• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போது சொல்லுங்கள் ராசா குற்றவாளியா?: கருணாநிதி

By Chakra
|

Karunanidhi and Raja
சென்னை: 2ஜி ஏலம் விடப்பட்டதில் எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் கிடைக்காததில் இருந்தே, இது தொடர்பாக சிஏஜி கூறிய கணக்குத் தவறு என்பது உறுதியாவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் ஆ.ராசா குற்றவாளியா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

''வீரமணி முழக்கியுள்ள விவேக மணி!'' என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!:

கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான பகுதியை நீக்க வேண்டுமென்று நீங்கள் கடிதம் எழுதிய பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?

கருணாநிதி: கடந்த மாதம் 27-10-2012 அன்றே இந்தப் பிரச்சனை பற்றி நான் முரசொலி கேள்வி-பதில் பகுதியிலே விரிவாக நாடார் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் இதிலே தக்க கவனம் செலுத்தி, பிழையினை நீக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினேன். தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளின் சார்பிலும், இதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தார்கள். உரியவர்களிடமிருந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியாததால், 15-11-2012 அன்று பிரதமருக்கும், மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியதும்; அது பல ஏடுகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.

மேலும் 16-11-2012 அன்று டெல்லியில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவர் தம்பி டி.ஆர். பாலு, அந்தக் கூட்டத்தில் நாடார்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிட, அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு அவர்களை நேரில் சந்தித்து, நாடார்கள் பிரச்சனை பற்றி கூறியவுடன், மத்திய மனிதவளத் துறை அமைச்சரும், நாடார்கள் பற்றிய அவதூறு வரிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். இந்த நிலையில்தான் நம்முடைய தமிழக அரசு திடீரென்று விழித்துக் கொண்டு, 16-11-2012 அன்று அவசர அவசரமாக பிரதமருக்கு இந்தப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி, 17ம் தேதி பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பல்லாயிரம், பல லட்சம் ரூபாய்ச் செலவில், முதல் பக்க விளம்பரச் செய்தியாக அது இடம் பெற்றுள்ளது. நல்ல சுறுசுறுப்பு?.

ஆனால் இதற்கே மிகப்பெரிய விளம்பரங்கள்! நாடார்களுக்கு வந்த ஆபத்து ஏதோ முதல்வர் கடிதத்தால் தான் விலகியது என்பதைப்போல நன்றி தெரிவித்து- பெரிய விளம்பரங்களைக் கொடுத்திருப்பதுதான் வேடிக்கை! விநோதம் - சரியான தமாஷ்!.

அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள்.. என்ன சொல்லப் போகிறார்கள்?:

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத்திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?

கருணாநிதி: இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு தணிக்கைக் குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் 9,000 கோடி ரூபாய் தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜ.கவும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கனவே கூறி வந்ததைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கையில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகையையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?.

தமிழர் தலைவர், இளவல் வீரமணி:

தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் "விடுதலை"யில் "1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. ராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்" என்று அருமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?

அதிமுகவினரை போலீசில் நுழைக்க ஜெ. முயற்சி:

கேள்வி: தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50,000 பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதைபற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?

கருணாநிதி: அதைத்தான் நான் முன்பே எழுதியிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துணவுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பரிந்துரைகளைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கனவே விரிவாக வந்தன.

அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக்காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல்துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல்துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வரவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Reacting for the first time to the poor response that the recent auction of 2G spectrum received, DMK chief M Karunanidhi on Monday wondered how would those who targeted the party over the scam react now and said he is in favour of making the Comptroller & Auditor General (CAG) a multi-member body
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more