முருகேசனின் வீட்டுக்குள் நுழைந்து, குடும்பத்தினரை மிரட்டினராம். இது தொடர்பாக, தளபதி, வெங்கடேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது மதுரை மாவட்ட எஸ்பியிடம் முருகேசன் புகார் கொடுத்தார்.

மேலும தங்களது வீடு அபகரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்திலும் முருகேசன் வழக்குத் தொடர்ந்தார்.

அதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு மில் நிர்வாகம் வீட்டு மனையை மட்டும் முருகேசன் பெயருக்கு பத்திரம் பதிந்து கொடுத்தது. மில் நிர்வாகம், காலி இடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த இடத்திற்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு முருகேசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

நில அபகரிப்பு தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசனுக்கு சொந்தமான சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காலியிடம் மோசடியாக கிரையம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கொலை மிரட்டல், இடத்தை அபகரித்தல் தொடர்பாக தளபதி (57), அவரது மைத்துனர் வெங்கடேசன் (40), ரவிச்சந்திரன் (52), மலையரசன் (63), சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் பகுதியில் ஜாக்கிங் செய்து கொண்டிருந்த தளபதியை தனிப்படை போலீசார், கைது செய்து எஸ்.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரவிச்சந்திரன், மலையரசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மத்திய அமைச்சர் அழகிரி ஊரில் இல்லாத நேரத்தில் இவரை வைத்துத் தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் இளைஞரணிக் கூட்டத்தை நடத்தினார். இதையடுத்து அழகிரி தரப்பால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former DMK MLA Talapathy was arrested by the police here on Monday on charges of land grabbing
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X