For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகளின் விருப்பம் அவசியம்: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Jayallalitha
சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, விவசாய நிலங்களினூடே குழாய்கள் பதிக்கும் பணியை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது­:

மத்திய அரசின் கெய்ல் நிறுவனம், கொச்சி - சேலம் - பெங்களூர் வரை 312 கிலோமீட்டர் தூரத்திற்கு தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, விவசாய நிலங்களினூடே குழாய்கள் பதிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், விவசாயிகளின் கருத்துகளை முதலில் கேட்டறிவது அவசியம் என்றும் நான் எடுத்துக் கூறினேன்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பின் அடிப்படையில், அரசு தலைமைச் செயலாளரால் 8.3.2013, 9.3.2013 மற்றும் 10.3.2013 ஆகிய தினங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இந்தக் கூட்டம் நடத்தப்படுவது தொடர்பான விவரங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படும். இது குறித்த விவரம் தொடர்புடைய விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்படும்.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் "கெயில்" திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எவ்வித அச்சமுமின்றி தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகளை கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்த பின், இது தொடர்பாக மீண்டும் எனது தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தக்க முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Willingness of farmers is must for laying pipelines for GAIL project, said CM Jayalalitha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X