For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியை பறிகொடுத்துள்ளது திமுக: மு.க.ஸ்டாலின்

By Siva
Google Oneindia Tamil News

Stalin
நெல்லை: ஈழத் தமிழர்களுக்காகவே இரண்டு முறை திமுக ஆட்சியை பறிகொடுத்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியாதவது,

கடந்த 12ம் தேதி சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துக் கூறத் தான் இந்த கூட்டம். அவை பெயருக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அன்று. அவற்றை செயல்படுத்தக் கோரி தீர்மான நகலை ஐ.நா. சபையிடம் நேரடியாக கொடுக்கவிருக்கிறோம்.

நாங்கள் திடீர் என்று தற்போது தான் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர். கடந்த 1956ம் ஆண்டு சிதம்பரத்தில் நடந்த திமுக மாநாட்டில் ஈழத் தமிழர்களின் உரிமைகளை காக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பின்னரும் தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்.

ஈழத் தமிழர்களுக்காகவே 2 தடவை நாங்களை ஆட்சியை பறிகொடுத்துள்ளோம். மேலும் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். டெசோ அமைப்பு ஒன்றும் புதிதாக துவங்கப்பட்டதன்று. கடந்த 1985ம் ஆண்டிலேயே டெசோ அமைப்பு துவங்கப்பட்டுவிட்டது.

அந்த அமைப்பில் கி. வீரமணி, பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் உறுப்பினர்களான இருந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அப்பொழுதே டெசோ கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். 1986ம் ஆண்டு மதுரையில் நடத்தப்பட்ட டெசோ மாநாட்டில் பாஜக தலைவர் வாஜ்பாய், என்.டி. ராமாராவ், இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களைப் பற்றி கவலைப்படும் இயக்கமே திமுக. இலங்கை பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்கள் அந்த பிரச்சனையை திமுக தனது கையில் எடுத்தவுடன் எள்ளி நகையாட முயற்சிக்கின்றனர்.

இலங்கையில் நடந்த போரின்போது லடக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் ஆதரவின்றி உள்ளனர். மிச்சம் இருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில் திமுகவை அழிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சரி, எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் சரி அதையெல்லாம் பார்த்து அஞ்சுகின்ற இயக்கம் திமுக அன்று. வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம். நான் நீதிமன்றத்திற்கு வர தயாராகவே உள்ளேன். தேவைப்பட்டால் கருணாநிதியும் நீதிமன்றத்திற்கு வருவார். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கும் திமுக அரணாக இருக்கும் என்றார்.

English summary
DMK treasurer MK Stalin told that his party lost power twice for Lankan Tamils. Even DMK chief Karunanidhi and general secretary Anbazhagan resigned their MLA posts for them, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X