For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கப்பலில் பசிக்கொடுமையால் எலிக்கறி தின்ன வைத்த சரத்பவார் குடும்பம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் தரைதட்டிய கப்பல் சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினருக்கு சொந்தமான இக்கப்பல் 80 நாட்களாக சென்னை கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் உரிமையாளரும் ஏஜெண்ட்டும் கைவிட்டுவிட்டடதால் பசிக் கொடுமைக்குள்ளாகி கப்பலில் இருந்த எலிகளைப் பிடித்து சாப்பிட வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

Ship Chennai
நிலம் புயலில் தரை தட்டிய கப்பல்

சென்னை உட்பட தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிய நிலம் புயலின் போது பிரதிபா காவிரி என்ற கப்பல் சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. இக்கப்பலில் இருந்த ஊழியர்கள் உயிர் காக்கும் படகுகள் மூலம் தப்பிக்க முயன்றனர். இதில் 5 பேர் மாயமானார்கள். மற்றவர்களை கடலோரக் காவல்படை மீட்டிருந்தது.

தரை தட்டியதற்கு கப்பல் உரிமையாளர்களே காரணம்

இதில் உயிரிழந்த ஆனந்த் மோகன்தாஸ் என்பவரின் சகோதரன் சங்கரநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எம்.டி. பிரதிபா காவிரி என்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பலில் என்ஜினீயராக எனது சகோதரர் ஆனந்த் பணியில் சேர்ந்தார். 37 சிப்பந்திகளுடன் இந்த கப்பல் சென்னைக்கு வந்து கச்சா எண்ணெயை சென்னை துறைமுகத்தில் இறக்கியது. கடலில் செல்லும் தகுதி அந்தக் கப்பலுக்கு இல்லை. அதில் போதுமான அளவு எரிபொருளும் இல்லை. அங்கிருந்த ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. தங்களை விடுவிக்கும்படி ஊழியர்கள் கேட்டும் அதன் உரிமையாளர் செவிசாய்க்கவில்லை. ஆனந்த் மோகன்தாசுக்கும் சம்பளம் தரப்படவில்லை. எனவே கப்பல் உரிமையாளருக்கு அவர் 3 முறை கடிதம் எழுதி, சம்பளம் தரும்படியும், கப்பலில் இருந்து இறங்க அனுமதியும் கோரியுள்ளார். எனவே எனது சகோதரர் மத்திய கப்பல்துறை, தமிழக உள்துறை செயலாளர், தமிழ்நாடு டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பட்டினப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை துறைமுக அதிகாரிகள் ஆகியோரை பலமுறை தொடர்புகொண்டு, ஆபத்தான நிலையில் கப்பலில் இருக்கும் எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் யாருமே அவரது கூக்குரலை கவனிக்கவில்லை.மத்திய அமைச்சர் சரத்பவாரின் நெருங்கிய உறவினரின் கப்பல் அது என்பதால் யாருமே எனது சகோதரர் உள்பட மற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் விட்டுவிட்டனர். துறைமுகத்துக்கு வெளியே 80 நாட்கள் நிறுத்தப்பட்டு இருந்தாலும்கூட அதிகாரிகள் யாரும் அதுபற்றி விசாரணை கூட நடத்தவில்லை. முக்கிய புள்ளியின் கப்பல் என்பதால், கடலில் பயணிக்கும் தகுதியை இழந்திருந்தாலும் 33 நாட்கள் கடலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சென்னைக்கு புயல் அபாய எச்சரிக்கை வந்து சேர்ந்தது. எனவே ஒவ்வொரு ஊழியரும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள். உயிர்காக்கும் படகை உபயோகிக்க முயன்றாலும், அதற்கு போதிய எரிபொருள் கிடைக்கவில்லை.

பட்டினிச் சாவு

அங்கிருந்த 37 ஊழியரில், எனது சகோதரருடன் 22 பேர் உயிர்காக்கும் படகு மூலம் தப்ப முயன்றனர். ஆனால் அதில் போதிய எரிபொருள் இல்லாததால் படகு கவிழ்ந்துவிட்டது. அதைப் பார்த்த மீனவர்கள் சிலர் 15 ஊழியர்களை மீட்டனர். மீதமுள்ள 7 ஊழியர்களில் எனது சகோதரரும் ஒருவர். அவர் கடலில் விழுந்து இறந்துபோனார். மற்ற 6 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.80 நாட்கள் சரியாக உணவு சாப்பிடாமல், பட்டினியாக இருந்ததால் படகில் இருந்து விழுந்த சிறிது நேரத்தில் அவரது உயிர் போய்விட்டது. இது முழுக்க முழுக்க கப்பல் உரிமையாளரின் பொறுப்பற்ற தன்மையால் நடந்த சம்பவமாகும் என்று கூறியிருந்தார்.

எலிக்கறி சாப்பிட்ட கொடுமை

இம்மனு நேற்று நீதிபதி பால்வசந்த்குமார் முன்பு விசாரணைக்கு வந்து போது, பசிக் கொடுமையால் சிலர் கப்பலில் இருந்த எலி, கரப்பான் பூச்சி போன்றவற்றை சமைத்து உணவாக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. 6 மாதங்களாக வைக்கப்பட்டு இருந்த ரொட்டிகளை சாப்பிட்டுள்ளனர். பட்டினியால் தொய்ந்துபோன அவர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள பலமில்லாமல் போய்விட்டது என்று குறிப்பிட்டனர்.

நோட்டீஸ்

இந்த வழக்கில் பதிலளிப்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்காக சிறப்பு அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நோட்டீஸ் பெற்றுக்கொண்டார். மத்திய கப்பல் துறைக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு நோட்டீசை மனுதாரரின் வக்கீல் கொடுக்க வேண்டும். கப்பல் உரிமையாளருக்கு தந்தி மூலம் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட வேண்டும். இவர்கள் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை கப்பல் சென்னையைவிட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

English summary
The family of one of the sailors who died while trying to abandon a ship stranded off the coast of Chennai by cyclone Nilam has filed a petition in court alleging that the vessel was not sea-worthy and had no food or fuel on board. This comes amid allegations that the Coast Guard ignored distress calls by the ship, MT Pratibha Cauvery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X