For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்டதேவி கோவில் தேரோட்டம் ரத்து: தென் மாவட்டங்களில் பதட்டம்

Google Oneindia Tamil News

சிவகங்கை: கண்டதேவி கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை அறநிலைய இணை (பொறுப்பு) ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில். அங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். ஆனால் தேரோட்டத்தின்போது தலித் மக்கள் தேரை இழுக்க அனுமதிக்கப்படாததால் அங்கு பெரும் பிரச்சனை வெடித்தது. இதையடுத்து கடந்த 1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மற்றும் 2003ம் ஆண்டும் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் பெருமுயற்சியால் 2002, 2004, 2005, 2006 ஆகிய ஆண்டுகள் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து கோவில் திருப்பணி காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது திருப்பணி முடிந்து கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு நிச்சயம் தேரோட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் ஜூன் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேரோட்டம் குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ராஜாராமன் தலைமையில் அவரது அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேரோட்டத்தை ரத்து செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து இந்துசமய இணை ஆணையாளர் ஜெயராமன் கூறுகையில்,

கண்டதேவி கோவிலில் கடந்த 5 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்காததால் தேர் மிகவும் பழுதாகியுள்ளது. புதிய தேர் செய்ய அரசு ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. உடனே தேரை சரி செய்து தேரோட்டம் நடத்துவது சாத்தியம் அன்று. அதனால் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. திருவிழாவும் நடக்காது என்றார்.

இந்த நிலையில் மள்ளர் நாடு சமூக நலச் சங்கத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடந்த 30.5.2012 அன்று மனு கொடுத்தேன். ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து கண்டதேவி கோவில் தேரோட்டத்தின் போது தேரை இழுக்க தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தாழ்த்தப்பட்ட மக்களும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதற்காக 10 பேரை மட்டும் தேர் இழுக்க அனுமதிக்கின்றனர். போட்டோ எடுத்த பின்பு அவர்களையும் தேரை இழுக்கவிடாமல் வெளியேற்றி விடுகின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள் கிழமை) நடைபெற உள்ளது. கண்டதேவி கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் தென் மாவட்டங்களில் பதட்டம் நிலவி வருகின்றது.

English summary
Kandadevi temple car festival has been cancelled as the car is in a bad condition. Tension prevails in southern districts of the state because of the cancellation of the car festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X