அடப் பாவமே.... காதலனுடன் 'எஸ்கேப்' ஆன பெண் காருடன் ஆற்றில் மூழ்கி பலி!
ஹைதராபாத்: வீட்டில் கட்டாய திருமணம் செய்ய முயன்றதை தொடர்ந்து, ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் நகை, பணத்துடன் காதலுடன் காரில் தப்பிச்சென்றார். ஆனால் அவர்கள் பயணித்த கார் ஆற்றில் கவிழ்ந்ததில், இளம்பெண்ணும் நண்பர் ஒருவரும் பலியாகினர். காதலன் காயத்துடன் உயிர் தப்பினார்.
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ். மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பிரியா(19). இவருடன் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர் கார்த்திக். அதே ஊரை சேர்ந்த லாட்ஜ் உரிமையாளரின் மகன்.
துவக்கத்தில் நண்பர்களாக பழகிய பிரியாவும், கார்த்திக்கும், அதன்பிறகு காதலர்களாக மாறினர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து பிரியாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், அவரது வீ்ட்டில் பெங்களூரை சேரந்த என்ஜினீயருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக பிரியாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
இது குறித்து காதலன் கார்த்திக்கிடம், பிரியா தெரிவித்தார். இதையடுத்து இருவரும் நண்பர்களின் உதவியுடன் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதற்கு சம்மதித்த பிரியா, வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு, காதலுடன் காரில் தப்பி சென்றார். அவர்களுடன் இரு நண்பர்களும் இருந்தனர்.
4 பேரும் அமலாபுரத்தில் இருந்து ஹைதராபாத்தை நோக்கி காரில் சென்றனர். காரை கார்த்தி ஓட்டினார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கார் கொத்தபேட்டை சாய்பாபா கோவிலின் அருகே சென்ற போது, கட்டுபாட்டை இழந்தது. இதில் கார் அப்பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் உயிர்தப்ப நினைத்த பிரியா காரின் கதவை திறந்து வெளியே குதித்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். மேலும் காரின் பின்புற சீட்டில் பிரியாவுடன் இருந்த நண்பர் சுதாகர் கார் கதவை திறக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
காரை ஓட்டிய கார்த்திக்கும், அவரது நண்பர் சின்னாவும் ஆற்றில் குதித்து நீந்தி உயிர் தப்பினர். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அமலாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். காரின் உள்ளே இருந்த சுதாகரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பிரியாவின் உடல் சிரிபில்லி என்ற இடத்தில் கரை ஒதுங்கியது. அவரது உடலை மீட்ட போலீசார், அவரது கைப்பையில் இருந்த பணத்தை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications