For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் ஊழல்... முன்ஜாமீன் கோருகிறார் மு.க.அழகிரி மகன்

Google Oneindia Tamil News

Durai Dayaninidhi
மதுரை: அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட தனியார் கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் அரசு கனிம வளத்துறை விதிகளுக்கு புறம்பாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 16 ஆயிரத்து 338 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக மதுரை முன்னாள் கலெக்டர், சகாயம் அப்பதவியிலிருந்து வேறு பணிக்குச் செல்வதற்கு முன்பு அரசுக்கு பரபரப்பு அறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த அறிக்கை மீது அரசு அமைதியாக இருந்து வந்தது. ஆனால் அறிக்கை விவரங்கள் மீடியாக்களில் கசிந்ததைத் தொடர்ந்து அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையின் அடிப்படையில், கீழவளவு பகுதியில் ஒலிம்பஸ் என்ற குவாரி நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் திருட்டுத்தனமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து இருப்பதாக, கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். ஒலிம்பஸ் குவாரி நிறுவனத்தின் அதிபர் நாகராஜன் ஆவார். அதேபோல மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் இந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் ஆவார். இதையடுத்து இவர்கள் மீது கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து துரை தயாநிதி முன்ஜாமீன் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளார்.

அதில், நான், ஒலிம்பஸ் குவாரி நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே இருந்து வந்தேன். தொழில் சம்பந்தமாக தலையிடுவது இல்லை. 2010-ம் ஆண்டே இயக்குனர் பதவியில் இருந்து விலகி விட்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல ஒலிம்பஸ் குவாரி நிறுவனத்தின் அதிபர் நாகராஜன், சிந்து கிரானைட்ஸ் உரிமையாளர் பி.கே.செல்வராஜின் மனைவி சாந்தி, மகன் சூரியபிரகாஷ் ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் தொடர்புடைய பி.ஆர்.பி கிரானைட்ஸ் பங்குதாரர்கள் பி.பழனிச்சாமி, அவருடைய மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், உறவினர் மகாராஜன், சிந்து கிரானைட்ஸ் உரிமையாளர் பி.கே.செல்வராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகவும் உள்ளனர். இவர்களில் பழனிச்சாமி கேரளாவுக்கு ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக எம்.பி நடிகர் ரித்தீஷுக்கு முன்ஜாமீன்

இதற்கிடையே, நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய திமுக எம்.பியும், நடிகருமான ரித்தீஷ்குமாருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் பாப்பன்குழி கிராமத்தை சேர்ந்தவர்கள் தெய்வநாயகி, அவரது மகன் பழனி. இவர்கள், காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பியிடம் தனித்தனியாக 2 புகார்களை கொடுத்தனர்.

அந்த புகாரில், தங்களுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து, டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு அய்யநாதன், சிவகுமார் என்ற ரித்தீஷ் உட்பட 7 பேர் விற்பனை செய்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.

இதனடிப்படையில் ரித்தீஷ் உட்பட 7 பேர் மீது நில அபகரிப்பு வழக்குகளை காஞ்சீபுரம் மாவட்டம் மத்திய குற்றப்பிரிவு (நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவு) போலீசார் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ரித்தீஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இந்த நில மோசடி வழக்கில் ரித்தீஷ் முக்கிய குற்றவாளி. அவர் மீது தமிழகம் முழுவதும் 12 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று கூறியிருந்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அக்பர்அலி, நிபந்தனைகள் அடிப்படையில் ரித்தீஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ஒரு லட்சம் ரூபாய், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் ஆகியவற்றை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழங்கி ரித்தீஷ் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரித்தீஷ் குமார் ஆஜராகலாம். கூட்டத் தொடர் முடிந்த பின்னர், தொடர்ந்து 15 நாட்களுக்கு காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு ரித்தீஷ்குமார் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதுவரை சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் காலை 10.30 மணிக்கு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திடவேண்டும். வழக்கின் சாட்சிகளை கலைக்கக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.

English summary
Union Minister M.K.Azhagiri's son Durai Dayaninidhi has sought advance bail in illegal granite scam case. He has filed his plea in Madurai HC bench.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X