For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஷம் கொடுத்து கொலை?: யாசர் அராபத் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய முடிவு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Yasser Arafat
லண்டன்: பாலஸ்தீன விடுதலை இயக்கத்த லைவர் யாசர் அராபத் மரணத்தில் தற்போது புதிய சந்தேகம் கிளம்பியுள்ளது. அவரை பொலோனியம் என்ற விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலைத் தோண்டி ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்காக, நீண்ட காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிஸ் நகருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது கோமா நிலைக்கு சென்ற அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். இவருடைய மரணத்தில் பாலஸ்தீன தலைவர்கள் சந்தேகப்பட்டனர். எனினும் கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே அவரது மனைவி சுஹாவிடம் இருந்து அராபத்தின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான "பொலோனியம்' இருந்துள்ளது. ரஷ்ய உளவாளியான அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவர், லண்டன் ஓட்டலில் தேனீர் கோப்பையில் தடவப்பட்ட பொலோனியம் விஷத்தால் கொல்லப்பட்டார். இதே முறையில் தான் அராபத் உடலிலும் பொலோனியம் இருந்துள்ளது, என ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை உறுதியாக நிரூபிக்க வேண்டுமென்றால், அவர் உடலை மீண்டும் தோண்டியெடுத்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், என கோரும் உரிமை அராபத்தின் மனைவி சுஹாவுக்கு மட்டுமே உள்ளது' என, சுவிட்சர்லாந்து நாட்டின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் புக்கட் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அல்-ஜசீரா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

அரபாத் இறந்தபோது அவரை இஸ்ரேல் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று 2005 ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

பொலோனியம் என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். ஒரு தூசு அளவுக்கு இது உடலில் இருந்தால் கிட்னி, கல்லீரல் பாதிக்கப்பட்டு சில வாரங்களில் உயிர் பிரிந்து விடும். மேலும் இந்த கதிரியக்கத் தனிமத்தை சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளிலிருந்துதான் பிரித்தெடுக்க முடியும். எனவே இந்த பொலோனியத்தை இஸ்ரேல் தான் அராபத்தின் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர் அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிபரின் தகவல் தொடர்பாளர் நபில் அபு தினே , "அராபத் மனைவி சுஹாவின் கோரிக்கையை ஏற்று ரமலாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அராபத்தின் உடலை மீண்டும் வெளியே எடுத்து பரிசோதிக்க தயாராக உள்ளோம்' என்றார்.

இதனிடையே அராபத் ஆதரவாளர்களின் குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. "அராபத், பாலஸ்தீனர்களிடம் தான் இருந்தார். எனவே, அவர் மரணத்தில் எங்களுக்கு தொடர்பில்லை' என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

English summary
Palestinian leader Yasser Arafat may have died after being poisoned by polonium, a new investigation suggests. His widow is now certain his death was not natural, and wants his body exhumed for further study. Arafat's body to be exhumed amid reports of polonium poisoning
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X