For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படை தீவிரவாதத்திற்குப் பயந்து வளைகுடாவுக்குப் படையெடுக்கும் தமிழக மீனவர்கள்!

Google Oneindia Tamil News

TN Fishermen
சென்னை: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலுக்குப் பயந்தும், மன்னார் வளைகுடாப் பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதாலும்தான் வளைகுடா நாடுகளுக்கு தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். இப்படிச் சென்றவர்களில் சிலரைத்தான் அமெரிக்க கடற்படையினர் சுட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரை விட்டுள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் என்ன வேலை, இவர்கள் ஏன் அங்கே போய் மீன் பிடித்தார்கள் என்று ஒரு ஆச்சரியக் கேள்வி நிலவி வருகிறது. ஆனால் அவர்களின் இந்த அவல நிலைக்குக் காரணம் சிங்களக் கடற்படை ரவுடிகளின் காலித்தனமான மற்றும் வெறித்தனமான செயல்தான் முக்கியக் காரணம் என்று தற்போது தெரிய வந்துள்ளது. சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கி கொன்று வருவதாலும், இதைத் தட்டிக் கேட்க எந்தவிதமான நடவடிக்கையையும் இந்திய அரசு எடுக்காமல் இருப்பதாலும்தான் வேறு வழியில்லாமல் பல்வேறு நாடுகளுக்கும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு தமிழக மீனவர்கள் செல்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள்தான் பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் செல்கின்றனர். அங்குள்ள பல்வேறு மீன்பிடி நிறுவனங்களில் சேர்ந்து மீன்பிடித்து பிழைத்து வருகின்றனர்.

முள்ளிமுனை, காரங்காடு, புதுப்பட்டினம், நம்புதாளை, பாசிப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 5000 மீனவர்கள் இதுபோல வளைகுடா நிறுவனங்களில் சேர்ந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனராம்.

இதுகுறித்து பாம்பன் மீனவர் கெவிஸ்டன் என்பவர் கூறுகையில், இலங்கை கடற்படை எங்களை தொழில் செய்யவே விட மாட்டேன் என்கிறது. இதைத் தட்டிக் கேட்கவோ எங்களுக்குப் பாதுகாப்பு தரவோ இந்திய அரசு முன்வருவதில்லை. எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால்தான் எங்களது மீனவர்கள் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள மீன்பிடி நிறுவனங்களில் சேர்ந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இலங்கை எங்களை வாழ விடுவதில்லை. இதை இந்திய அரசு தட்டிக் கேட்பதில்லை. எனவேதான் இப்படிப் போவதைத் தவிர வேறு எங்களுக்கு வழியில்லை என்றார் பரிதாபமாக.

அப்பாவி மீனவர்கள் விடுதலை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் என்பவர் கூறுகையில், சவூதி, துபாய், பஹ்ரைன், அபுதாபி, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு முறையான விசாவில்தான் நமது மீனவர்கள் செல்கிந்றனர். ஆனால் வளைகுடாவில் மீன்பிடிப்பது என்பது எளிதான செயலல்ல.

எங்களுக்கு அங்கு பெரிய அளவில் சம்பளம் ஏதும் தருவதில்லை. மோசமாகவும் நடத்துகிறார்கள். இருந்தாலும் வேறு வழியில்லாமல் எங்களது மீனவர்கள் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். இலங்கைக் கடற்படையின் அட்டகாசம்தான் இதற்கு முக்கியக் காரணம் என்றார்.

சரி வளைகுடா கடலில் எப்படி உங்களால் மீன்பிடிக்க முடிகிறது என்று ஒரு மீனவரிடம் கேட்டபோது, நாங்கள் நேரடியாக அங்குக் கடலுக்குப் போவதில்லை. உள்ளூர் மீனவர்கள் எங்களுடன் வருவார்கள். கடல் திசையை அவர்கள்தான் சொல்வார்கள். எங்களுக்கு மாதம் ரூ. 10,000 முதல் 15,000 வரைதான் சம்பளமாக தருவார்கள். மேலும் கார்களைக் கழுவுவது, வீடுகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் செய்யுமாறு பணிப்பார்கள் என்றார்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் வளைகுடா படகு உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லையாம். தப்புவலசையைச் சேர்ந்த மீனவர் ராஜு என்பவர் கூறுகையில், நான் துபாயில் சில வருடம் வேலை பார்த்தேன். அப்போது 1998ம் ஆண்டு முடிவீரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் அங்கு பாதுகாப்புப் படையினரால் கடலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை அவர்களின் உடலை மீட்கவே முடியவில்லை என்றார்.

தமிழக மீனவர்கள் தங்களது பகுதியில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் மீன்பிடித்து தொழிலைச் செய்ய தேவையான பாதுகாப்பை மத்திய அரசு தர வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்ககளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அப்போதுதான் நாங்கள் வளைகுடா நாடுகளுக்குச் செல்வதை நிறுத்த முடியும் என்றார் அவர்.

என்ன செய்யப் போகிறார்கள் மத்திய அரசும், மாநில அரசும்...?

English summary
The fear of attacks by the Sri Lankan Navy and depletion of marine resources in the Palk Bay have forced the fishermen from Ramanathapuram district to look for green pastures in the Middle East. According to sources, around 5,000 fishermen of Karankadu, Mullimunai, Pudupattinam, Nambuthalai, Pasipattinam, Rameswaram, and other coastal villages, have moved to Gulf to work in fishing companies in the last decade.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X