For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி.. அன்னிய முதலீடு: பாஜகவுக்கு கருணாநிதி வைத்த 'பதில் ஆப்பு'!

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் மிகப் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது திமுக.

ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திட்டத்தை திமுக எதிர்த்தே வந்தது, இப்போதும் எதிர்க்கிறது. காரணம், ஓட்டுக்கள், குறிப்பாக வர்த்தக சமுதாயமான நாடார் சமூகத்தினரின் வாக்குகள்.

இந்தத் திட்டத்தை தமிழக வர்த்தக சங்கங்கள் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் திமுகவும் இதை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மிக முக்கிய வாக்கு வங்கியாக உள்ள நாடார் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி அன்னிய முதலீடு விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தர திமுக முடிவு செய்ததற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன.

ஒன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம். இந்த விவகாரத்தில் ராசா தொடங்கி கனிமொழி வரை சிக்கியுள்ளதால், இதிலிருந்து வெளியே வர மத்திய அரசின் உதவி திமுகவுக்கு நிச்சயம் தேவை. இதனால் அன்னிய முதலீடு விஷயத்தில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டிய நிலை திமுகவுக்கு உருவாகியுள்ளது.

இரண்டாவது காரணம், பாஜகவுக்கு ஆப்பு வைப்பது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை மத்திய அமைச்சராக இருந்த ராசா ஏலம் விடாமல் விற்றதன் மூலம் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக யூகமான ஒரு கணக்கைச் சொல்லி நாட்டையே அதிர வைத்தார் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியான (சிஏஜி) வினோத் ராய். ஆனால், இவர் ஏன் இந்த நம்பரைச் சொன்னார் என்பதன் பின்னணி இப்போது வெளியே வந்துவிட்டது.

ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்லச் சொல்லி தனக்கு வினோத் ராய் நெருக்கடி தந்ததையும், இதன் பின்னணியில் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி இருந்ததையும் சிஏஜி அலுவலக டைரக்டர் ஜெனரான ஆர்.பி.சிங் புட்டுப் புட்டு வைத்துவிட்டார்.

இந்த விவகாரத்தை வைத்து திமுக மட்டுமல்லாமல் மத்திய அரசையே கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கிப் போட்டது பாஜக. இதனால் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை திமுக சந்திக்க நேர்ந்தது.

இப்போது இதற்கெல்லாம் சேர்த்து பாஜகவுக்கு பதிலடி தர திமுகவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் அன்னிய முதலீடு விவகாரம்.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜகவின் திட்டத்தை திமுக தவிடுபொடியாக்கிவிட்டது. சமாஜ்வாடி, மாயாவதி ஆகியோரின் ஆதரவை மத்திய அரசு பெற்றுவிட்டாலும் இந்த விஷயத்தில் திமுகவின் ஆதரவு கிடைக்காது என பாஜக நினைத்தது. இதை மனதில் வைத்துத் தான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தயும் மத்திய அரசின் மீது ஓட்டெடுப்பையும் வலியுறுத்தியது.

ஓட்டுக்கு பயந்து திமுகவும் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என்று பாஜக நம்பியது. ஆனால், ஓட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பாஜகவுக்கு பாடம் புகட்டுவது என்ற முடிவுக்கு வந்துவிட்ட கருணாநிதி, இந்த விஷயத்தில் அடித்த பல்டி, பாஜகவை ரொம்பவே அதிர வைத்துள்ளது. இதனால் அந்தக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அது பெரும் தோல்வி அடையப் போவது நிச்சயம்.

மேலும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு எந்த மாநில அரசையும் வற்புறுத்தப் போவதில்லை என்றும், அதை மாநிலங்களே தீர்மானிக்கலாம் என்ற ஒரு ஷரத்தும் சேர்க்கப்பட்டுள்ளது, திமுகவுக்கு கொஞ்சம் ஆறுதலாக விஷயம்.

இதனால் இப்போது மத்திய அரசை ஆதரித்து வாக்களித்தாலும் கூட நாளை தேர்தலை சந்திக்கும்போது தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக சொல்லிக் கொள்ளலாம். தேர்தல் அறிக்கையிலும் இதை ஹைலைட்டாக சேர்க்கலாம்.

இந் நிலையில் அன்னிய முதலீடு விஷயத்தில் மத்திய அரசை ஏன் ஆதரிக்கிறோம் என்று விளக்கி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுக்க முழுக்க பாஜக மீதே தாக்குதலைத் தொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது அறிக்கையின் ஹை லைட் இது தான்: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவினை திமுக ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் கூட நாடாளுமன்றத்தில் 184-வது விதியின்கீழ் இந்தப் பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகளின் கோரிக்கையைப் பொறுத்தவரை அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுமேயானால் இன்று மத்தியிலே உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை.

அதன் விளைவுகளைச் சிந்திக்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, அதன் காரணமாக இமயம் முதல் குமரி வரை பெரும் குழப்பத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ள பாஜக தலைவர்கள் நடத்திய கூட்டுச் சதி அம்பலமாகி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றெல்லாம் இல்லாத புகார்களைக் கற்பனையாகக் கூறி, மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பாஜக போன்ற மதவாதக் கட்சிகளுக்குத் தான் ஆதாயம் என்ற நிலையை எண்ணிப் பார்க்கும்போது,

மத்தியில் அதே பாஜகவினுடைய ஆதிக்கமோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசோ ஆட்சிப் பொறுப்புக்கு வருமேயானால், இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் எண்ணிப் பார்த்து, அத்தகைய மதவாத அரசோ -ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்க வைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் மறந்து விடுவதற்கில்லை.

இதையெல்லாம் சிந்திக்கும்போது இந்தப் பிரச்சினையில் மத்திய ஆளுங்கட்சியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம் என்பதையும் மறந்து விடுவதற்கில்லை என்று கூறியுள்ளார்.

திமுக மீது பாயும் பாஜக:

கடைசி நேரத்தில் தங்களுக்கு ஆப்பு வைத்த திமுக மீது கடும் கோபத்தில் உள்ளது பாஜக. அந்தக் கட்சியின் தேசியத் தலைவர்கள் திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பாஜக வர்த்தகர் அணியின் அகில இந்திய செயலாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என கூறிவந்த கருணாநிதி திடீரென தலைகுப்புற அந்தர் பல்டி அடித்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் 4 கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கும் காங்கிரஸ் அரசின் இம்முடிவை ஆதரிக்கும் கருணாநிதியையும் திமுகவையும் பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கருணாநிதியின் அறிவிப்பிலிருந்து மூன்று உண்மைகள் தெளிவாகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என ஒத்துக் கொண்டதற்கும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸ் தோற்றுப்போகும் என ஒத்துக் கொண்டதற்கும். பாஜக கருணாநிதியின் ஊழலை வெளிக்கொணர்ந்துவிடும் என அச்சப்பட்டதற்கும் பாஜக, கருணாநிதிக்கும் திமுகவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

English summary
"There is no denying ... the possibility of the United Progressive Alliance (UPA) government falling if the debate on FDI in retail is taken under Rule 184 of parliament as demanded by BJP and other parties," DMK chief Karunanidhi said. Stressing that the party was against FDI in retail, Karunanidhi said "communal parties" like the BJP would take advantage of the situations if the government collapsed. He said no opportunity should be given for a government of the BJP or any other government which has the BJP's backing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X