For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனிமொழி பற்றிய பேச்சால் சர்ச்சை: சட்டசபையில் திமுகவினர் கொந்தளிப்பு- கூண்டோடு வெளியேற்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

Assembly
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி பற்றிய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபையில் இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடந்தது. அதன் விவரம்,

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு இலங்கை அரசிடம் நஷ்டஈடு பெறும் வகையில் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் கடந்த முறை தீர்மானம் கொண்டு வந்தபோது, மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி அந்த தீர்மானத்தின் கருத்துக்களை வலுவிழக்கச் செய்து ஆதரித்தது.

இலங்கை தமிழர்களுக்கு எந்த அதிகார பகிர்வும் தரமாட்டேன் என்று ராஜபக்சே ஆணவமாக பேசி இருக்கிறார். ஆனால் இந்தியா வரும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அது இலங்கை தமிழர்களின் ரத்தத்தை குறிக்கிறது. காவிரி டெல்டா விவசாயிகள் கண்ணீர் வடிப்பதற்கு காரணம் காங்கிரஸ்தான்.

ரங்கராஜன் (காங்கிரஸ்): இலங்கை தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி பிரதமர் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு அதை ஏற்கவில்லை.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: இலங்கை தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே செயல்பட்டதில் காங்கிரசுக்கு பங்கு உண்டு. அதற்கு திமுகவும் உதவுகிறது. தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியும், நேரில் பேசியும் அதை மத்திய அரசு இன்னும் தீர்க்கவில்லை. கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்தவர் பேசும்போது, சில பேராசை பிடித்த மீனவர்களால்தான் பிரச்சனை ஏற்படுகிறது என்றார். இது இப்போதும் சட்டமன்ற குறிப்பில் உள்ளது.

(அப்போது திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று பதிலளிக்க அனுமதி கேட்டனர்)

செங்கோட்டையன் (அதிமுக): முன்னாள் முதல்வர் 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் பிரச்சனை தீர்ந்து விட்டதாக வாபஸ் பெற்றார். இதையடுத்து அங்கு குண்டு மழை பொழிந்து 80,000 பேரை கொன்று குவித்தனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

(அப்போது திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று பதிலளிக்க அனுமதி தருமாறு கூச்சலிட்டனர்)

அமைச்சர் கே.பி.முனுசாமி: எப்போதும் எல்லா காலத்திலும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. ராஜபக்சேவிடம் விருந்து சாப்பிட்டு பரிசு பெற்றவர்களில் இவருடைய தலைவர் மகள் கனிமொழியும் உண்டு.

சக்கரபாணி (திமுக): 1983ம் ஆண்டில் இருந்தே இலங்கை தமிழர்களுக்காக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இலங்கை தமிழர்களை ஆதரித்ததால் திமுக ஆட்சியை இழந்தது. ஆனால், பிரபாகரன் குற்றவாளி- அவரை கைது செய்ய வேண்டும் என்று சொன்னது நீங்கள், போர் நடந்தால் அப்பாவி மக்கள் இறப்பார் என்று சொன்னது நீங்கள்.

அமைச்சர் கே.பி.முனுசாமி:
புரட்சித்தலைவி எப்போதும் தீவிரவாதத்தை ஏற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை. இலங்கை தமிழர்களை எப்போதும் ஆதரித்து வருகிறார். ஆனால் நீங்கள் லங்கை தமிழர் பிரச்சனையில் ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலையை எடுக்கிறீர்கள். நீங்கள் ஆட்சியில் இருந்த போது இந்தியா சார்பில் ஒரு எம்.பிக்கள் குழு இலங்கை சென்றது. அதில் கனிமொழியை இடம் பெற வைத்து 3ம் தர அரசியல் நடத்தியவர் உங்கள் தலைவர் (கருணாநிதி)

இந்தப் பேச்சால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏக்கள் அமைச்சரை நோக்கி ஆவேசத்துடன் வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு அட்டது.

இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.

காங்கிரஸ் வெளிநடப்பு

இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டதை கண்டித்தும், பதில் சொல்ல தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததைக் கண்டித்தும் அந்தக் கட்சி எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கூறுகையில்,
இலங்கை பிரச்சனை தொடர்பாக வேண்டும் என்றே குற்றச்சாட்டுகளை திமுக மீது சுமத்துகிறார்கள். அதற்கு மறுத்து பேச எங்களுக்கு வாய்ப்பு தரவில்லை. திமுக தலைவரை 3ம் தர அரசியல்வாதி என்று மிகவும் கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள். இதைக்கேட்டால் பேப்பர் கட்டுகளை தூக்கி வீசினார்கள். உண்மையை சொல்ல வாய்ப்பு அளிக்காமல் வெளியேற்றினார்கள் என்றார்.

திமுகவினர் வெளியேற்றப்பட்ட போதும் வெளியே வந்த பின்பும் கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

பாமக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு:

இந் நிலையில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைவதற்கு மதுரை மாவட்ட கலெக்டர் விதித்த தடை குறித்து பேச முயன்ற பாமக உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாததால், பாமக எம்எல்ஏக்களும் இன்று வெளிநடப்பு செய்தனர்.

English summary
DMK MLAs were evicted from the Tamil Nadu assembly today also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X