For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாமகவிலிருந்து தலித் மாவட்டச் செயலாளர் அதிரடி விலகல்

Google Oneindia Tamil News

வேலூர்: பாமகவில் இனியும் தலித்கள் இருக்க முடியாது என்ற நிலையை டாக்டர் ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளதால் கட்சியிலிருந்து விலகுவதாக வேலூர் மாவட்ட பாமக செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும் அறிவித்துள்ளனர்.

சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது அவர் இந்த முடிவை அறிவித்தார். அவர் கூறுகையில்,

நான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாமகவில் இருந்து வருகிறேன். அதில் ஆறு ஆண்டுகள் பாமக வேலூர் வட மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து கட்சியின் முழு நேரப் பணியாளராக செயலாற்றி வந்தேன்.

ராமதாஸ் பாமகவை உழைக்கும் மக்களுக்கான சமூக நீதியைப் பெற்றுத் தருவதற்காக கட்சியை நடத்துவதாகக் கூறி தன்னைத் தமிழர் தலைவராக அறிவித்துக்கொண்டதால் சாதி எல்லைகளைக் கடந்து அவரை நம்பி, அவர் தலைமையை ஏற்று கட்சியில் இணைந்து செயல்பட்டோம்.

ஆனால் தர்மபுரியில் சுமார் 400 தலித் வீடுகள் எரிக்கப்பட்ட வன்கொடுமைக்குப் பிறகு அவர் பேசுவதும் செயல்படுவதும் தலித் மக்களுக்கு எதிராக அமைந்துள்ளது. இது, பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருக்கிறது. தருமபுரியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவாக நிற்காமல், அம்மக்களுக்கு ஆறுதல் கூட சொல்ல முன்வராமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கி, அவர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ராமதாஸை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பாட்டாளி மக்களுக்காக கட்சி நடத்துவதாக கூறும் ராமதாஸ், இன்று தலித் மக்களை இழிவுப்படுத்தி நடந்திருக்கும் வன்கொடுமையை நியாயப்படுத்த முனைகிறார். மேலும், தலித் அல்லாத பிற சாதிகளின் கூட்டமைப்பினை அவர் ஒருங்கிணைத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அவருக்காக எங்களை அர்ப்பணம் செய்து சாதி ஒழிப்பிலும் சமூக நீதியிலும் நம்பிக்கை கொண்ட தலித்துகளை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சுழற்சி முறையில் தலித்தை முதல்வராக்குவேன் என்று சொன்னவர், தலித் மக்களுக்கான ஒரே சட்டப் பாதுகாப்பை அளிக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருக்கிறார். தருமபுரியில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் பக்கம் நின்று சமூக நீதிக்காகக் குரல் கொடுக்காமல் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் தங்கள் சாதி என்பதால் அவர்களுக்காக இன்று சாதிக் களத்திலே, உழைக்கும் தலித் மக்களுக்கு எதிராக நிற்பது... இவையெல்லாம் ராமதாஸ் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.

பல பொய்களைச் சொல்லி அவர் நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல் நாடறிந்த ஒன்றுதான். ஆனால் தற்போது அவர் எடுத்திருக்கும் தலித் மக்களுக்கு எதிரான போக்கு, தமிழர்களைச் சாதிகளாய்ப் பிரிப்பதும் அதுவும் ஒடுக்கப்பட்ட சாதிகளை அழிக்க நினைப்பதும் அதற்காகத் தன் கட்சியில் இருக்கும் தலித்துக்களைப் பற்றிக் கூட கவலைப்படாமல் இருப்பதும் முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானது. மனு தர்ம அடிப்படையிலானது.

அதனால் அவரின் நேர்மையின்மையையும் சாதி ஆதிக்க மனுதர்ம மனப்பான்மையையும் கண்டித்து இனியும் பாமகவில் தலித்துக்கள் இருப்பது நியாயம்இல்லை என்பது உணர்ந்து அக்கட்சியிலிருக்கும் தலித்துக்கள் ஆகிய நாங்கள் அதிலிருந்து விலகுகிறோம் என்றார் சாமுவேல் செல்லப்பாண்டியன்.

English summary
Vellore district secretary PMK Samuel Chellapandian, a dalit has resigned from the party in protest against party founder Dr Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X